தொழிற்சங்க வழக்கை தன் சொந்த செலவில் பேசியவரே தொண்டமான்! | தினகரன் வாரமஞ்சரி

தொழிற்சங்க வழக்கை தன் சொந்த செலவில் பேசியவரே தொண்டமான்!

சௌமியமூர்த்தி தொண்டமானின் உரிய பங்களிப்பே தனது கட்சியை ​ெவற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றதை கருத்திற்கொண்டு ஜே.ஆர். தொண்டமானை அவரது அமைச்சரவையில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க இ.தொ.காங்கிரஸின் நிர்வாக சபை கூட்டத்தை கூட்டி நிர்வாக சபையின் ஒப்புதலோடு அமைச்சரவையில் இணைய தீர்மானித்தார்.

அதன் பின்பு 1978ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் இனவிகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் பாராளுமன்றத்தில் இந்தய வம்சாவளி தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வழியேற்பட்டதோடு உள்ளூராட்சி சபைகளிலும், மாகாண சபைகளிலும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வழியேற்பட்டது.

ஒரு காலத்தில் பாராளுமன்றத்தில் இந்த நாட்டின் மிக ஒடுக்கப்பட்ட சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சௌமியமூர்த்தி தொண்டமான் சாதித்தவை ஏராளம். சகல தரப்பினருடனும் நட்புறவுடன் பழகிய உன்னத தலைவர். தனது தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு மாத்திரமன்றி ஏனைய தொழிற்சங்கங்களை சேர்ந்த இலங்கை தேசிய தோட்டத் தொழிற்சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் மத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராகவும் இருந்த வீரபுத்திரன் புத்திரசிகாமணிக்கு மத்திய மாகாண சபையின் கல்வி அமைச்சர் பதவி வழங்கியதன்மூலம் எதிர் தரப்பினரையும் அரவணைத்து செயல்பட்டவர். ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் தலைவர் அப்துல் அஸீஸ், பொதுச் செயலாளர் வி.பி. கணேசன் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியேறியபோது வி.பி. கணேசனை இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைத்து கொண்டவர்.

மலையக இளைஞர் முன்னணியின் ஸ்தாபக தலைவராகவும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்டவராகவும் இருந்த இரா. சிவலிங்கத்தை தன்னுடன் இணைந்து செயல்பட வைத்தவர். எந்த ஒரு கருத்தையும் எவருக்கும் அஞ்சாது சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவற்றை துணிச்சலுடன் கூறியவர் சௌமியமூர்த்தி தொண்டமான். விடுதலைப் புலிகளுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஆள (ஐந்து வருடங்களுக்கு) அனுமதிக்க வேண்டுமென பெரும்பான்மை தலைவர்கள் முன்னிலையில் கூறியவர் அவர்.

ஏனைய தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும். ஆனால், செளமியமூர்த்தி தொண்டமானின் தலைமையின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்தபோது இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடிப்படையில் அங்கத்தவர்களல்லாதவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டன.

முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபமும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அமைக்கப்பட்டன. அவை ஆட்சிகள் மாறியபோதிலும் பெயர் மாற்றப்படவில்லை.

எனவே, இந்த நாட்டில் இந்திய வம்சாவளி தமிழர்களின் உயர்வுக்காக இதுவரை எந்த ஒரு தலைவரும் செயல்படாதவிதத்தில் செயற்பட்ட அதி உத்தம தலைவராம் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவப்படத்தை அகற்றியும் ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் என்பதை பூபல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என்று மாற்றியதை கைவிட்டு மீண்டும் சௌமியமூர்த்தி தொண்டாமனின் உருவப்படத்தை வைப்பதோடு முன்பிருந்தது போன்றே ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் என்று பெயரிடும்படி இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களில் அனைத்து தரப்பினரின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இதை செய்யத் தவறினால் மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் அரசியல் ரீதியாக பாதிப்படைவது வெற்றிடைமலை.

எதிர்கட்சியினரை அவமதிப்பதை விடுத்து அமைதியாக சகல தரப்பினரையும் அவரணைத்து செயற்படுவதன் மூலமே மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாக இடத்தை பிடிக்க முடியும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, மலைக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவரான கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் சௌமியமூர்த்தி தொண்டமானின் பிறந்த தினத்தில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து தனது நன்றியுணர்வை தனது கட்சியினரின் எதிர்ப்பையும் புறக்கணித்து பறைசாற்றினார். அவரின் புகழ் மேலும் உயர்வடைந்துள்ளது.

(சென்றவார தொடர்...)

இவதன்

Comments