இந்திய மண்ணில் சாதிக்குமா இலங்கை அணி? | தினகரன் வாரமஞ்சரி

இந்திய மண்ணில் சாதிக்குமா இலங்கை அணி?

மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 08ஆம் திகதி பயணமானது. 3 டெஸ்ட், 3 சர்வதேச ஒருநாள், 3 20க்கு 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இலங்கை அணி மோதவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ம் திகதி வியாழக்கிழமை கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், பாகிஸ்தானிலும் சுற்றுபயணம் மேற்கொண்டு மூவகைப் தொடர்களிலும் விளையாடிய இலங்கை அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து. குறுகியகால இடைவெளியில் பலம்வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கின்றது. சுமார் எட்டு வருடங்களின் பின் இந்திய மண்ணில் மோதவுள்ள இலங்கை அணி கடைசியாக குமார் சங்கக்கார தலைமையில் 2009ம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2− 0 என்ற ரீதியில் இழந்திருந்தது. அத்தொடரில் விளையாடிய அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் ரங்கன ஹேரத்தைத் தவிர மறறைய அனைவரும் இந்திய மண்ணில் முதல்முறையாக களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி கடந்த காலங்களில் தொடர்ந்து தன் சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணிகளான தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, மற்றும் பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சகலதுறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு இலகுவாக வெற்றி பெற்றது.

இத் தொடர் வெற்றிகளுக்கு தலைவர் கோஹ்லி உட்பட இந்திய அணியின் அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வந்துள்ளனர். அவ்வணியின் அனுபவீரர்கள் மட்டுமல்ல அண்மைக் காலமாக அறிமுகமான இளம் வீரர்கள் கூட சதம், இரட்டைச் சதம், முற்சதம் என தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்படுகின்றனர். இந்திய அணி கடந்த காலங்களில் தாம் விளையாடிய அநேகமான டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் ஓரிரு துடுப்பாட்ட வீரர்கள் சதம் அல்லது இரட்டை சதங்கள் குவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அவ் அணி முதல் இன்னிங்சில் இலகுவாக 500, 600 ஓட்டங்களைக் கடந்து பெற்றுள்ளமை அவ்வணியின் தொடர் வெற்றிகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளது.

மேலும் பின்வரிசையில் வரும் பந்து விச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வின் ஆகியோரும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து வருகின்றனர். கடைசியாக இவ்வருட ஆரம்பத்தில் இந்திய அணி தன் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் மோதியது.

அத் தொடரில் கான்பூரில் நடந்த முதல் போட்டியில் அவ்வணி தோல்வியுற்றது. கடந்த மூன்று வருடங்களாக அவ்வணி எந்தவித டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியுறாத சாதனையையும் கொண்டுள்ளது. விராட் கோஹ்லியின் தலைமையிலான இந்திய அணி துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் சம பலத்துடன் விளங்குகின்றது.

எனவே இலங்கை பந்து வீச்சாளர்கள் இத்தொடரில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுப்பது திண்ணம். சுழற் பந்துகளுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்திப் யாதவ் ஆகியோர் சாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜுலையில் இலங்கை மண்ணில் மோதிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-−0 என்ற ரீதியில் இலகுவாக வெற்றி பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர் டெஸ்ட் தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை அணிக்கு கடந்த மாதம் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் வெற்றி சற்று தெம்பூட்டியுள்ளது.

தலைவர் சந்திமால், திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் பூராகவும் சிறப்பாக ஓட்டங்கள் குவித்திருந்தனர் அவர்கள் இத் தொடரிலும் பிரகாசித்தால் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமையும். இத் தொடருக்கு காயத்திலிருந்து மீண்டுள்ள சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துக்கு மேலும் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். வழமையாக இலங்கை அணிக்கு கைகொடுக்கும் ரங்கன ஹேரத் இந்திய ஆடுகளங்களிலும் சிறப்பாக பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவருக்கு டில்ருவன் பெரேராவும் கைகொடுத்தால் இந்திய மண்ணில் சாதிக்கலாம். இப்போதைய நிலையில் இந்திய அணியுடனான போட்டிகளிலும் பெரும்பாலும் இவ்விருவரை நம்பியே இலங்கை அணி களமிறங்கும்.

சுமார் 35 வருடகால இந்திய- இலங்கை டெஸ்ட் வரலாற்றில் இரு அணிகளுக்குமிடையில் 16 தொடர்களில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெறுள்ளது. இதில் 19 போட்டிகளில் இந்திய அணியும், 7 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 10 தொடர்களிலும் இலங்கை அணி 3 தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 தொடர்கள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையில் 1982ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. அதன் பின் 1985ம் ஆண்டு இலங்கை மண்ணில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதன்முதலாக மோதியது. 85-.09-.06ம் திகதி சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 149 ஓட்டங்களால் வெற்றி பெற்று டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. 1-−0 என்ற கணக்கில் இத் தொடரையும் கைப்பற்றிய இலங்கை அணி டெஸ்ட் வரலாற்றில் முதலாவது டெஸ்ட் தொடர்வெற்றியையும் இந்திய அணிக்கு எதிராகவே பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான மோசமான தொடர் தோல்வியாக 1993-−94ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் இன்னிங்ஸினால் தோல்வியுற்ற இலங்கை அணி தொடரை 3-−0 என்ற ரீதியில் இழந்ததே மோசமான தோல்வியாகப் பதிவாகியுள்ளது.

ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டமாக இலங்கை அணி 1997ம் அண்டு ஆர். பிரேமதாச மைதானத்தில் உலகசாதனை ஓட்டங்களாகப் பெற்ற 952 ஓட்டங்களும், இந்தியா அணி 2009ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற போட்டியொன்றில் பெற்ற 726 ஓட்டங்களுமே பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக இலங்கை 1991ஆம் ஆண்டு சண்டிகாரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததும் இந்திய அணி 2008ம் ஆண்டு கொழும்பு எஸ். எஸ். ஸி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 2வது இன்னிங்ஸில் 138 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுமே பதிவாகியுள்ளது.

இலங்கை- இந்திய டெஸ்ட் வரலாறறில் இலங்கை அணி இதுவரை இந்திய மண்ணில் டெஸ்டி போட்டியொன்றில் வென்றதில்லை. எனவே சந்திமால் தலைமையிலும் இளம் அணி இத்தொடரிலாவது இந்திய அணியை அதன் சொந்தமண்ணில் வென்று சாதிக்குமா?

எம்.எஸ்.எம். ஹில்மி 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.