உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களின் பணிப்பாளர் ஏ.எம்.யாப்பா ஓய்வு | தினகரன் வாரமஞ்சரி

உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களின் பணிப்பாளர் ஏ.எம்.யாப்பா ஓய்வு

உதைபந்தாட்டத் துறையில் விளையாட்டு வீரர்,பயிற்றுவிப்பாளர்,மத்தியஸ்தர் என தன்னை வளர்த்துக் கொண்ட ஏ.எம்.யாப்பா இலங்கை இராணுவத்தில் கடமையாற்றி பின்னர் சிலாபத்தில் அமைந்துள்ள ஆனந்தா கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக ஆசிரியர் தொழிலில் திறமைகளை வெளிக்காட்டி தற்பொழுது இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தில் உதைப்பந்தாட்ட மத்தியஸ்தர் பணிப்பாளர் பதவியை வகித்து வருகின்றார்.

உதைபந்தாட்டத் துறையிலே அதிகமான வர்களுக்குநன்கு பரிச்சாயமாகத் திகழ்கின்ற இவர் இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தில் த னது உதைபந்தாட்ட மத்தியஸ்தர் பணிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருப்பது இலங்கையின் உதைப்பந்தாட்டத் துறையில் ஏற்படவுள்ள பாரியவொரு இழப்பாகக் கருதப்படுகின்றது. முன்னர் 1979ம் சிலோன் உதைபந்தாட்டச் சங்கம் என செயற்பட்டு வந்த அமைப்போடு தரம் - III உதைப்பந்தாட்ட மத்தியஸ்தராக தன்னை இணைத்துக்கொண்டார். 1986ம் ஆண்டு சர்வதேச உதைபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் தன்னை ஓர் சர்வதேசமத்தியஸ்த்தராகதரம் உயர்த்திக் கொண்டார். 1986 முதல் 2002வரையான பதினாறு (16) வருடங்கள் சர்வதேச மத்தியஸ்தராகக் கடமையாற்றியுள்ளார்.

1990ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதிபெறும் ஆசிய கண்ட அணியைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியுள்ளார். இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டி யொன்றில் மத்தியஸ்த்தம் வகித்த முதலாவது இலங்கையர் என்ற பெருமைக்கு உரியவராவார். 1990, 1994, 1998 மற்றும் 2002 ஆகிய வருடங்களில் உலகக் கிண்ணத்துக்கான ஆசிய அணியைத் தெரிவு செய்யும் போட்டிகளின் பிரதான நடுவராகக் கடமையாற்றியுள்ளார். தொடர்ச்சியாக நான்கு தடவைகள் இவ்வாறான போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றக் கிடைப்பதானதுமிகவும் அரிதானசந்தர்ப்பமாகும்.இவர் 164 சர்வதேச போட்டிகளிலும் தேசிய ரீதியாக 3000 இற்கு அதிகமான போட்டிகளும் நடுவராகக் கடமையாற்றியுள்ளார்.

ஏறத்தாழ 22 வருடங்கள் இலங்கை உதைப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவராக கடமையாற்றிய பேரின்பநாயகத்தின் பின்னர் 1994ம் ஆண்டு இவர் அப்பதவியை பொறுப்பேற்று 2002ம் ஆண்டு வரை வகித்துவந்தார். 2004, 2005 மற்றும் 2006ம் ஆண்டு காலப்பகுதிகளில் உதைப்பந்தாட்ட மத்தியஸ்தர் குழுவின் தலைவராக கடமையாற்றியுள்ளார். அத்துடன் இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிறைவேற்றுச் சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

தரமான மத்தியஸ்தர்களை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உருவாக்க வேண்டும் எனும் எண்ணக்கருவில் இலங்கையின் பலபாகங்களிலும் மத்தியஸ்தர்களுக்கான பயிற்சி நெறிகளையும் பரீட்சைகளையும் நடாத்தி மத்தியஸ்தர்களை உருவாக்கியுள்ளார்.சர்வதேச மத்தியஸ்தர் தினம் எனும் பெயரில் இலங்கையின் அனைத்து லீக்கு களிலும் இருந்து மத்தியஸ்தர் குழுக்களை கொழும்பில் ஒன்றிணையவைத்து அவர்களுக்கிடையே பல்வேறு வகையான போட்டிகளை நடாத்தும் நிகழ்வானது இவரது எண்ணக்கருவில் உருவான ஒன்றாகும்.

1998ம் ஆண்டு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த டெட்டமாக்ராமா அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.

1990ம் ஆண்டிலிருந்து சிலாபம் ஆனந்தா கல்லூரியின் உதைப்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டுள்ளதோடு தேசிய ரீதியாக பலவெற்றிகளையும் அப்பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். 1996 முதல் 2003 வரை சிலாபம் உதைப்பந்தாட்ட லீக் செயலாளராக கடமையாற்றி சிறந்த ஒரு லீக்காக வழிநடாத்திச் சென்றவராவார்.

2008ம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தில் உதைபந்தாட்ட மத்தியஸ்தர் பணிப்பாளர் பதவியை வகித்துவரும் இவர் 2017 ஒக்டோபர் மாத் 30ம் திகதி முதல் அப்பதவியிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார். இவரது ஓய்வு நிச்சயமாக உதைப்பந்தாட்டத்துறையில் பாரிய ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

முருகையா வடிவேல்

Comments