சரியாகப் புரிந்துகொள்ளப்படாத சம்பந்தனின் அரசியல் சாணக்கியம் | தினகரன் வாரமஞ்சரி

சரியாகப் புரிந்துகொள்ளப்படாத சம்பந்தனின் அரசியல் சாணக்கியம்

தேர்தல் காலங்களில் ஒன்றும் பின்னாளில் மற்றொன்றும் கூறுவதால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளவுறுகிறது என்று அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களே சொல்கிறார்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவற்றைப் புறந்தள்ளிக் கூட்டமைப்பின் தலைமை செயல்படுவதே இந்தப் பிளவுகளுக்குக் காரணம் என்கிறார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாகவே முதலமைச்சர் இந்த வியாக்கியானத்தைச் சொல்லியிருக்கிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குப் பதிலாக ஒரு மாற்றுத் தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு முதலமைச்சரும் முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரனும் வந்துள்ளதையே இஃது எடுத்துக்காட்டுகிறது.

ஈபிஆர்எல்எப் தற்போது எடுத்திருக்கின்ற இந்த முடிவு குறித்துத் தமிழர் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு புறம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இசைந்து செல்வது தமிழ் மக்களை வெறுப்படையச் செய்திருக்கிறது என்றும் மறுபுறம் வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தாழியை உடைக்கிறார் என்றும் கருத்து நிலவுகிறது.

அதேநேரத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எங்ஙனமேனும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்படுத்திவிட வேண்டும் என்ற ஒரு நீண்டநாள் கனவு பேரினவாதிகளிடம் இருப்பதைப்போலவே சில தமிழ்த் தரப்பினரிடமும் இருந்து வருகிறது. இன்று அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் பேரினவாதம் வெற்றிக் கனியைப் பற்றிக்ெகாள்ளப்போகும் சந்தர்ப்பத்திற்குச் சில தமிழ்த் தரப்பினரும் வாய்ப்பினை ஏற்படுத்திக்ெகாடுக்கிறார்களோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் கூட்டமைப்பு மீதான வெறுப்பு ஒருபுறமிருக்க, அதன் தலைவர் ஒரு மிதவாதச் சிந்தனையாளர் என்ற கருத்தியலும் இல்லாமல் இல்லை. உண்மையில் சொல்வதானால், திரு.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டபோது சிங்கள மக்கள் மத்தியில் நிலவிய எதிர்ப்பலை தற்போது இல்லையென்றே கூறலாம். இதற்குக் காரணம் கடந்த அறுபது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட தமிழர் அரசியல் செல்நெறியை சம்பந்தன் மாற்றியமைத்துப் புதிய வழியில் முன்னெடுப்பதுதான்.

அதனால்தான், சம்பந்தன் காலத்திலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண வேண்டும் என்று சிங்கள அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வலியுறுத்தலானது அவர் சிங்கள மக்களுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக்ெகாண்டுவிட்டார், தமிழர் நலனை உதாசீனப்படுத்திவிட்டார். ஒற்யைாட்சிக்குள் தீர்வு காண இணங்கிவிட்டார். சம ஷ்டியைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்கார், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சுயநலனுக்காகச் சம்பந்தனையும் அரசின் மோச வலையில் சிக்க வைத்துவிட்டார் என்றெல்லாம் சிந்தனையைக் கிளறிவிட்டிருக்கிறது தமிழ் மக்களுக்கு.

திரு.சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தை ஆய்ந்தறிந்து ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தால், அவரைப்போன்றதொரு மிதவாதத் தலைவர் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் கிடைக்கமாட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ 1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பிற்குப் பின்னர் இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து செல்லும் போக்கினைக் கொண்டிருக்கவில்லை. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்ைகக் கொண்டிருந்தாலும், பிரஜாவுரிமை சட்டத்திற்குப் பின்னர் அது படிப்படியாகச் செல்வாக்கினை இழந்துவிட்டது. அதற்குப் பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வீட்டுச் சின்னத்திற்கும் உதயசூரியனுக்குமே தமிழ் மக்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள். 2002ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அந்தக் கட்சிக்ேக தமது ஆதரவினைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஆயுதக்குழுவாகச் செயற்பட்டுப் பின்னர் அரசியல் நீரோட்டத்தில் கலந்த கட்சிகளுக்குத் தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க தொகையினரே வாக்களித்துள்ளனர். ஆயுதக் கறை படியாத ஒர் அரசியல் தலைமையென்றால், அது சம்பந்தனை முதன்மையாகக் கொண்ட தலைமையையே மக்கள் ஏற்றுக்ெகாண்டிருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் பார்க்கின்றபோது வரலாற்றில் பெரும்பான்மை அரசாங்கம் முன்னெடுக்கும் பிழையான; தவறான அரசியல் நகர்வுகளுக்கு எதிராகவே சம்பந்தனின் தலைமை செயற்பட்டு வந்திருக்கின்றது. இன்று சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஓரளவுக்கு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவை தமிழர் தரப்பிற்கு இருப்பதாகக் கூறுகிறார் சம்பந்தன்.

ஏன்?

இலங்கையில் எதிர்காலத்தில் இனப்பிரச்சினை என்ற ஒன்றை நீடித்து நிலைநிறுத்திச் சென்று அரசியல் இலாபம் தேடும் நிலையை எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் ஏற்படுத்தமாட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் தலைமைகள் உறுதி வழங்கியிருக்கின்றன. அதற்கான அர்ப்பணிப்பாக அவர்கள் புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகம் செய்ய பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளனர். இதனைக் குழப்புவதற்குப் பேரினவாதிகள் கங்கணம் கட்டிக்ெகாண்டு உள்ளனர். வரலாற்றில் ஒன்றுபட்டுள்ள இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கின்றது. தீர்வொன்றைப் பெறுவதற்கு இதுவே ஒரு பொன்னான இறுதிச் சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்ெகாள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இந்த இரண்டு கட்சிகளுக்கு வந்தாலும் வரட்டும் ஆனால், தமிழர் தரப்புக்கு வந்துவிடக் கூடாது. இதுதான் சம்பந்தனின் அரசியல் சாணக்கியம்.

இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கினால், இது இந்தக் காலகட்டத்திலேயே நடக்க வேண்டும்! எந்தத் தீர்வினையும் வழங்காது என்ற உறுதியான நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்வதற்கும் இதுவே சரியான காலகட்டம். இதைத் தவிறவிட்டுவிட்டால், இரண்டையும் பெற முடியாது.

தமிழர்களைப் பொறுத்தவரை இந்தக் காலகட்டத்தில் நல்லாட்சி அரசு தீர்வை வழங்கினாலும் ஒன்றுதான் வழங்காவிட்டாலும் ஒன்றுதான்! அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்கிறார் திரு.சம்பந்தன். அதற்காகத்தான் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு இந்த அரசாங்கத்துடன் நெகிழ்வுப்போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் அவர்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுப் பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்படப்போகிறது என்பதை நன்கு அறிந்திருந்தும், முன்பெல்லாம், எடுத்தவுடனே வாக்ெகடுப்பு நடத்து என்று சபையில் கோரிக்ைக விடுப்பவர் சம்பந்தன். ஆனால், தற்போது எவரும் எதிர்பாராதவிதமாகத் தமது ஆதரவினைத் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார் என்றால் அதன் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள வேண்டியர்கள் முதலில் தமிழ் மக்கள் அடுத்தது பெரும்பான்மை அரசியல்வாதிகள்.

வெளியில் இருந்து எதிர்த்தது ஒரு காலம். இனி நாம் உள்ளே இருந்துதான் உரிமைகளைப் பெற வேண்டும் என்று சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனைக் கருத்திற்கொள்ள வேண்டிய நிலையில்தான் அரசாங்கம் இருக்கின்றது. உங்களுக்கு எல்லா ஒத்துழைப்பையும் தருகிறோம். சமஷ்டியும் வேண்டாம். பௌத்தத்தையும் வைத்துக்ெகாள்ளுங்கள். எங்களுக்கு என்ன தருவீர்கள்? என்பதுதான் சம்பந்தனின் கேள்வி. இந்தக் கேள்விக்கு ஒரு நியாயமான பதிலை வழங்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்பதை இன்னமும் தமிழர் தரப்பு நம்புவதாக இல்லை. அதுதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான விமர்சனத்திற்குக் காரணமாகியிருக்கிறது.

அதாவது, இலங்கை அரசாங்கம் சமஷ்டியையும் தமிழ் மக்கள் கோரும் எல்லாவற்றையும் வழங்கத் தயாராகத்தான் இருக்கிறது, திரு.சம்பந்தன்தான் வேண்டாம் என்கிறார் என்றவாறுதான் அவர் மீது சில தரப்பினர் குறைகூறி வருகின்றனர். பெரும்பான்மை அரசாங்கங்கள் வழங்குமா, இல்லையா என்பதைப் பல ஆண்டுகால அனுபவத்தில் அறிந்துகொண்டிருப்பவர் சம்பந்தன்.

 தீர்வு கிடைக்குமா, கிடைக்காதா என்பதும் அவருக்குத் தெரியும். இந்த இறுக்கமான நிலையைத் தகர்த்தெறிய வேண்டுமானால். தமிழ்க் கூட்டமைப்பை சிதைத்துச் சின்னபின்னமாக்க வேண்டும் என்பது பேரினவாதத்தின் குறிக்ேகாள். அதற்கான திட்டத்தில் தமிழர்களே பலிக்கடாவாக வேண்டுமா? கூட்டமைப்பைப் பிளவுபடுத்தினால் விளைவு இதுவாகத்தான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் நலன்களைக் காக்கின்ற அமைப்பேயன்றி அதன் பங்காளிக்கட்சிகளின் நலனையும் தேவைகளையும் திருப்திப்படுத்த வேண்டிய அமைப்பு அல்ல என்கின்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது குறித்தும் கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பது மக்கள் தரப்புச் சிந்தனை.

இறுதியாக, இந்தத் தடவையும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்படாவிட்டால், "நாங்கள் ஆயுதமும் ஏந்தமாட்டோம், எம்மை ஆளவும் விடமாட்டோம்" என்ற நிலைக்ேக அவர்களை இட்டுச் செல்ல வழிவகுக்கும் என்ற சம்பந்தனின் கூற்றை மெய்ப்பிப்பதாகவே அமையும்.

விசு கருணாநிதி 

Comments