வடக்கில் தேர்தல் வேட்டை ஆரம்பம்! | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் தேர்தல் வேட்டை ஆரம்பம்!

மரணச் சடங்கொன்றிற்காக ஊருக்குப் போயிருந்தேன். சந்தியில் இறங்கியபோது சிறியதொரு கூட்டமாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டுகொண்டு, நெருங்கி வந்தார் மகாலிங்கம்.

“நல்ல நேரத்தில வந்திருக்கிறாய் தம்பி. வீட்டில ஆளை இருக்க விடுறாங்களில்லை. ஆள் மாறி ஆளாக வந்து ஒரே தொல்லையாகக் கிடக்கு” என்றார்.

எனக்குச் சட்டென்று புரியவில்லை. “என்ன ஏதும் பிரச்சினையா?” என்று கேட்டேன்.

”வேற என்ன, தேர்தல் வரப்போகுதெல்லோ...! அதுக்குத் தங்கட பக்கமாக நிண்டு கேட்கட்டாம். எனக்கு உது தோதுப்படாது. விருப்பமுமில்லை. வீட்டிலயும் விரும்ப மாட்டினம் எண்டு சொன்னன். ஆனால், விடுகிறான்களில்லை. ஆள் மாறி ஆளாக வந்து ஒரே கரைச்சலாக்கிடக்கு. என்னை நிற்கட்டாம். இல்லாட்டிக்கு பொருத்தமான ஒரு ஆளைத் தாங்கோ எண்டு கேட்கிறாங்கள்.... இதென்ன கடையில வாங்கிக் குடுக்கிற சாமானோ...! தேர்தல் தம்பி. அதுக்குத் தோதான ஆளையெல்லோ போடவேணும். உள்ளூராட்சித் தேர்தல் எண்டால், ஊருக்கு என்ன தேவையெண்டு பாத்து வேலை செய்யக் கூடிய ஆக்களையெல்லோ நியமிக்க வேணும்?....ஆனால், இதை ஆரும் விளங்கிற மாதிரித் தெரியேல்ல” என்றார் மகாலிங்கம்.

“உங்களிட்ட யார் வந்தது? எந்தத் தரப்பு?”

“எல்லாரும்தான். இதுக்கிடையில மூண்டு தரப்பு வந்திட்டு. இனி ஆரெல்லாம் வாறாங்களோ...” என்றார்.

“சரி, நீங்கள் யாரை ஆதரிக்கலாம் எண்டு யோசிக்கிறியள்?” என்றேன்.

“எனக்கு இந்தக் கட்சிகளில நம்பிக்கையில்லாமப் போச்சு. ஒண்டுமே சுத்தமில்லை. இப்ப பாருங்கோவன், தங்களுக்குத் தேவையெண்டோடன ஊரூராகத் தேடி, ஆள் பிடிக்க அலையிறாங்கள். இப்பிடி அலையிற கட்சிகளிட்ட என்னெண்டு நேர்மையை எதிர்பார்க்கேலும்? இதெல்லாம் எப்பிடி ஒழுங்காகச் சனங்களுக்கு வேலை செய்யும்? இதுக்குள்ள தலையை நுழைக்கிறதுக்கும் ஆட்கள் இருக்கிறான்கள். அவங்கள் நுழைஞ்சிட்டாங்கள் எண்டால், பிறகு அரசியல் உருப்படுமோ......?“ என்று கேட்டார் மகாலிங்கம்.

“உங்களைப் போன்ற ஆட்களெல்லாம் அரசியலே வேண்டாம் எண்டு ஒதுங்கி நிண்டால், அந்த வெற்றிடத்துக்கு கண்டவன் நிண்டவனெல்லாம்தானே நுழைவான். பிறகு, கட்சிகளையோ அரசியலையோ குறைசொல்லிப் பிரயோசனமில்லை. அதைவிட நீங்களே பொருத்தமான தரப்போட நில்லுங்கோவன். உங்களைப்போல நேர்மையா வேலை செய்யக்கூடிய ஆட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கோ” என்றேன்.

“நீ சொல்லிறது ஞாயமா இருக்கலாம். ஆனால், இந்தக் கட்சி அரசியல்ல அதுக்கெல்லாம் இடமில்லை. இப்ப பாருங்கோவன், தேர்தல் எண்டு வந்தவுடன எங்கயெல்லாம் திரியிறாங்கள் எண்டு. ஏதோ வேட்டை நாய்கள் அலையிற மாதிரி ஓடித்திரியிறாங்கள். இவ்வளவு நாளும் இந்தக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருந்ததுகள்? ஒவ்வொரு ஊரிலயும் ஒழுங்கா நிண்டு வேலை செய்திருந்தால், இப்படி ஆட்பிடிக்க அலையவேண்டி வந்திருக்குமோ? அதில்ல ஆகப் பெரிய வேடிக்கை என்னெண்டால், இந்த முறைத் தேர்தலுக்குப் பொம்பிளையளும் போட்டிக்கு நிக்கோணுமாம். அதால, பொம்பிளை வேட்டைக்குமெல்லே திரியிறாங்கள்... இதில என்ன நாசமெல்லாம் நடக்கப்போகுதோ......ஈஸ்வரா!”

எனக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஆனால், மகாலிங்கம் சொல்வதிலும் அச்சமடைவதிலும் தவறில்லை என்றே பட்டது. ஏனென்றால், தேர்தலில் வாக்குச் சேகரிப்பிற்காக யாரிடமும் ஆதரவைக் கோரலாம். ஆனால், வேட்பாளரை நிறுத்துவதற்கு அப்படிக் கண்டபாட்டுக்கு ஆள் தேட முடியாது. கொள்கை, வேலைத்திட்டம், ஆற்றல், துறைசார் அறிவு, சனங்களுடனான உறவு, சமூக அக்கறை என்ற அடிப்படைகளைப் பற்றிச் சிந்திக்காமல், இவையில்லாமல் வேட்பாளர்களைத் தேடி நிறுத்துவது என்பது பாரதூரமான எதிர்விளைவுகளையே உண்டாக்கும். ஆனால், கட்சிகளுக்கு இதில் ஒரு பொறுப்பான சிந்தனையும் கிடையாது. மறுவளத்தில் மகாலிங்கம் போன்றவர்கள் தங்களுடைய வாழ்க்கை ஒழுங்குக்கூடாக, 50, 60 ஆண்டுகளாக சேகரித்துக் கொண்ட நற்பெயரை எந்த விதமான பங்களிப்பும் முயற்சியுமே இல்லாமல் வந்து தமது கட்சி நலனுக்காகப் பயன்படுத்த விளைகின்றன. இந்தக் கட்சிகளின் தந்திரத்தை எண்ண வியப்பே ஏற்பட்டது.

அடுத்தது, பெண் வேட்பாளர்களுக்காக வலை விரிக்கின்ற கட்சிகள், இதுவரையில் பெண்களை அரசியலில் பயிற்றுவிப்பதற்கும் அவர்களுக்கான இடத்தைக் கொடுப்பதற்கும் சிந்திக்கவில்லை. இப்பொழுது தங்களுடைய தேவைக்காக மட்டும் எப்படியாவது பெண்களைத் தேடிக் கொண்டு வந்து நிறுத்த முயற்சிக்கின்றன. இந்த நிலை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்குமுரியதாகவே உள்ளது என்பதை மகாலிங்கத்துடனான சம்பவம் உணர்த்துகின்றது என்றாலும், பெண்களை இவை கையாள முற்படுவதில் பல சிக்கல்களுக்கிடமுண்டு. வீரியமுமும் திறனுமுள்ள பெண்கள் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் கடந்து சாதனையாளர்களாக மாறுவர். ஏனையவர்கள் அரசியலின்பால் தடக்கி விழுவதற்கான சாத்தியங்களே உண்டு.

ஒருவாறு மகாலிங்கத்திடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மரணச் சடங்கு நடக்கும் வீட்டிற்குப் போனால், அங்கும் அரசியலே சூடாக இருந்தது. தேர்தல் பற்றியே பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆள் தேடும் வேட்டையைப் பற்றிய ஏராளம் கதைகள். படு சுவாரசியமாக இருந்தது.

இது தனியே எங்கள் ஊரில்தான் நடக்கிறது என்றில்லை. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொதுச் சங்கதியாகி விட்டது. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்புகள் எதுவும் இன்னும் உறுதிப்பாடாக அறிவிக்கப்படவில்லை. அதற்குள்ளே இந்தளவு அமர்க்களங்கள். போகிறபோக்கைப் பார்த்தால், ஊர்களில் அரைவாசிப் பேருக்குமேல் வேட்பாளர்களாகி விடுவார்களோ என்று யோசிக்க வைக்கிறது. கட்சிகளுக்கிடையில் நடக்கின்ற பேச்சுகள், சந்திப்புகள் ஒரு வகையானவை – பிஸியானவை என்றால், அதற்கு நிகரானவையே ஊர்களுக்குள் நடக்கிற வேட்பாளருக்கான ஆட்பிடிகளும்.

இதற்கு “வருமுன் காப்போம்” என்ற முன் ஆயத்தம் சரியானதுதான். ஆனால், அது தனியே தேர்தலுக்கு மட்டும்தானா? சனங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் சனங்களுடைய தேவைகளை அறிந்து உதவுவதிலும் தேவையில்லையா?

உண்மையில் பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் தேர்தல் காலத்தில்தான் வேலை செய்கின்றன. அப்பொழுதே சனங்களிடம் தேடி வருகின்றன. அப்போதே சனங்கள் மதிக்கப்படுகிறார்கள். அதுவும் தேர்தலுக்காக மட்டுமே. இதை இன்னும் கூராகச் செழுமைப்படுத்திச் சொன்னால், தேர்தலின் மூலமாகத் தங்களுடைய செல்வாக்கையும் அதிகாரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே.

தேர்தலில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி, வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி பிறகு, சனங்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை இவை. இது எழுதா விதியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மாபெரும் சாபம்.

இதற்கு, இந்தக் குறைபாட்டுக்கு நாம் தனியே கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் மட்டும் குறை சொல்லிவிட முடியாது. மக்களும் பொறுப்பாளிகள். மக்களின் சார்பாகச் செயற்படுகின்ற – அப்படிச் செயற்பட வேண்டிய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டியக்கங்கள், பல்கலைக்கழகம் போன்ற பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள், புத்திஜீவிகள் போன்ற எல்லோரும் பொறுப்புடைய தரப்புகளே. மிகத்தெளிவாக நமக்குத் தெரியும். இந்தக் கட்சிகளுக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலிருக்கும் இடைவெளியைப் பற்றி. இந்தக் கட்சிகளின் சமூக அக்கறை எவ்வளவு என்பதைப்பற்றி நமக்குத் தெளிவாகவே தெரியும்.

நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க வழியில்லாமல் இருக்கும்போதெல்லாம் நாம் இந்த அரசியல்வாதிகளைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறோம். “அடுத்த தடவை வரட்டும் பார்ப்போம். நல்ல கேள்வி கேட்டுக் கிழிப்போம்” என்றெல்லாம் சூளுரைத்திருக்கிறோம். இதோ வந்து விட்டது அந்த அடுத்த தடவை. நம்முடைய கோபங்களை வெளிப்படுத்தவும் நமது கேள்விகளைக் கேட்பதற்குமாக இதோ வந்திருக்கிறது அந்தக் காலம். இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம்?

மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் – அதாவது தமிழ்ச்சமூகத்தினர் எதிர்நோக்கியிருக்கும் – இதுவரையான நெருக்கடிகளைத் தீர்த்து வைப்பதில் இவற்றுக்கிருக்கும் கரிசனையின் அளவு எவ்வளவு என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நம்மில் பலரும் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பதிலாகத் தேர்தலுக்காகப் பசப்பும் வார்த்தைகளின் வேடிக்கைகளில் நாம் சொக்கி விடுகிறோம். அவை தமது வியாபாரத்துக்கு உற்பத்தியாக்கிப் பரப்பும் புரட்சிகரமான சொற்களில் எங்கள் இரத்தத்தைச் சூடாக்கிக் கொள்வதில் ஒரு வகை இன்பக் கிளர்ச்சி நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இது புகைத்தலில், மதுவில், பொழுதுபோக்குச் சினிமாவில் இதுபோன்ற தூண்டல்களை ஏற்படும் ஒரு வகையான கிளர்ச்சியே. இதற்கு நாம் இலகுவில் அடிமையாகி விடுகிறோம். இது தவறு என்று யாராவது நமக்குச் சொல்லும்போது எங்களுக்கு அவர்களின் மீது கோபம் உண்டாகிறது.

உண்மையில் இந்தக் கட்சிகள் வியாபார நிறுவனங்களே. இந்த அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரிகளே. இவர்களில் யாரும் சேவையாளர்களோ, மனிதநேயவாதிகளோ கிடையாது. ஒரு சிலர் விதிவிலக்காக உண்டு. ஆனால், அவர்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களாலும் ஒரு எல்லைக்கு மேல் சென்று எதையும் சுயாதீனமாகச் செய்ய முடியாது. ஆகவே வியாபாரிகள் எப்படித் தங்களுடைய நலனில், லாபத்தில் குறியாக இருப்பார்களோ, அப்படியே இவர்களும் இருக்கிறார்கள். அதற்குத் தோதான மாதிரி எல்லாவற்றையும் செய்கிறார்கள். எல்லோரையும் கையாளப் பார்க்கிறார்கள்.

தேர்தல் அரசியலே ஒரு வகையில் வியாபாரத்துக்கு ஒப்பான ஒன்றுதான். போட்டியையும் வெற்றியையும் குறியாகக் கொண்டது. ஆனால், அதனுடைய அடிப்படை அப்படி இருக்கக் கூடாது. அதில் குறைந்தளவுக்காவது மக்கள் மீதான கரிசனையும் சமூக அக்கறையும் பொது நன்மைகளில் வினைத்திறனும் இருக்க வேண்டும். இதை தேர்தலின்போது மட்டுமல்ல. தேர்தலுக்கு முன்பே வெளிப்படுத்திக் காட்டுவோம். இப்பொழுது நம்மிடம் வருகிறார்கள் இந்த அரசியல்வாதிகள். சில பெரிய கட்சிகள் தங்களுடைய ஆட்களை நியமிக்கலாம். அவர்களுக்கும் நாம் தெளிவான சேதிகளைச் சொல்வோம்.

இதுவரையில் நீங்கள் குறித்த கட்சியில் இருந்திருக்கிறீர்கள். அந்தக் கட்சியின் மூலமாக மக்களுக்கு என்ன செய்தீர்கள்? முன்னிருக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்காக என்னவகையான பங்களிப்பைச் செய்தீர்கள்? என்று கேட்போம்.

வேட்பாளர்களாக கட்சிப் பிரமுகர்களோ உறுப்பினர்களோ நியமிக்கப்படுவதற்குப் பதிலாக, இதுவரை நடந்த விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பைச் செய்தவர்களை நியமியுங்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களையும் பொருத்தப்பாடுடையவர்களையும் நியமியுங்கள். காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களில் இருந்து தகுதியானவர்களை நியமியுங்கள். மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களை நியமியுங்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், பங்களிப்புச் செய்தவர்களாக உள்ளவர்களை நியமிக்கும்போது அவர்களுக்கும் உரிய இடம் வழங்கப்படும். அத்துடன், அவர்கள் பிற இடங்களில் குறித்த பிரச்சினைகளைப் பற்றி உயிர்ப்போடு பேசுவதற்குரிய வாய்ப்பும் கிடைக்கும்.

தவிர, இன்னொரு வகையில் நோக்கினால், தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது என்பது கட்சியின் உறுப்பினர்களுக்கோ ஆதரவாளருக்கோ நன்றிக் கடன் தெரிவிப்பதல்ல. தேர்தல் அரசியலில் போட்டியே முதன்மையாக இருக்கும் என்பதும் உண்மையே. போட்டியில் எப்போதும் வெற்றியே இலக்காகக் கொள்ளப்படுவதுண்டு. ஆகவே வெற்றிக்குரியவர்களையே வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும்.

 எனக் கட்சிகள் சிந்திக்கலாம். எனவே வெற்றிக்குரியவர்களைத் தெரிவு செய்வது என்பது மிகக் கடினமான ஒரு செயல் எனவும் இவை கருதக்கூடும்.

தேர்தலோ அது மையங்கொள்ளும் அரசியலே மக்களுக்கானதே. அதாவது மக்களாகிய எங்களுக்கானதே. எனவே நாம் இதைப் புரிந்து கொண்டு நிதானமாகச் செயற்படுவோம். இந்தத் தடவை மிக அதிகமான தரப்புகள் களமிறங்கப்போகின்றன. இப்போது கிடைக்கின்ற தகவல்களின்படி வடக்கில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் பங்கேற்காது என்று தெரிகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பில் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பதிலாக 2020 இல் நடக்கவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் ரணிலுக்கான ஆதரவை கூட்டமைப்பு ரணிலுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

இது பெருந்தரப்புகளின் ஏற்பாடு என்றால், ஏனைய தரப்புகள், தங்கள் தங்கள் நோக்குக்கிற்கேற்ப வியூகங்களை வகுக்கின்றன. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லையே அதற்குள் இந்தளவு அமர்க்களமா? என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு சிறிய புள்ளியே. இனிமேல்தான் சித்திரங்களே! ஆனால், அதற்கிடையில் கட்சிகள் படுகிற, படப்போகிற பாட்டைச் சொல்லிவேலையில்லை.

கருணாகரன் 

 

Comments