தமிழினத்தின் அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி! | தினகரன் வாரமஞ்சரி

தமிழினத்தின் அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி!

 

தமிழ் தேசியத்துக்காக வடக்குக் கிழக்கில் தோற்றம் பெறுகின்ற எந்தவொரு போராட்டமும் மூன்று தசாப்த காலத்துக்கு அதிகமாக நீடிப்பதில்லையென்பது ஐதீகம்/ அம்மண்ணில் உருவெடுத்த தமிழ் அரசியல் இயக்கங்கள் மற்றும் ஆயுதப் போராட்ட அமைப்புகளின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றை ஆராய்வோமானால் ஐதீகத்தில் ஓரளவு உண்மை இருப்பதை நம்பத்தான் வேண்டியிருக்கின்றது.

ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடயத்தில் மாத்திரம் ‘மூன்று தசாப்த கால ஐதீகம்’ பொருந்திப் போகவில்லை. முப்பது வருட காலத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்பாகவே, பதினைந்து வருடங்கள் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆயுள் முடிவுக்கு வந்து விட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சற்றேனும் சிதையவில்லையென்றோ, அந்த அமைப்பு இன்னுமே முழுமையான கட்டுக்கோப்புடன் உள்ளதென்றோ அதன் தலைமையான தமிழரசுக் கட்சியினரோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்னுமே ஒட்டுறவைக் கொண்டிருக்கின்ற ஏதேனும் அமைப்போ கூறக் கூடும்.

ஆனாலும் உண்மை அதுவல்ல! தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சிதைந்துதான் போய் விட்டது. முப்பது வருட கால ஆயுளையே பூர்த்தி செய்யாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு சிதைவடைந்து போய் நிற்கின்றது. 2001ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பு 2017 இல் சிதைந்து போயிருக்கிறது.

எத்தகையதொரு பாரிய இலட்சியத்துக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய நான்கு பிரதான தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து 2001இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ, அந்த இலட்சியத்தையே மறந்து போன நிலையில் இன்று சின்னாபின்னப்பட்டு நிற்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளில் தமிழரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக பிரதான அரசியல் இயக்கமாகக் கருதப்படுகின்ற ஈ.பி.ஆர்.எல்.எப் முற்றாகவே விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து விட்ட பின்னர், அந்த அமைப்பு இப்போதும் கட்டுக்கோப்பை இழக்கவில்லையெனக் கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவ்வாறான வார்த்தை உண்மையிலேயே போலியானது.

தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். மாத்திரம் வெளியேறி விடவில்லை. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் மீது அதிருப்தி கொண்ட பலருமே தமிழ்க் கூட்டமைப்பை விட்டு இப்போது அகன்று விட்டனர். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை, பல தரப்பையும் உள்ளடக்கிய தனியானதொரு கூட்டணியாக எதிர்கொள்ளப்போவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் பொது நிகழ்வொன்றில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற முக்கியஸ்தர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற பொது அணியின் ஊடாக புதிய தேர்தல் கூட்டணியைப் பலப்படுத்தப்போகின்றார்கள். இவ்விவகாரத்தில் விக்னேஸ்வரனின் நிலைமை தர்மசங்கடமானது. ஒருபுறத்தில் தமிழ்க் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் பழிச்சொல்லுக்கு ஆளாக அவர் விரும்பவில்லை. மறுபுறத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் நிகழ்ச்சித் திட்டத்துடனும் இசைந்து போக முடியாதவராக அவர் இருக்கின்றார். ‘தமிழ் மக்கள் பேரவை’ என்பது ஒரு அரசியல் இயக்கம் அல்லவென்றும், மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு இயக்கமே அதுவென்றும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் கூறிக் கொள்கின்ற போதிலும், இன்றைய யதார்த்த நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களான அறிவிலிகள் அல்லர் தமிழர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு இப்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது; தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையான தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குமிடையே நிலவிய பனிப்போரின் இறுதிக் கட்ட விளைவே இது; தமிழரசுக் கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்டவர்களுக்கு இனிமேல் புதிய கூட்டணியே புகலிடமாகப் போகின்றது; ஆனாலும் தமிழ் அரசியலின் ஒற்றுமை கருதி ஒன்றிரண்டு பேர் தொடர்ந்தும் தமிழ்க் கூட்டமைப்புடனான ஒற்றுமையைப் பேணி வரக்கூடும். இதுவே இப்போதைய யதார்த்த நிலைமை.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... தமிழினத்தின் அரசியல் இனிமேல் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகின்றது என்பதே இங்கு எழுகின்ற பிரதான வினா.

தமிழினத்தின் அரசியல் பலவீனமாகிப் போய் விட்டதென்பதை ஒட்டுமொத்த தமிழினமும் முதலில் புரிந்து கொள்வது அவசியம்.

அதாவது, தமிழினத்துக்கான எந்தவொரு அரசியல் தீர்வையும் வென்றெடுக்கத் திராணியற்றதாக தமிழின அரசியல் மோசமாகப் பலவீனப்பட்டுப் போயிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எஞ்சியிருக்கின்ற தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் பலமானதொரு கூட்டணியைக் கட்டியெழுப்புவதென்பது சாத்தியமான விடயமல்ல. அதேசமயம் தமிழரசுக் கட்சியானது தனியொரு சக்தியாக நின்று தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை வென்றெடுப்பதென்பதுவும் முடியாத காரியமாகும். தமிழரசுக் கட்சியின் தலைமை இவ்வாறு நம்பிக்கை கொள்வது அபத்தமானது.

தமிழரசுக் கட்சியின் சித்தாந்தங்களும் இன்றைய புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகளும் மாறுபட்டவையென்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக இப்போது அணிதிரண்டு நிற்பவர்களின் கோட்பாடுகள் இன்றைய புதிய தலைமுறையை ஈர்த்துள்ளதென்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே தமிழ்க் கூட்டமைப்புத் தலைமையின் எதிராளிகள் பலம் பொருந்தியவர்களாகவே உள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பு இவ்விதம் இரு பிரதான துருவங்களாகிப் போயிருப்பதால் தமிழின அரசியல் பலவீனப்பட்டுப் போயுள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளாமலிருக்க முடியாது.

வடக்கு – கிழக்கு தமிழ் அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்குக் காரணமானவர்கள் தமிழ் மக்கள் அல்லர். அம்மக்களால் நம்பப்பட்ட அரசியல்வாதிகளே இதற்குப் பொறுப்பானவர்களாவர். அவர்கள் மத்தியிலான பதவி மோகம், வரட்டு கௌரவம், காழ்ப்புணர்ச்சி, சுயநலம், இனப் பற்றின்மை போன்ற பிற்போக்குத்தனங்களினால் ஏற்பட்டுள்ள அரசியல் தோல்வி இது!

அரசியல் ஐக்கியமின்மையினால் தமிழினத்துக்கு ஏற்படவிருக்கும் பாதகங்களை நீண்டதொரு பட்டியலிட முடியும். இவ்வாறான ஒரு பிளவையே ஏனைய சமூகங்கள் இதுவரை ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தன. அந்த எதிர்பார்ப்பு இலகுவாகவே இப்போது கனிந்திருக்கின்றது. இனத்துக்கு ஏற்படப் போகும் பாதிப்பை புரிந்து கொள்ளும்படியான மனப்பக்குவத்தை தமிழ் அரசியல்வாதிகள் இப்போதாவது புரிந்து கொண்டிருப்பதற்கு நியாயமில்லை! 

Comments