ஜெயலலிதாவின் இல்லம் வருமான வரித்துறையால் திடீர் முற்றுகை | தினகரன் வாரமஞ்சரி

ஜெயலலிதாவின் இல்லம் வருமான வரித்துறையால் திடீர் முற்றுகை

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்று முன்தினமிரவு (17) 9 மணியளவில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை நேற்று அதிகாலை 2.00 மணியளவில் நிறைவுக்கு வந்ததாக வருமானவரித்துறையினர் அறிவித்துள்ளனர். போயஸ் கார்டனில் இருந்து முக்கிய ஆவணங்களை கடத்த சசிகலா கும்பல் திட்டமிட்டதாக கிடைத்த தகவலையடுத்து வருமான வரித்துறையினர் அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் இரகசிய தகவல் அடங்கிய லேப் -டாப், பென் டிரைவ்கள், கம்ப்யூட்டர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதனால் சசிகலா குவித்த சொத்துகள் தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என தெரிய வருகிறது.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். மேலும், செயல்படாத முதலீடே இல்லாத போலி நிறுவனங்களைத் தொடங்கி, பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பதும் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கியதும் வருமான வரித்துறைக்கு தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி ஒரே நேரத்தில் 215 இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்களாக நடந்த சோதனையில் மூடை மூடையாக, சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதற்கட்டமாக 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. மேலும் பல நூறு கோடி ரூபாய் தொடர்பான சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது தவிர பல கோடி மதிப்புள்ள வைர நகைகளும் சிக்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினமிரவு, 9:00 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறையில் சோதனை செய்வதாக முதலில் தகவல் பரவியது. ஆனால் சசிகலா அறையில் சோதனை நடத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றதாக பின்னர் தெரியவந்தது. ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடப்பதாக தெரியவரவே அ.தி.மு.க. தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை ஆணையர் தலைமையிலான 15 பொலிஸார் பாதுகாப்பு பணியில் கடமையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. 

Comments