தமிழரசுக் கட்சி மாறிவிட்டதைப்போலவே தமிழ் மக்களும் மாற்றமடைந்துவிட்டனர் | தினகரன் வாரமஞ்சரி

தமிழரசுக் கட்சி மாறிவிட்டதைப்போலவே தமிழ் மக்களும் மாற்றமடைந்துவிட்டனர்

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குப் புறம்பான அரசியல் நிலைப்பாட்டை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்துள்ளதைப்போலவே தமிழ் மக்களும் அந்தக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு மாற்றமடைந்துள்ளார்கள் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்தின் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். தமிழரசுக்கட்சி தமிழர்களின் ஏகோபித்த விருப்புக்கு உரியதாக இருந்த நிலைமை இன்றில்லை என்றும் அவர் தெரிவித்தார்.தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லை எனும் முடிவுக்ேக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வந்திருப்பதாவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி மக்கள் கொடுத்த ஆணையை மதிக்காமல், அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்றமையே தமது கட்சி அதனுடன் இணைந்து செயற்பட முடியாதென முடிவெடுக்கக் காரணமாய் அமைந்ததாகவும் அவர் சொன்னார்.

மக்கள் இன்றும் தமிழரசுக்கட்சியுடனேயே இருக்கின்றார்கள் என்பது தவறானது. இன்றைய நிலைமை வேறானது அன்றைக்கிருந்த அரசியல் சூழ்நிலை வேறு. இன்றிருக்கின்ற அரசியல் சூழ்நிலை வேறு. அன்று மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்தார். இன்று மைத்திரியும் ரணிலும் பதவியில் இருக்கின்றார்கள்.

அப்போது சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்திய தமிழரசுக்கட்சி இன்று அதனைக் கைவிட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் அரசியல் செல்நெறியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பத்து வருடங்களுக்கு முந்திய சூழ்நிலையே இன்றிருப்பதாகச் சொன்னால் அது தவறானது என்றும் அவர் தெரிவித்தார். அவருடனான முழுமையான பேட்டியை 7 ஆம் பக்கதில் பாருங்கள்.

வாசுகி சிவகுமார்

Comments