தமிழ் கூட்டமைப்பிலிருந்து விலகியதாக நாம் ஒருபோதும் சொல்லவில்லை | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் கூட்டமைப்பிலிருந்து விலகியதாக நாம் ஒருபோதும் சொல்லவில்லை

பத்து வருடங்களுக்கு முந்திய நிலைமையை இன்றுள்ள நிலைமையுடன் ஒப்பிடமுடியா தெனக் கூறும் ஈழமக்‍கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், கடந்த பத்து வருடங்களில் தமிழரசுக் கட்சியின் அரசியல் செல்நெறியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைப் போலவே தமிழ் மக்களும் மாறியிருக்கின்றார்கள் என்கின்றார். தமிழ்தேசியக் கூட்டமைப்பி லிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் சூழலில் அதன் உண்மைத்தன்மை குறித்து தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் விளக்குகின்றார்...

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து விலகிவிட்டதாக பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பிலிருந்தோ கூட்டமைப்பின் தரப்பிலிருந்தோ இதனை எவரும் இதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் உண்மைத் தன்மை என்ன?

நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியதாக ஒருபோதும் சொல்லவில்லையே. தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேலை செய்யமுடியாது, தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதைத்தான் நான் சொல்லியிருந்தேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். எனவே அதை விட்டு விலகவேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் இல்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பென்பது தமிழரசுக் கட்சிக்கு சொந்தமானதுமல்ல. தமிழரசுக்கட்சியுடன்தான் என்னால் இணைந்து வேலை செய்ய முடியாது என்பதை அறிவித்திருந்தேன், ஏனெனில் அவர்கள் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை முற்றுமுழுதாகக் கைவிட்டுள்ளார்கள். அவர்கள் அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள். தமிழ் மக்கள் தந்த ஆணையின் பிரகாரம் செயற்படுகின்றார்கள் இல்லை.

ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாகக்கூடிய சூழ்நிலையில் அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களுக்கு உரித்தான பங்கினை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக வட – கிழக்கு இணைப்பு கைவிடப்பட்டிருக்கின்றது. சமஷ்டி என்பது கைவிடப்பட்டிருக்கின்றது. பௌத்தத்துக்கு முதலிடம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இவற்றுக்காக மக்கள் ஆணை தரவில்லை. தமிழரசுக் கட்சி முற்றுமுழுதாக தமிழ் மக்களின் ஆணையை நிராகரித்ததால் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாதென்பதையும், அவர்கள் தவறான பாதையில் செல்கையில் அதில் பங்காளிகளாக எம்மால் இருக்க முடியாதென்பதையும், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட முடியாதென்பதையும் தெரிவித்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வேறு, தமிழரசுக் கட்சியென்பது வேறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகின்றபோது நான்கு கட்சிகள் இருந்தன. ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என நான்கு கட்சிகள் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கின. இடையில் வந்து சேர்ந்ததே இந்த தமிழரசுக் கட்சி. தாங்கள் தான் கூட்டமைப்பென்று சொல்ல தமிழரசு கட்சிக்கு எந்தவிதமான உரித்தும் கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய மூன்று கட்சிகள் தற்போது அதில் இல்லை. தமிழரசுக்கட்சியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர்கள் அதிலிருந்து விலக நேர்ந்தது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது, தமிழரசுக் கட்சிக்குச் சொந்தமானதும் இல்லை. நாங்கள் அதிலிருந்து விலகவும் இல்லை.

ஈ.பி.ஆர்.எல்.எப் வேறொரு தேர்தல் கூட்டணியொன்றை அமைக்கப் போகின்றது எனில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெயரில் தேர்தலை எதிர்கொள்ளா தென்பதுதானே அர்த்தம்?

நீங்கள் எல்லோரும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பென்பது ஒரு பதிவுசெய்யப்பட்ட கட்சி அல்ல. அதற்கென்றொரு சின்னம் இல்லை. தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தான் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டது. இனிவரும் காலங்களில் யாரேனும் தமிழரசுக் கட்சியில் அதன் சின்னத்தில் வேண்டுமானால் போட்டியிடலாம். அது அந்தந்தக் கட்சிகளின் விருப்பத்தினைப் பொறுத்தது. ஆனால் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடமுடியாது.

புதிய அரசியலமைப்பொன்றின் மூலமே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கி வந்திருக்கின்றது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு புதிய அரசியலமைப்புருவாக்க முயற்சிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழரசுக்கட்சியுடன் முரண்படுவது தமிழர் அரசியலுக்கு உசிதமானதா?

அதைத் தான் நான் ஏற்கனவே சொன்னேன். ஒரு புதிய அரசியல் சாசனமானது மூன்று விடயங்களை உள்ளடக்கும் என எமக்குச் சொல்லப்பட்டது. ஒன்று நிறைவேற்று ஐனாதிபதி முறையை மாற்றுவது, இரண்டாவது தேர்தல் முறையை மாற்றுவது, மூன்றாவது தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றைக் கொண்டு வருவது. இவற்றில் ஜனாதிபதி முறையை முற்றுமுழுதாக மாற்றுவதற்கான விடயங்கள் எவையும் புதிய சாசனத்தில் இல்லை. அதுவும் அரைகுறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் பேணுவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீவிரமாக உள்ளது. அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் ஜனாதிபதி முறைமை அவசியம் என்கிறார்கள் அவர்கள். தேர்தல் முறைமையில் வேண்டுமானால் மாற்றங்கள் ஏற்படலாம் ஏனெனில் அது அனைத்து மக்களுக்கும் அவசியமானது என்பதால். அரசியல் சாசனம் என்பதில் நாங்கள் அடிப்படையாக சில விடங்களை முன்வைத்தோம். வடக்கு, கிழக்கு இணைப்பு மிக முக்கியமானதென்றோம். இன்றுவரை 73 தடவைகள் வழிகாட்டல்குழு கூடியும் கூட இந்த அரசியல் சாசனத்தில் வட _ கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசப்படவில்லை என்று நாட்டின் பிரதமர் சொல்கின்றார். பிரதம மந்திரிதான் இந்த வழிகாட்டல் குழுவின் தலைவர். அவர் சொல்கின்றார் தமிழரசுக் கட்சியோ சம்பந்தனோ இது பற்றிப்பேசவில்லை என்று. ஏன் அதனைப் பேச்சுவார்த்தைகளில் தவிர்த்தார்கள் என்பதனை தமிழரசுக் கட்சிக்காரர்களே சொல்லவேண்டும். ஆனால் இடைக்கால அறிக்கையில் அவர்களால் வழங்கப்பட்ட பின்னிணைப்பில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிக் கூறியிருக்கின்றது. அவ்வாறு சொல்லக்கூடியவர்கள் 73 தடவைகள் நடந்த கூட்டத்தில் ஏன் அது பற்றிப் பேசவில்லை? கூட்டத்தில் பேசாமல் பின்னிணைப்பில் மாத்திரம் கொடுத்ததன் மூலம், தமிழ் மக்களை தமிழரசுக் கட்சி ஏமாற்றுகின்றது என்றுதானே கொள்ளமுடியும்? அதேபோலத்தான் சமஷ்டியென்பதும், பௌத்தத்துக்கு முதலிடம் என்று சொல்லப்படுவதும். ஒட்டுமொத்த இலங்கையிலும் பௌத்தத்துக்கு முதலிடம் என்று சொல்கின்றார்கள். வடக்கு, கிழக்கைப் பார்த்தால் தமிழ் பேசும் மக்கள்தான் 90 சதவீதமானவர்களாக இருக்கின்றார்கள். முஸ்லிம் மக்களானாலும் தமிழ் மக்களானாலும் அவர்கள் தமிழ் பேசுபவர்கள் தான். இங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சொற்ப அளவிலான பௌத்தர்களும் அம்பாறையிலோ, திருகோணமலையிலோ இருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்று சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? வடக்கு, - கிழக்கு பௌத்தர்கள் மிகச் சொற்பமாக வாழக்கூடிய பிரதேசம், ஆகவே அதுவொரு மதச்சார்பற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என நாங்கள் சொன்னோம். ஆனால் நாங்கள் சொன்னவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இங்கும் பௌத்தத்துக்கு முதலிடம் என்றால், பௌத்த ஆதிக்கமென்பது வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்பதுதான். அவ்வாறு இருப்பதன் மூலம் அரசானது தான் விரும்பியவாறு பௌத்த கோயில்களைக் கட்டவும், பௌத்த சின்னங்களை உருவாக்கவும், அதன்மூலம் நாட்டில் இன்னமும் மோசமான குழப்பங்கள் உருவாகவுமே வழிவகுக்கும்.

இப்படியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்கின்றார். ஆனால், தமிழ் மக்கள் அவ்வாறு ஏற்றுக்கொண்டதாக நான் அறியவில்லை. தேர்தல் காலங்களில் பௌத்தத்துக்கு முன்னுரிமை எனும் விடயம் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லப்படவுமில்லை. தமிழ் மக்கள் அதற்கு தங்களது ஆணையை வழங்கவும் இல்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழரசுக் கட்சி எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போகின்றது? இந்த நேரத்தில் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளபோது தமிழரசு கட்சியுடன் இணைந்து செயற்படாதது சரியானதுதானா எனக்கேட்டால், அவர்கள் தமிழ் மக்களது கோரிக்கைகள் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு அரசு சொல்வதை மாத்திரமே ஏற்றுக்கொள்ளும் நிலைக்குச் சென்றதுதான் காரணம் என்பேன். அவர்கள் மக்கள் கொடுத்த ஆணையை மதித்திருந்தால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டோம்.

தமிழர்களின் தலைமைத்துவம் பிளவுபடுவது அவர்களது பேரம்பேசும் சக்தியை குறைத்துவிடும் என்பதே பலரது அபிப்பிராயமாக உள்ள நிலையில் தமிழரசுக் கட்சியுடன் இதுவிடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு ஏன் நீங்கள் வரவில்லை?

இன்று நேற்றல்ல, பதினைந்து வருடங்களாக நாங்கள் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம். கூட்டமைப்பென்பது நான்கு கட்சிகளின் கூட்டு. எனவே ஒழுங்கான கட்டமைப்பு எதனையும் கொண்டிருக்கவில்லை. மத்திய குழுவோ, செயற்குழுவோ எதனையும் அது கொண்டிருக்கவில்லை.

ஒரு கூட்டமைப்பென்று சொன்னாலும் கூட்டமைப்புக்கென்றொரு சின்னம் வேண்டும். தேர்தல் செயலகத்தில் அதனைப் பதிவுசெய்திருக்க வேண்டும். இவையெல்லாம் எத்தனையோ தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டும், அதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்வதாய் இல்லை. நீண்டகாலம் உள்ளே இருந்து போராடியும் வெளியே இருந்து அழுத்தம் கொடுத்தும் எதுவும் நடப்பதாய் இல்லை.

தற்போது தமிழ் மக்கள் அளித்த ஆணையையும் அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அவர்களது தவறுகளுக்கான பொறுப்பை சுமக்க வேண்டிய தேவை எமக்கில்லை என்பதால்தான் இணைந்து செயற்படப் போவதில்லை எனறு அறிவித்தோம். நாம் இவ்வாறு முடிவெடுத்தமை சிலவேளைகளில் தமிழரசுக்கட்சி தன்னை மீள் பரிசீலனை செய்ய உதவக்கூடும் என்றும் நான் நினைக்கின்றேன். இப்போதுதான் இடைக்கால அறிக்கை வெளிவந்தது, அதில் தமிழரசுக்கட்சி என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ள தென்பது எல்லோருக்கும் தெரியவந்தது. எனவே எங்களது நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டிய தேவையும் அப்போதுதான் எழுந்தது.

இதற்கு முன்னரும் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பலர் அதிலிருந்து விலகிச்சென்ற பின்னர், கூட்டமைப்பிலும் பார்க்க அதிதீவிரமான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தபோதும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்களே?

இதற்கான காரணத்தை நீங்கள் அவர்களிடமிருந்துதான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். என்னிடம் கேட்பதில் பயனில்லை.

ஆனால் சம்பந்தர் ஐயாவின் தலைமையிலான கட்சிக்கோ, கூட்டமைப்புக்கோதான் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததைத் தானே கடந்த காலத் தேர்தல் முடிவுகள் உணர்த்திச் சென்றுள்ளன?

நீங்கள் சொல்வது பத்து வருடங்களுக்கு முந்திய நிலைமை. அன்றைக்கிருந்த அரசியல் சூழ்நிலை வேறு. இன்றிருக்கின்ற அரசியல் சூழ்நிலை வேறு. அன்று மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்தார். இன்று மைத்திரியும் ரணிலும் பதவியில் இருக்கின்றார்கள். அப்போது சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்திய தமிழரசுக்கட்சி இன்று அதனைக் கைவிட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் அரசியல் செல்நெறியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பத்து வருடங்களுக்கு முந்திய சூழ்நிலையே இன்றிருப்பதாகச் சொன்னால் அது தவறானது.

தேர்தலுக்கான புதிய கூட்டணி பற்றி, யாருடன் இணையப் போகின்றது என்பது பற்றி ஈபிஆர்எல் எப்போது அறிவிக்கும்?

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. அதற்கான காலம் கனியும்போது அதுபற்றி பகிரங்கமாக அறிவித்தல் விடுக்கப்படும்.

உருவாகவுள்ள புதிய கூட்டணிக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ஆதரவளிக்காதது பின்னடைவைத் தருமா?

புதிய கூட்டணி யாருடன் அமையப்போகின்றது என்பது பற்றியோ அதற்கு யார் தலைமை தாங்குவது என்பது பற்றியோ இன்னமும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. சில ஊடகங்கள் தங்களது ஊகங்களை எழுதுவதற்கு நாம் பொறுப்பாளிகளாகி விடமுடியாது. புதிய கூட்டணிக்கான முயற்சிகள் நடக்கின்றன. அவை வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்த பின்னர், தலைவர் யார் செயலாளர் யார், எவ்வாறான குழுஅமையப்போகின்றதென்பது பற்றி நாங்கள் அறிவிப்போம்.

புதிய அரசியலமைப்பு உருப்பெறமுன்னர் ஒரு பலமான கூட்டணியாக அது உருவாகுமா?

புதிய அரசியல் சாசனம் உருப்பெறுமா? உருப்பெறாதா? என்பதேஇப்போது பெரிய கேள்விக்குறியாகவுள்ளது. காரணம் அதற்கான எதிர்ப்பு பாரியளவில் உள்ளது. பௌத்த பிக்குமாரின் எதிர்ப்பும் பலமாக இருக்கின்றது. ஆளும் கட்சி அதனை எவ்வாறு கையாளப்போகின்றது? ஒற்றையாட்சிதான் என்பதை பிரதமரும் இப்போது வலியுறுத்தத் தொடங்கி விட்டார். தமிழரசுக்கட்சி எதிர்பார்ப்பதைப் போல அதில் எதுவுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். என்னைப் பொறுத்தளவில் இடைக்கால அறிக்கை என்பது முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

இனிமேல் வரக்கூடிய அரசியலமைப்பும் கூட இடைக்கால அறிக்கையின் நீர்த்துப்போன வடிவமாகவே இருக்குமோ என்ற அச்ச உணர்வே எனக்குள் உள்ளது. அரசியல் சாசனம் விரைவில் உருப்பெறுமா என்பது ஒரு கேள்விக்குறி, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறுமா என்பது இன்னொரு கேள்விக்குறி. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கெதிராக ஆறுபேர் வழக்குத் தொடர்ந்திருப்பது என்பனவெல்லாம் பலவாறான சந்தேகங்களையே தோற்றுவிக்கின்றன. தேர்தல்களும் சிலசமயங்களில் ஒத்திவைக்கப்படலாம்.

தமிழர்கள் பல தசாப்தங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு பல இலட்சக்கணக்கானவர்களை இழந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அவர்கள் இந்த மண்ணில் கௌரவமாக, சுதந்திரமாக, சமத்துவமாக வாழக்கூடிய, ஒரு அரசியல் சூழலை உருவாக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சி காத்திரமான முடிவை எடுக்கவேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எப் மாகாணசபையை பொறுப்பேற்ற போதும் அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் இருந்தன. ஆனாலும், தமிழர்களின் போராட்டத்தினால் எய்தப்பட்ட அதியுச்ச நிர்வாக அலகாக அதனையே கருதலாம், எனில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் உதறித்தள்ளுவது உவப்பானதா?

நான் கிடைக்கும் சந்தர்ப்பங்களை உதறித்தள்ளுமாறு எப்போதும் கூறவில்லை. எங்கள் கோரிக்கைகைளை முன்வைத்து அதற்காகப் பேசுகின்றோமா? அழுத்தம் கொடுக்கின்றோமா என்பதே கேள்வி. எங்களுக்கு தேவையானதை நாங்களே கேட்காவிட்டால் அவர்கள் எதைத் தருவார்கள்? எங்களுக்கு என்ன கிடைக்கும், வடக்கு கிழக்கை இணைக்குமாறு கேட்டோமா? அதற்காக அழுத்தம்கொடுத்தோமா? இல்லையே. எதனையுமே கேட்காமல் விட்டுவிட்டு கிடைக்காதென்றால் என்ன செய்வது? ஒன்றைக்கேட்டு போராடாவிட்டால், இங்குபோராடுவது என நான் சொல்வது பேச்சுவார்த்தை மேசையிலும் போராடலாம் அதற்கு வெளியேயும் போராடலாம் என்பதே, எதையுமே கேட்காமல் தருவதை தடுக்காதீர்கள் என்றால்? அவர்கள் எதைத் தரப்போகின்றார்கள்? முதலில் கோரிக்கைளை நீங்கள் முன்வைக்க வேண்டும், எப்போதும் ஒரு பேச்சுவார்த்தை மேசையில் கோரிக்கைகள் உயர்ந்ததாகவே இருக்கும். பேச்சுவார்த்தை நடத்தினால்தான் எதனை விட்டுக்கொடுக்கலாம் எதனை விட்டுக்கொடுக்கக் கூடாதென்பது தெரியவரும் அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் காத்திரமான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லையே, அவ்வாறான பேச்சுவார்த்தையின் அவசியத்தையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். அவ்வாறான பேச்சுவார்த்தை மேசையில் கோரிக்கைகைள முன்வைக்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படாத சந்தரப்பத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர அரசு தூக்கிப்போடுவதை ஏற்றுக்கொள்வதற்கு அரசியல் கட்சியொன்று தேவையில்லை. தலைவர்களும் தேவையில்லை.

வாசுகி சிவகுமார்

Comments