41 எம்பிக்களுக்கு எதிராக பகிரங்க விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

41 எம்பிக்களுக்கு எதிராக பகிரங்க விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

பெர்பர்சுவல் ட்ரசறீஸ் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஊழல்மோசடி ஆணைக்குழு பகிரங்க விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு, நீதி, சட்டம் ஒழுங்கு மற்றும்

தென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இருக்கும் சந்தர்ப்பத்திலேயெ பிணை முறிகள் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.

இதனை நாம் வன்மையாகக் கண்டித்தோம். விசாரணைகள் செய்யப்பட்டுத் திருடர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் அர்ஜுன் அலோசியஸ் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் எனது நண்பர். நான் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவர் எனக்கு உதவிகளை செய்துள்ளார். அதனடிப்படையில் அவர் என்னை சந்திக்க வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து நான் அவருக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பினை எடுத்து சந்திக்க வருமாறு கோரினேன்.

இந்த இரண்டு தொலைபேசி அழைப்புக்கள் மட்டுமே எம்மக்கிடையே இடம்பெற்றன. அவர் என்னை சந்தித்தபோது தான் பிணை முறிகள் விடயத்தில் சிக்கலில் அகப்பட்டிருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய முடியுமா? என்றும் என்னிடம் கேட்டார்.

அச்சமயத்தில் நான் தெளிவான ஒரு பதிலை வழங்கினேன்.உங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் அம்பலமாகிவிட்டன. கையுமெய்யுமாக அகப்பட்டு விட்டீர்கள். மேலும் இத்தகைய விடயங்களில் என்னால் உதவியளிக்க முடியாது. இதற்கு பின்னர் இந்த விடயம் சம்பந்தமாக என்னை அணுக வேண்டாம் என்று கோரினேன்.

உண்மையிலேயே இந்த நாட்டில் இருக்கும் தேர்தல் முறைமையினாலேயே இவ்வாறு வியாபாரிகளுக்கு பின்னால் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது.

அதுவொருபுறமிருக்கையில் அதன் பின்னர் அலோசியஸ் என்னைச் சந்தித்ததே கிடையாது. அவ்வாறிருக்கையில் தற்போது அலோசியஸுடன் தொடர்பு கொண்டதாக ஐவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 41பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகவே அனைவரின் பெயர்களும் வெளியிடப்பட வேண்டும். அது மட்டுமன்றி அவர்களின் உரையாடல் ஒலிப்பதிவும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குற்றமிளைத்தவர்கள் தொடர்பில் அறிவதற்காக ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து பகிரங்க விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருடர்களை பாதுகாப்பது எமது நோக்கமல்ல. இவ்வாறு இந்த விடயத்தில் முழுமையான நடவடிக்கையொன்றை எடுக்கும் பட்சத்தில் தான் நாம் சுத்தமானவர்கள் என்பது வெளிப்படையாகும் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Comments