வரவு எட்டணா செலவு பத்தணா! | தினகரன் வாரமஞ்சரி

வரவு எட்டணா செலவு பத்தணா!

வரவு செலவுத் திட்டத்தோட இரண்டாவது வாசிப்புக்குப் பாராளுமன்றத்திலை கூடுதல் சப்போட் கிடைச்சிருக்கு. ஒரு காலமும் இல்லாத மாதிரி தமிழ்க் கூட்டமைப்பும் கை தூக்கியிருக்கு. சந்தோசம்.

அன்றைக்கு நண்பர் ஒருத்தரை இன்னொருவர் கேட்டாராம், இரண்டாவது வாசிப்பு எண்டால் என்ன? என்று. அதற்கு அவர் சொல்லியிருக்கார், முதல்ல ஒருக்கா அமைச்சர் வாசிச்சவர், பிறகு அதை ரெண்டாவது தடவையும் வாசிச்சு வாக்கெடுப்புக்கு விடுறது என்று.

உண்மையிலை இரண்டாவது வாசிப்பு என்பதுதான் வரவு செலவுத் திட்டம். முதலாவது வாசிப்பு என்பது நிதியொதுக்கீட்டுச் சட்ட மூலம். அதாவது செலவினம் மாத்திரம். அதை அமைச்சர் முன்கூட்டியே சமர்ப்பிச்சுடுவார். பிறகுதான் வரவு நிலவரத்தையும் சேர்த்து முழுமையான வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். அதுதான் இரண்டாவது வாசிப்பு. நண்பர் விளக்கியவுடன், அப்பிடியா என்றாராம்!

வரவு செலவுத்திட்டத்தைப்பற்றிச் சில நாட்களுக்கு முன்னர் றேடியோவிலை ஒரு பேட்டி கேட்டன். உடுவை தில்லை நடராசாதான் கலந்துகொண்டு கருத்துச் சொன்னார். அந்தக் காலத்திலை என்.எம்.பெரேரா நிதியமைச்சராக இருந்தபோது கனக்க முசுப்பாத்தியெல்லாம் நடந்திருக்கு. எங்கடை அமைச்சர்மார் சில பேருக்கு ரகசியம் காக்கத் தெரியாதுதானே! அப்ப வரவு செலவுத்திட்டத்திலை சிகரட் விலை கூடுமென்றும் ஒருத்தர் வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கார். இதனாலை, எல்லாரும் பக்கற் பக்கற்றா வீடுகள்ல சிகரட்டை வாங்கி வைச்சிருக்காங்க. என்.எம்.பெரேரா பட்ஜட்டிலை சிகரட் விலையைக் குறைச்சுப்போட்டாராம். வாங்கி வைத்தவர்களுக்கு வயிற்றில் அடி.

பொது மக்களைப் பொறுத்தவரை விலை குறைச்சாலும் வயிற்றிலடி, கூட்டினாலும் வயிற்றிலடிதான். பட்ஜட்டிலை கார் விலை குறைஞ்சிருக்கு. பியர் விலை குறைஞ்சிருக்கு. கார் வாங்கிற ஆக்களைவிட பியர் வாங்கிற ஆக்கள் அதிகம் என்றத நான் சொல்லத் தேவையில்லை. பியர் விலை குறைஞ்சதும் நண்பர் பியர் வாங்கப் போயிருக்கார். ரின் பியர் முடிந்துவிட்டது.போத்தல் பியர்தான் இருக்கின்றது எனப் ​போத்தல் பியரைக் கொடுத்திருக்கிறார்கள். அவர் வீட்டுக்குப்போய் பயபக்தியோடு மூடியைத் திறந்திருக்கிறார்.

அது வழக்கமாக வாங்கும் பியர் மாதிரி இல்லை என்பது மூடியைத் திறக்கும்போது அன்பருக்குப் புரிந்திருக்கிறது. மிக இலகுவாகத் திறந்துகொண்டு மூடியைக் கீழே வைத்துவிட்டு பியரை மிகப் பக்குவமாக கிளாசில் ஊற்றியிருக்கிறார். அதுக்கு அவசியமே இருக்கவில்லையாம். பியர் தண்ணீரைப்போல கிளாசில் நிறைந்திருக்கிறது. உண்மையில் அது தண்ணீர்தான். வெறுந்தண்ணீருக்கு நிறமூட்டிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்டிருப்பதை அப்போதே அவர் உணர்ந்திருக்கிறார். அதுபற்றி எவருக்கும் அறிவிக்கவும் அவகாசம் இருக்கவில்லை. தண்ணீரை பியர் என நினைத்துக் குடித்துவிட்டுச் சாப்பிட்டதாகச் சொல்கிறார்.

இதில், அவர் பியர் வாங்கி ஏமாந்தது அல்ல பிரச்சினை. வரவு செலவுத்திட்டத்திற்குக் கொடுத்திருக்கும் மரியாதையைப் பாருங்கள். இவர்களெல்லாம் உருப்படுவார்களா என்று என்னைக் கேட்கிறார் நண்பர். நான் என்ன சொல்ல. இப்படித்தான் விலை அதிகரிக்கும் எனத் தகவல் வந்தால், அந்தப் பொருளைப் பதுக்கிவிடுவார்கள். இப்போது விலை குறைந்தாலும் பதுக்கிறார்கள். பதுக்கி வைத்தேனும் விற்றுத் தொலைத்துக்கொள்ளுங்களன், துரோகம் செய்யாதீர்கள் என்பதுதான் நண்பர் உள்ளிட்டவர்களின் கருத்து. இதுதான் சாமானியர்களின் ஒருமித்த குரல்.

வரவு செலவுத் திட்டத்தில் விலை குறைப்பு இடம்பெறுமாக இருந்தால், அந்தத் தகவலைத் தெரிந்துகொண்டு தமக்கு அரசாங்கத்தில் எல்லாம் தெரியும் என்ற ​தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகச் சில அமைச்சர்கள் தகவலைப் பரப்பி விடுகிறார்கள். இவ்வாறு பரவும் தகவல் சமூகத்தின் அடி மட்டத்தை அடைந்துவிடும் பட்சத்தில் வீணான குளறுபடிகளை ஏற்படுத்தி விடுகிறது.

பெற்றோல் பிரச்சினையின்போதுகூட இவ்வாறான ஒரு நிலையே காணப்பட்டது. பெற்றோல் கப்பல் வருவதற்குத் தாதமதாகும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்று ஓர் அமைச்சர் ஊற்றிய பெற்றோல்தான் ஒரு நெருக்கடிக்குக் காரணமாகியது. முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முதல் அனைவரும் பெற்றோலைப் பிரத்தியேகமாகப்பெற்று வீடுகளில் தேக்கி வைப்பதற்கு முயற்சித்ததால்தான், பெற்றோல் நிரப்பு நிலையங்களில் அந்தளவு சனத்திரள் காணப்பட்டது.

எங்கே பெற்றோல் கிடைக்காது போய்விடுமோ என்ற அச்சத்தில் கொள்வனவு செய்த அவர்கள், கப்பல் வந்ததும் நிரப்பு நிலையம் பக்கமே செல்லவில்லை. கேட்டால், என்னிடம் ஒரு மாதத்திற்குத் தேவையான பெற்றோல் கைவசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவெல்லாம் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு என்று சொல்ல முடியுமா? அரசியல்வாதிகள் சிந்திப்பதைப்போலவே இப்போது பொது மக்களும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று அடித்துச் சொல்கிறார் அருமை நண்பர்.

எவ்வாறாக, இருந்தாலும் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்குப் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது விசேட அம்சமே. அந்தப் பணத்தை எல்லாம் மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி விடாமல் இருந்தால் சரிதான்! 

Comments