இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க? | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்க?

2019 ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியைத் தயார்படுத்தும் வகையில் ஒரு சிறந்த பயிற்சியாளரைத் தேடும் பணியில் இலங்கை கிரிக்கெட் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரங்களில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, மற்றும் அவுஸ்திரேலிய நாட்டினரான டின் ஜோன்ஸ் மற்றும் சில வெளிநாட்டு பயிற்சியாளர்களின் பெயர்களை ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணம் வெல்லக்காரணமாயிருந்த பயி்ற்சியாளர் டேவ் வட்மோரின் பின் இலங்கை அணிக்கு நீண்டகாலம் நிலைத்து நின்று பயிற்சி அளிக்கக் கூடிய ஒரு பயிற்சியாளர் இன்னும் கிடைக்கவில்லை. அவ்வப்போது கிரஹம் போர்ட் போன்ற சிறந்த பயிற்சியாளர்கள் வந்து போயினர், கடந்த வாரம் புதிய பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் சந்திக்க ஹதுருசிங்கவின் பெயர் ஊடகங்களில் ஊகங்களாக வெளிவந்தவண்ணமுள்ளன.

2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணத் தொடர் வரை பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சந்திக்க ஹதுருசிங்க திடீரென அப்பதவியிலிருந்து கடந்த வாரம் இராஜினாமாச் செய்ததுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் இவ்வேளையில் சந்திக ஹத்துருசிங்கவின் இராஜினாமாச் செய்தியானது இலங்கை கிரிக்கெட்டுக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுள்ளது. இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் அவர் அண்மைய பங்களாதேஷின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியைப் பற்றி அதிக கரிசணையோடு பத்திரிகைகயில் செய்தி வெளியிட்டிருந்தமையாகும்.

அப்பத்திரிகைப் பேட்டிகளின் போது, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, திமுத் கருணாரத்ன போன்ற சிறந்த இளம் வீரர்கள் இங்கு இருப்பதாகவும, இலங்கையில் பாடசாலை கிரிக்கெட்டும் நல்ல நிலையில் இருப்பதால் கிரிக்கெட் விளையாட்டு தற்போதைய இளம் வீரர்களின் இரத்தத்தில் ஊறிப்போயுள்ளதனாலும் இப்பரம்பரை இருக்கும் வரை இலங்கைக் கிரிக்கெட்டை வீழ்த்த முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால்’ இன்று இலங்கை அணி தோல்விகளால் துவண்டு போயுள்ளது.

கிராஹம் போர்ட்டின் ஓய்வின் பின் பகுதி நேர பயிற்சியாளராக இருந்த நிக் போதாஸ் தற்போது இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராகக் கடமையாற்றுகிறார் எனறாலும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணத்துக்கு இலங்கை அணியைத் தயார்படுத்தும் வகையில் இவ்வருட இறுதிக்குள் ஒரு சிறந்த பயிற்சியாளரை தேடும் பணியில் இலங்கை கிரிக்கெட் ஈடுபட்டுள்ளது. ஆனால் இப்பதவிக்கு இன்னும் ஹதுருசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார். என்றாலும் ஹதுருசிங்க மீது இலங்கை கிரிக்கெட் கண் வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு அமைச்சர் தயாசிரி ஜயசேகரவும் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஹதுருசிங்க இலங்கை பயிற்சியாளராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

2010 ஆம் ஆண்டு இலங்கை அணியின் பகுதி நேரப் பயிற்சியாளராக இருந்த இவரை அன்றைய கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் திடீரென விலக்கியது. அப்போதைய இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவ்ரத்தன போன்ற வீரர்கள் இவரின் சேவை எமக்குத் தேவை என்று கடித மூலம் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டாலும் அன்றைய நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவர் ஏற்கனவே ஒருமுறை 1999 ஆண்டு அப்போதைய கிரிக்ெகட் சபையினருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால்தான் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானார். அவர் அங்கு பயிற்சியாளர்களுக்கான கற்றல்களைப் பெற்று சிறந்த பயிற்சியாளராக முதலில் அவுஸ்திரேலிய பிராந்திய அணியான நியூசவுத்வேல்ஸ் அணியின் பிரதான பயிற்சியாளராகக் கடமையாற்றினார்.

காலப் போக்கில் இவரின் திறமையை கண்டுகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் இவரைத் தங்களது அணியின் பிரதான பயிற்சிவிப்பாளராக நியமித்துக் கொண்டது. இதுவே அவ்வணியின் முன்னேற்த்துக்கு முக்கிய காரணமாய் அமைந்தது.

அவர் பங்களாதேஷின் பயிற்சிப் பொறுப்பையேற்று சுமார் ஆறு மாதங்கள் வரை பங்களாதேஷ் அணி வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள், வீரர்களின் தன்மை, குணாதிசயம் என்பவைகளை அவதானித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகே அவர் களத்தில் இறங்கிளார். இவரின் வழி நடத்தலில்தான் பங்களாதேஷில் பிரீமியர் லீக் போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அந்நாட்டின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளின் போது ஹதுருசிங்கவின் பங்களிப்பு இருந்தது. மேலும் அணித் தேர்வு கூட ஹதுருசிங்கவின் விருப்பின் பேரில்தான் நடைபெற்றது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் பங்களாதேஷ் அணியை ஒரு கட்டுப்கோப்புக்குள் கொண்டு வருவதற்கு அந்நாட்டுக் கிரிக்கெட் சபை அவருக்கு பூரண ஒத்துழைப்புக் கொடுத்தது. அதனால் ஒருநாள் தரவரிசையில் இன்று இலங்கை அணியைவிட முன்னேறியுள்ளது. பலம் வாய்ந்த அணிகளான பாகிஸ்தான், இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகளையும் ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றிபெற்றது.

முதன்முதலில் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டிகளில் வென்றமை, பலம்வாய்ந்த இலங்கை அணியை இங்கு வைத்தே வெற்றி பெற்றமை எல்லாம் பயிற்சியாளர் ஹதுருசிங்கவின் பங்களிப்புடன்தான் இப்படி தொடர்ந்து ஒரே பயிற்றுவிப்பாளரின் கீழ் பயிற்சி பெற்றதால்தான் பங்களாதேஷ் அணி பலம்வாய்ந்த அணிகளுக்கெல்லாம் சவால்விடும் அளவுக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு வீரர்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் அடிக்கடி பயிற்சியாளர்களை மாற்றுவதால் சிறந்த அணியை உருவாக்க முடியாது. கடந்த ஏழு ஆண்டுகளில் இலங்கை அணிக்கு ட்ரெவர் பெய்லி, ஸ்டுவர்ட் லோ, ருமேஸ் ரத்நாயக்க, ஜெப் மார்ஷ், கிரஹம் போர்ட், போல் பாப்ரஸ், மார்வன் அத்தபத்து, ஜெரோம் ஜயரத்ன, மீண்டும் கிரஹம் போர்ட், நிக் போத்தாஸ் என பத்துப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படட்னர்.

இவ்வேழு ஆண்டுகளில் அநேகமாக வீரர்கள் ஒவ்வொரு பயிற்சியாளரிடம் வெவ்வேறு, பயி்ற்சிகள் வெவ்வேறான அணுகுமுறைகள், நுட்பங்கள் என இருந்ததால் அணி வீரர்கள் எப்படி ஒரு கட்டுக்கோப்புக்குள் ஒரே அணியாக தொடர்ந்து விளையாடுவது. மேலும் முகாமைத்துவத்திலும், தேர்வாளர்களிலும், நிர்வாகத்திலும் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதும் இலங்கை அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு சிறந்த ஒரு பயிற்சியாளர் தேவைதான் ஆனால் ஹதுருசிங்க இலங்கையர் என்பதால் இலங்கை வீரர்களுடன் ஒத்துப்போகக் கூடியவராக இருந்தாலும், இலங்கை விளையாட்டில் புரையோடிப் போயுள்ள அரசியல் நெளிவு சுளிவுகளுக்கு தலைசாய்க்கக் கூடியவரா ஹத்துருசிங்க?

ஏற்கனவே இவர் தமிழ் யூனியன், இலங்கை ஏ அணிகளுக்கும் பயிற்சியாளராகக் கடமையாற்றியுள்ளார். அன்று அவர் பயிற்றுவித்த சில வீரர்கள் இன்று இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களாக உள்ளனர். எனவே இலங்கை அணிக்கு அவர் பயிற்சியாளராக வந்தால் காரியமாற்றுவது இலகுவானதாக அமையுமென கிரிக்கெட் அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆனால் நிர்வாகம் தேர்வுகளில் தலையிடுவதிலும், மற்றும் அதிகாரிகள் தேவையில்லாமல் பயிற்சிகளிலும், அணித் தேர்வுகளிலும் தலையிடுவதை அவர் விரும்புவதில்லை. பங்களாதேஷ் அணியை அவர் பொறுப்பெற்ற குறுகிய காலத்தில் அவர் செய்த முதல் வேளை அவ்வணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான சகீப் அல் ஹஸனுக்கு போட்டித் தடையை விதித்ததுதான். அதைப் பற்றி அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அவரிடம் கேள்வி கேட்கவில்லை.

ஆனால் பின்னாளில் பங்களாதேஷ் வீரர்கள் மட்டுமல்ல, சகீபும் ஒழுங்காக பயிற்சிகளில் ஈடுபட்டு திறமையை வெளிக்காட்ட ஹதுருசிங்கவின் நடைமுறையே காரணமாயமைந்தது. பங்களாதேஷ் கிரிக்கெட்டை அவர் கட்டியெழுப்பியது இவ்வாறான அணுகு முறைகளினாலாகும்.

இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிக்வோ அல்லது வேறொருவர் வந்தாலும் அவர் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறமையை வளர்ப்பதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம்கொடுக்கக் கூடாது. ஹதுருசிங்க அப்படிப்படியானவர் என்பதற்கு உதாரணமாக பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது ஒரு பத்திரிகைப் பேட்டியில் கருத்துத் தெரிவிக்கையில் “நான் பொறுப்பேற்ற பணிகள் ஒழுங்காக நடைபெறும். ஆனால் அப்பணிகள் உரிய முறையில் நடைபெற வேண்டுமானால் ஒரு தலையீடும் இருக்கக் கூடாது அப்படி இல்லாவிட்டால் தூக்கி எறிந்துவிட்டு போய்விடுவேன். எனக்குத் தொழில் செய்வதற்கு ஒரு மர நிழலும் பயிற்சியைப் பெற ஒரு சில வீரர்கள் இருந்தாலும் போதுமானது” என்று அவர் குறிப்பிட்டிருந்ததை ஞாபகமூட்ட விரும்புறேன்.

எம். எஸ். எம். ஹில்மி 

Comments