ஹபீஸ் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை | தினகரன் வாரமஞ்சரி

ஹபீஸ் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

பாகிஸ்தானின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபீசுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு கடந்த முதல் (16) தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னனி வீரர்களில் ஒருவரான ஹபீஸ் மீது இலங்கை அணியுடன் ஒக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியின் போது சுழல் வீரர்களுக்கான விதிமுறைகளை மீறி பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சந்தேகத்துக்கிடமான பந்துவீச்சுப் பாணியை மதிப்பீடு செய்வதற்காக நவம்பர் மாதம் 1 ஆம் திகதி ஹபீசுக்கு லண்டன் பயணிக்க வேண்டி ஏற்பட்டிருந்தது. இந்த மதிப்பீட்டு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது சர்வதேச போட்டிகளில் பந்து வீசும் சந்தர்ப்பத்தை இழந்திருக்கின்றார்.

எனினும், தனது பந்துவீச்சுப் பாணியில் மாற்றங்களை மேற்கொள்வார் எனின் ஹபீசுக்கு மீண்டும் பந்துவீச்சுமுறையை மதிப்பிட்டுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹபீஸ் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டிருப்பது இம்முறை மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரது பந்துவீச்சு முதலில் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்பட்டு அவ்வருடத்தின் டிசம்பர் மாதத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பந்து வீசுவதற்கு இருந்த தடையை ஐ.சி.சி நீக்கியிருந்தது.

அதையடுத்து சில மாதங்களின் பின்னர் காலியில் இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஹபீஸ் குற்றம் பிடிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நடந்த சோதனைகளில் ஹபீஸ் சுழல் வீரர்களுக்கான 15 கோணத்தை தாண்டி பந்து வீசுவது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசுவதற்கான தடையை மொஹமட் ஹபீஸ் பெற்றிருந்தார். ஐ.சி.சி இன் இந்த முடிவானது “வீரரொருவர் பந்துவீச்சு மதிப்பீடு ஒன்று செய்யப்பட்ட பின்னர் 24 மாதங்களுக்குள் குறிப்பிட்ட 15 கோணத்தைத் தாண்டி இரண்டு தடவைகள் வீசினால் ஒருவருடத் தடையைப் பெறுவார்“ என்ற சட்டக்கோவையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருந்தது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பந்து வீசாமல் இருந்த ஹபீஸ், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிஸ்பேன் நகரில் பந்துவீச்சு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் நல்ல விதத்தில் அமைந்த பின்னரே மீண்டும் பந்துவீச அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Comments