திகாம்பரத்தின் நியாயம் என்னவாக இருக்கக் கூடும்? | தினகரன் வாரமஞ்சரி

திகாம்பரத்தின் நியாயம் என்னவாக இருக்கக் கூடும்?

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை பூல்போங்க் தொழிற்பயிற்சி நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை இ.தொ.கா கடுமையாக எதிர்த்து வீதி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதை நாம் பார்த்தோம். பிரஜாசக்தி நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சௌமிய மூர்த்தியாரின் படங்களும் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக பல செய்திகளையும் கட்டுரைகளையும் நாம் பத்திரிகைகளில் பார்த்தோம். பெரும்பாலானோருக்கு விஷயம் ஏன், எப்படி என்பதே விளங்கவில்லை. ஏனெனில் இ.தொ.கா உறுப்பினர்களோ அல்லது ஆதரவாளர்களோ அவர்களுக்கு கோபம் வருவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் உறுப்பினர்களாக அல்லாதோரும், வேறு கட்சி ஆதரவாளர்களும் கூட தொண்டமான் பெயரை நீக்கியதை எதிர்க்கவே செய்கிறார்கள். ஏனெனில் மறைந்த ஒருவருக்கு மரியாதை செய்வதும், அவருக்கான கௌரவத்துக்கு குந்தகம் செய்யாமல் இருப்பதும் தமிழர் பண்பாடு. மோசமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஒருவருக்கும் கௌரவமான இறுதி வழியனுப்புதலை செய்வதும், அதன் பின்னர் அந் நபரைத் திட்டித் தீர்ப்பதை நிறுத்திக் கொள்வதும் தமிழர் வழக்கம். இதுவே அமைச்சர் திகாம்பரத்துக்கு எதிராக வேலை செய்தது. இதுவரை தொண்டமான் மீது மாற்றுக் கருத்தை வைத்திருந்தோரையும் முகம் சுளிக்கச் செய்தது, இந்த மறைந்தவரை கௌரவிக்கும் பண்பாடுதான்.

ஆனால் அரசியல் என்பது வேறு. அங்கே நமது சாதாரண சமூக நியாயங்கள் தகர்ந்து போகின்றன. அதிகாரம், அதிகார மையங்கள், அதை நோக்கிய முண்டியப்பு என்பன, நாம் போற்றும் பண்புகளைப் பின்பற்றுவதன் மூலம் அடைய முடியாது என, அசோக சக்கரவர்த்திக்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த சாணக்கியன் தான் படைத்த அர்த்த சாஸ்திரத்தில் கூறியிருக்கிறான். அதையேதான் கீதையில் அரசியல் அறமாகப் பேசுகிறான் கண்ணன். ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் மாக்கியவெலி எழுதிய ‘த பிரின்ஸ்’ என்ற நூலில் இதையேதான் அவனும் சொல்கிறான். அரசியல் அதிகாரம் என்று வந்ததும், மனைவி கணவனைத் தீர்த்துக் கட்டுவதும், மகன் தந்தையின் கதையை முடித்து அரியணை ஏறுவதும், நண்பன் முதுகில் குத்தி அரியணை ஏற முயல்வதும் சரித்திரத்தில் சர்வசாதாரணம். தாஜ்மஹாலை அமைந்த சாஜஹானை அவர் மகன் சிறையில் அடைத்தான். இலங்கை சரித்திரத்திலும் இத்தகைய நிகழ்வுகளை நிறைவே பார்க்கலாலம். தந்தையை உயிருடன் சுவர் எழுப்பிக் கொன்றதை இலங்கை சரித்திரம் சொல்கிறது. இந்திய மோகலாய சரித்திரத்தில் அடிமைக்குல வேந்தர் என்ற ஒரு பரம்பரை வருகிறது. அரசனின் ஆஸ்தான அடிமையாக இருந்தவன் அரசனைக் காலி பண்ணிவிட்டு அரசனாக அரியணை ஏற, அடிமைக்குல வேந்தர்கள் அரசாள வந்தார்கள்!

பாகிஸ்தான் இராணுவ கமாண்டர் பர்வேஸ் முஷரப் தன் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பிக் கொண்டிருக்கையில், வானில் இருந்தவாரே தன் இராணுவ தலைவர்களை ஏவி நவாஷ் ஷெரீபின் ஆட்சியைக் கவிழ்ந்தார். விமானம் தறையிறங்கிய போது நாட்டின் புதிய ஆட்சியாளராக பர்வேஷ் முஷரப் விளங்க, சில மணித்தியாலங்களுக்கு முன்வரை நாட்டின் அதிபராக விளங்கிய நவாஸ்ஷெரீப் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார்! காதலுக்கு மட்டுமல்ல கண்ணுமில்லை மூக்குமில்லை; அரசியலுக்கும் தான்! அரியணை ஏறியதும் யாரையும் நம்பக்கூடாது என்பதுதான் அங்கு பொதுவிதி!

அமைச்சர் திகாம்பரத்தின் பெயர் அகற்றும் நட வடிக்கையை இப்படியும் பார்க்கத்தான் வேண்டும். வெற்றிகரமான அரசியல் என்பது தயவு தாட்சண்யமின்றி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதும், தனக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வதிலும் தான் இருக்கிறது. 83 கலவரத்துக்கு காரணமானவர்களை மக்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் ஜே.ஆரோ, ஜே.வி.பி.மீது மொத்தப் பழியையும் சுமத்தினார்! மற்றொரு தடவை, நக்ஸலைட் என்று கூறி விஜயகுமாரதுங்கவைத் தூக்கி ஜெயிலில் போட்டார்!

அமைச்சர் திகாம்பரம், தனது அமைச்சின் கீழ் இரண்டே இரண்டு நிறுவனங்கள்தான் இருப்பதாகவும், அதில் ஒன்றான டிரஸ்ட் என அழைக்கப்படும் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிலையம் பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதியில் இயங்குகிறது என்றும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டாவது நிறுவனம் தொண்டமான் நிதியம் என்றும் அது ஒரு குடும்பத்துடன் தொடர்புட்டதாக இருப்பதோடு அங்கு பல ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சர் திகாம்பரம் சொல்கிறார். எனவே இவற்றுக்கு மேலாகத் தனக்கு வேறு திணைக்களங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விண்ணப்பம் செய்து கொண்டார்.

அமைச்சர் திகாம்பரத்தின் பிரச்சினையே இதுதான்.

அவருக்கு முதல் தடவையாக அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்கிறது. இது பெரிய அளவிலான அரசியல் அதிர்ஷ்டம். செளமிய மூர்த்தி தொண்டமானுக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னரேயே இந்த வாய்ப்பு கிடைத்தது. திகாம்பரத்துக்கு இந்த அரசு ஒரு பெரிய பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. அது தோட்டங்களை கிராமங்களாக மாற்றி அமைக்கும் பெரும் வேலைத்திட்டம். யாருக்கும் கிட்டாத ஒரு வாய்ப்பு இது. அதே சமயம் இதை வெற்றிகரமாக செய்து முடிப்பது ஒரு இமாலயப் பணியே.

ஆனாலும் இப் பணியைச் செய்யும் போது, அமைச்சர் மக்களிடமிருந்து கொஞ்சம் எட்டியே இருக்க வேண்டியிருக்கிறது. இலங்கை மட்டுமன்றி இந்திய அரசியலிலும் அவ்வப்போது சில்லறை வேலைகளை, மக்களை நேரடியாகச் சென்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய வேலைகளை செய்தாக வேண்டுடியிருக்கிறது. தொழில் பெற்றுத் தருதல், தண்ணீர் வசதி போன்ற அடிப்படையான விஷயங்களை அவ்வப்போது செய்து வந்தால்தான் மக்களுடன் மக்களாகக் கலக்க முடியும். அவர்கள் நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். அவ்வாறான திணைக்களங்கள் தன்வசம் இல்லையே என்பதே திகாம்பரத்தின் கவலை!

டிரஸ்ட் எனப்படும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அமைப்பே, பெருந்தோட்ட வீடமைப்பு திட்டங்கயைம், தோட்ட மருத்துவமனை, பொது சுகாதாரம், பெருந்தோட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் என்பனவற்றை மேற்கொண்டு வருகிறது. பெருந்தோட்ட கம்பனிகளின் நிதி, பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய நன்கொடைகள் என்பன டிரஸ்ட் ஊடாகவே திட்டங்களாக செயல்படுத்தப்படுகின்றன. இந் நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பெருந்தோட்ட மக்களைச் சென்றடையும் போது அம் மக்கள், இது ‘திகாம்பரம் சேர் செய்து கொடுத்தது’ என்று சொல்லாமல், டிரஸ்ட் செய்து கொடுத்தது என்று சொல்கிறார்கள். அரசியல்வாதி என்ற வகையில் அப் பெயர் தனக்கு வந்துசேர வேண்டும் என்று அமைச்சர் திகாம்பரம் எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

இனி தொண்டமான் நிதியத்தை எடுத்துக் கொள்வோம்.

இதன் தற்போதைய தலைவராக திகாம்பரம் நிகழ்ந்தாலும் அந் நிறுவனத்தின் பெயர் தொடர்ந்து இ.தொ.கா. வை நினைவுபடுத்துவதாக இருப்பதால், இந் நிதியத்தின் ஊடாக திகாம்பரம் செய்யும் அபிவிருத்தி பணிகள், நலத்திட்டங்கள் என்பனவற்றால் பலன் அடையவோர், தொண்டமான் நிதியம் செய்தது என்றும், தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தில் படித்ததால் இந்தத் தொழில் கிடைத்தது என்றுதான் சொல்வார்களே தவிர, திகாம்பரத்தின் அமைச்சின் மூலமாக, அமைச்சர் திகாம்பரத்தினால்தான் நான் பயன் அடைந்தேன் என்று சொல்வதில்லை என்பதுதான் அமைச்சரின் கவலையும் ஆதங்கமுமாக இருக்கிறது.

இந் நிறுவனங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தொண்டமான் என்ற பெயரை எடுத்துவிட்டால், தான் ஆற்றும் பணிகளுக்கான பிரதிபலன்களும், பெயரும் தன்னையே வந்தடையும் என்று அமைச்சர் எதிர்பார்த்திருக்கலாம். தான் மக்களின் பொருட்டு ஆற்றும் அத்தனை பணிகளுக்குமான பிரதி பலன்களும் பெயரும் அடுத்த தேர்தலில் தனக்கு அறுவடையாக வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அரசியல்வாதியும் கருதுகிறார் என்பது சரியான அரசியல் கணக்கானால், திகாம்பரம் செய்ததும் சரி என்று தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆறுமுகன் தொண்டமான் தன் பாட்டனாரின் பெயரையும், படத்தையும் இந் நிறுவனங்களின் பேரில் பயன்படுத்தியதற்கான காரணம், அது இ.தொ.காவுக்கு அறுவடையாக அமையும் என்பதால்தான். அவ்வாறானால், தன் அரசியல் எதிரிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதை ஒரு அரசியல் சதுரங்கமாகக் கருத முடியுமே தவிர, மோசமான ஒரு செயலாகக் கருதுவதற்கில்லை.

ஆனால் இதை அமைச்சர் திகாம்பரம் அதிரடியாகச் செய்யக் கிளம்பியதே அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியது. தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என அழைக்கப்பட்ட போதும் அது சட்ட ரீதியாக பூல்பேங்க் என்ற பெயரில்தான் இருந்து வந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படும் செய்தியும் கவனிக்கத்தக்கது.

மக்களின் அபிமானம் பெற்ற தலைவரின் பெயரை நீக்கும் ஒரு நடவடிக்கையை எவ்வாறு படிப்படியாகவும், பக்குவமாகவும், நியாயமான விஷயம் என்றுதோன்றக் கூடியதாகவும் அமைச்சரால் ஆற்றி முடித்திருக்கலாம். இதுவும் நூற்றாண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அரசியல் உபாயம்தான்!

தொண்டமான் பெயர் நீக்கம் தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியபோது ஒரு நேர்காணல் மூலம் விஷயத்தை பக்குவமாக எடுத்துச் சொல்லி இருக்கலாம். அரசின் மீது பழியை போட்டியிருக்கலாம். பதிலாக, தொண்டமான் நிதியத்தில் மோசடி, ஊழல் நடந்திருக்கிறது என்று ஒரு காரணத்தைக் காட்டியபோது, இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் அப்படியே கருதின.

அமைச்சர் ஆரம்பித்த இந்த அரசியல் பரமபத விளையாட்டின் முதல் கட்டத்தில் திகாம்பரம் பாம்பின் வாய்க்குகள் சிக்க, ஆறுமுகன் ஏணியில் ஏறிய மாதிர்த்தான் மக்கள் கருதுகிறார்கள். இந்த அபிப்பிராயத்தை திகாம்பரம் மாற்றியமாக வேண்டுமே! அவரிடம் திலகர் என்ற ஒரு தளபதி இருக்கிறார். நம்பகமானவர். தமிழில் வல்லவர், இலக்கியவாதியும் கூட, பரமபத விளையாட்டில் ஏணியைக் கைப்பற்ற அவர் ஏதாவது செய்வார்!

அருள் சத்தியநாதன்
  

Comments