வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர் | தினகரன் வாரமஞ்சரி

வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர்

இன்று குளிரூட்டிகள் இல்லாத அலுவலகங்களையோ, நட்சத்திர ஹோட்டல்களையோ, சொகுசு வாகனங்களையோ, திரையரங்குகளையோ, தொழிற்சாலைகளையோ, அடுக்குமாடி கட்டடங்களையோ காண்பது அரிது.

ஒரு காலத்தில் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த ஏ.சி., இன்று ஓரளவு சம்பாதிக்கும் எளியோரிடமும் இருக்கிறது. வெப்பத்திலிருந்து காப்பாற்றும் அற்புத கருவியான ஏ.சி.,யை கண்டுபிடித்தவர் வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர் ஆவார்.

அமெரிக்காவின் அங்கோலாவில், 1876ம் ஆண்டு நவம்பர், 26ம் திகதி பிறந்தார் வில்லிஸ். சிறுவயதில் அவருக்கு இயந்திரங்களின் இயக்கங்களை பார்ப்பதில் ஆர்வம் அதிகம். இயற்கையாகவே பொறியியலில் நாட்டம் கொண்ட அவர், கார்னெல் பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுநிலைப்பட்டம் பெற்று பின்னர் ஒரு புகழ்பெற்ற தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார்.

நியூ​ேயார்க்கிலுள்ள புத்தக நிறுவனம் ஒன்றில் அச்சு இயந்திரம் அடிக்கடி பழுதாகி வந்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வில்லிஸை அழைத்து இயந்திரத்தை பழுதுபார்த்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

நிறுவனத்திற்குள் நுழையும்போதே வெப்பத் தாக்குதலை உணர்ந்த வில்லிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை ஆராய்ந்தார். அந்த இடம் அதிக வெப்பம் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதை உணர்ந்த அவர், அப்பகுதியில் வெப்பம் அதிகம் தாக்கமடையாத வகையில் உபகரணங்களை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே.

அதாவது, வெப்பக்காற்று உள்ளே நுழைவது தடுக்கப்பட்டு மெல்லிய ஈரக்காற்றால் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டதால் அவை பழுதின்றி சுழன்றன. அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமுமே இயந்திரங்களை பழுதாக்குகின்றன என்பதை கண்ட வில்லிஸ், மேலும் தீவிரமாக இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக புதிய உபகரணங்களை தயாரித்தார். 1906ம் ஆண்டு, 'ஏயர் கண்டிஷனர்' என்று அழைக்கப்படுகிற கருவியை கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையும் பெற்றார்.

இக் கருவி வெளி வெப்பத்தை அறைக்குள் தடுப்பது மட்டுமின்றி, ஏற்கனவே அறைக்குள் சுழன்று கொண்டிருக்கும் வெப்பத்தை குளிர்ந்த நிலைக்கு மாற்றும் அற்புதத்தை செய்து, அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.

இவர் உருவாக்கிய ஏ.சி., பயன்பாட்டிற்கு வந்தபோது, அவரின் புகழ் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. பல நிறுவனங்கள், ஏ.சி.,யை பயன்படுத்த விரும்பி அவரை அழைத்தன. மக்களின் வரவேற்பை உணர்ந்த வில்லிஸ், தனி ஏ.சி., தயாரிக்கும் பிரிவை தொடக்கினார்.

தான் உருவாக்கிய ஏ.சி., உபகரணங்களில், 'கம்ப்ரஸர்கள்' அடிக்கடி பழுதாவதை கண்டார். ஏ.சி., இயங்கும் போது, வெப்பநிலைக்கு ஏற்ப கம்ப்ரஸர்கள் செயற்பட வேண்டும். அதாவது வெப்பம் அதிகமாகும்போது, குறையும் போதும் அறைக்குள் ஏ.சி.,யின் குளிர் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

இதை ஆரம்பத்தில், அவர் சரிவர இயங்கும்படி செய்யவில்லை. காலப்போக்கில் கம்ப்ரஸர்கள் அறையின் குளிர் அளவை தேவையான அளவிற்கு மாற்றிக் கொள்ளும் விதத்தில் செயல்படுத்தினார். இதனை 1914ஆம் ஆண்டு உருவாக்கி, அதற்கும் காப்புரிமை பெற்றார். இதற்குப் பின்னர் ஏ.சி.யை மேம்படுத்துவதிலேயே தன் சிந்தனையை செலுத்தினார். இன்று ஏ.சி., மனிதனின் வசதிகளுக்கு மட்டுமின்றி பல்வேறு துறைகளுக்கும் உதவுகின்றன. மக்களுக்கு என்றென்றும் உபயோகமாகும் ஏ.சி.,யை இவ்வுலகிற்கு தந்த வில்லிஸ், 1950ம் ஆண்டு அக்டோபர், 7ஆம் திகதி மரணமடைந்தார்.

தி. சுஜானி,
தரம் 09E, வ/இறம்பைக்குளம் மகளிர் மகா
வித்தியாலயம், வவுனியா.

 

Comments