ஏழு பேர்ச்சுக்குப் பதிலாக இருபது பேர்ச் காணியை பெற்றுக்கொடுங்களேன்! | தினகரன் வாரமஞ்சரி

ஏழு பேர்ச்சுக்குப் பதிலாக இருபது பேர்ச் காணியை பெற்றுக்கொடுங்களேன்!

மத்திய மாகாண சபை உறுப்பினர்  எஸ்.சதாசிவம்

 நேர்கண்டவர்: பி.திருக்ேகதீஸ்

கே: ஒரு 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர் நீங்கள். ஆனால் இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் முன்னேற்றம் மெதுவாகத்தானே நடந்துகொண்டிருக்கிறது? ஒரு தேக்கநிலை காணப்படுகிறது. அரசியல்வாதிகளை ஊக்குவிக்கும், கேள்வி கேட்கும் சமூகமாக இல்லாமல் இருப்பதுதான் அரசியல்வாதிகள் விழிப்புணர்வற்றவர்களாக இருப்பதற்கு காரணம் என நினைக்கிறீர்களா? கட்சிகள் தமது சொந்தக் காலில் நிற்காமல் தேசிய கட்சிகளை சார்ந்திருப்பதுதான் இந்த மந்தகதிக்கு காரணமா?

ப: மலையக இந்திய வம்சாவளி மக்கள் இன்று ஏதோ ஒரு வகையில் வளர்ச்சியடைந்துள்ளனர். 30 வருட காலம் எமது உரிமைகள் பறிக்கபட்டிருந்தமையினால்தான் எமது வளர்ச்சியில் மந்தநிலை ஏற்பட்டது. 1977 ஆம் ஆண்டுக்கு பின் எமக்கு கிடைத்த பிரஜா உரிமைக்கு பின்னர் தான் நாம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றோம். 1988 ஆம் ஆண்டு 10 பேர் மாகாண சபைக்கும் 1994 ஆம் ஆண்டு 11 பேர் பாராளுமன்றத்துக்கும் செல்லும் உரிமை எமக்கு கிடைத்தது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதிநிதித்துவத்தை பெறும் சந்தர்ப்பங்கள் உருவாகின. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மலையக சமூகம் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அன்று ஆசிரியர் கலாசாலைகள், பூல்பேங் தொழிற்பயிற்சி நிலையம், பாடசாலைக் கட்டிடங்கள் போன்றவற்றை உருவாக்கினோம். மேலும் ஆசிரியர் நியமனங்கள், கிராம சேவகர் நியமனங்கள் வழங்கினோம். அதனடிப்படையில் பார்க்கும்போது இன்று எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருக்கின்றோம்.

தற்போது இருக்கும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்தினோமானால் நாம் ஏனைய சமூகங்களுக்கு நிகரான சமூகமாக வாழமுடியும். இன்று பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் பழைய கதைகளையே பேசாமல் புதிய விடயங்களை சிந்தித்து சமூகத்திற்கு என்னென்ன தேவையோ அதனை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். அன்று இருந்தவர்கள் ஏதோ செய்துவிட்டு சென்றதால்தான் இன்று ஓரளவான வளர்ச்சி பாதையில் நிற்கின்றோம்.

அன்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு கிடைத்ததன் விளைவாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு கிடைத்தன. அன்று கிராம சேவகர்கள் நியமனங்கள் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வழங்கியதன் விளைவாகத்தான் இன்று பிரதேச சபை எல்லைகள் பிரிப்பதற்கு எளிதாகிறது.

இன்றும் நாம் பெருங்கட்சிகளை சார்ந்திருப்பது நாம் அடிமைகள் போல இருப்பதற்கு சமமாகும். அன்றிருந்த பிரதிநிதித்துவத்தில் பேரம்பேசும் சக்தி மிக்கவர்களாக இருந்தோம். தொகுதிவாரி தேர்தல் முறை நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு சாதகமாக அமைந்தாலும் கண்டி, களுத்துறை, இரத்தினபுரி போன்ற பகுதிகளுக்கு இது சாதகமாக அமையவில்லை. நாம் பெரிய கட்சிகளிடம் பேரம்பேசி எதனையும் பெற்றுக்கொள்ளும் சூழல் உருவாகிவிட்டது. இந்த தொகுதிவாரி தேர்தல் முறை எமது சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தபோகின்றது. இத்தேர்தலுக்கு பின்னர்தான் இதன் நன்மை தீமை பற்றி எமக்கு தெரியப்போகிறது. இதனூடாக நாம் அனைவரும் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு கடினம். நாம் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் அங்கு பேரம்பேசி எமது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் சக்தியை பெறுவோமானால் அது எமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பாகும். ஆனால் இன்று ஒன்பது பேர் பாராளுமன்றத்தில் இருந்து ஒரு பயனுமில்லை. தொகுதிவாரி தேர்தல் முறைக்கு கூட சரியானதொரு கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. நுவரெலியா மாநகர சபையில் நான் மேயராக இருந்த காலத்தில் பீட்றூ லவர் சிலிப் தோட்டத்தின் வாக்குகள் மாநகரசபையின் எல்லைக்குள் இருந்தன. அது இன்று பறிபோயுள்ளது. அவை பிரதேச சபை எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தலவாக்கலை, அட்டன் நகர சபையிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு எமது பிரதிநிதித்துவத்தை இழக்கப்போகிறோம்.

மலையகத்தில் ஒரு தொண்டமான் இருந்துகொண்டு பேரம்பேசும் சக்திமிக்க தலைவனாகத் திகழ்ந்தார். அவர் செய்தது எண்ணிலடங்காதவை. இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை தேர்தலுக்கு முன்னரே பெறவேண்டும். தேர்தலுக்கு பின்னர் இது சாத்தியப்படாது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் சென்றவர்களுக்கும் மலையக மக்களின் வாக்குகள் பெருமளவில் கிடைத்தன. இந்த சந்தர்ப்பத்தை இன்று மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் முழுமையாக பயன்படுத்தினார்களா? நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போதே பிரதேச சபைகளை பிரிப்பது தொடர்பாக ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுடன் கலந்துரையாடப்பட்டது. நாம் பேரம் பேசும் பிரதிநிதித்துவத்தை கையில் வைத்திருந்தால் மட்டுமே எமது உரிமைகளையும் சலுகைகளையும் பெரும் கட்சிகளிலிருந்து பெறமுடியும்.

கே : மலையக விழிப்புணர்வு எனும்போது பெண்களை விழிபூட்ட வேண்டும். மேலும், மாணவர் மற்றும் இளைஞர்களை வாசிப்பவர்களாகவும், சிந்திக்கக்கூடியவர்களாகவும், இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாகவும் மாற்றியமைக்கக்கூடிய எந்த செயல்களிலும் மலையக சங்கங்கள், கட்சிகள் ஈடுபடுவதில்லை என்று நான் சொல்கிறேன். கோவில், குளம், பூஜை, சடங்குகள் என்ற அளவில்தான் இக்கட்சிகள் மக்களை வைத்திருக்க விரும்புகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

ப : 1996 இல் நான் பாராளுமன்றம் சென்றபோது இந்திய வம்சாவளி மக்களின் கல்வி வளர்ச்சியில் மிகவும் அக்கறை செலுத்தினேன். தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து பாடசாலை கட்டடங்களை அமைத்து கொடுத்தேன். ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கட்டடங்கள் அமைத்துக்கொடுத்தால் மட்டும் போதாது என்று எண்ணி கல்வி நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கினோம். அன்று கல்வி அமைச்சராக இருந்த ரிச்சட் பத்திரனவிடம் பேசி மேலதிகக் கல்விச் செயலாளரை நியமித்தோம். முதன் முதலாக தில்லைநடராஜா கல்விச் செயலாளராக நியமனம் பெற்றார். அன்று எம்மிடம் எஸ்.எல்.இ.எஸ். அதிகாரி ஒருவர் மாத்திரமே இருந்தார். அன்று விசேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மத்திய மாகாணத்தில் 5 மாவட்டங்களில் மேலதிக கல்விப் பணிப்பாளர்களை நியமனம் செய்தோம். மேலும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாகாணக் கல்வி அமைச்சை பெற்றுக்கொடுத்தோம். ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உதவி கல்விப் பணிப்பாளர்களையும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களையும் நியமித்தோம். முன்பள்ளிகளை உருவாக்கும்போது எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியடையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஒரு சமூகத்தின் வளர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது. இன்னும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் எமது பிள்ளைகள் பின்னடைவையே சந்திக்கின்றனர். வாய்ப்புகள் உள்ளவர்கள் தொடர்ந்து கல்வி கற்கின்றார்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றவர்கள் கல்வியை இடையிலேயே நிறுத்தி விடுகின்றார்கள். நம்முடைய அரசியலில் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் மிகக்குறைவாகத்தான் இருக்கின்றன. அரசாங்கம் எல்லோருக்கும் முழுமையாக கல்வி கற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்கு திட்டவட்டமான நடைமுறை செயல்முறைகளை எமது அரசியல்வாதிகள் ஏற்படுத்த வேண்டும். கல்வி ஒன்றுதான் ஒரு மனிதனை முழுமையான மனிதனாக்கும்.

கே : மக்களுக்கு சேவையாற்றும் அமைப்புகளுக்கு தொண்டமான் பெயரிடுவதும் அவரது புகைப்படங்களை மாட்டி வைப்பதும் அரசியல் சார்ந்த ஒரு செயற்பாடு என்ற வகையில் மாற்றுக்கட்சி அந்த சூழலை உடைத்தெறிவது கட்சி அரசியலில் நியாயமானதொன்று எனக் கருதமுடியுமா?

ப : ஒரு நிறுவனத்துக்கு பெயரிட்டு அரசாங்கத்தினாலேயே நடத்திச்செல்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். ஏனைய நிறுவனங்களைப் போலவே அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெயரிட்டமை தவறு இல்லை. இந்திய வம்சாவளி மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அட்டன் பூல்பேங் நிறுவனத்திற்கு வைத்ததில் எந்தப் பிழையும் கிடையாது. அதை இப்போது சிலர் மாற்றியதுதான் முற்றிலும் பிழை. இனிவருங்காலங்களில் நிறுவனங்களுக்கு நபர்களின் பெயரிடப்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமே தவிர வைக்கப்பட்ட பெயரை மாற்றுவது நமது பண்பிற்கு உகந்ததல்ல. அதை வைத்து அரசியல் இலாபம் தேடுவது தவறு. எமது மலையக சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள் நிறைய இருக்கின்றன. அதனை விடுத்து பெயரை மாற்றுவதா சேவை? பூல்பேங் நிறுவனத்தை அரசாங்கமே நிர்வகிக்க வேண்டும் அவ்வாறு நிர்வகிக்கும்போதுதான் அதன் முழுமையான சேவையை நாம் பெறமுடியும்.

கே : செளமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் இ.தொ.கா பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப : செளமியமூர்த்தி தொண்டமானுக்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற மாபெரும் ஸ்தாபனத்தை வழிநடத்தியவர்கள், அனைவரையும் அரவணைத்துக்கொண்டு செயற்படாமல் இது ஒரு சமூகம் சார்ந்த ஸ்தாபனம் என எண்ணாமல் தன்னிச்சையாக செயற்பட்டமையால்தான் இன்று பல இழப்புகளை சந்தித்ததுடன் பல விமர்சனங்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. தொண்டமானுக்கு பின்னர் இ.தொ.கா பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. இ.தொ.கா தனது சக்தியை இழந்துகொண்டே வருகின்றது. இதற்கு காரணமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாமையே.

கே : மகளிருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தேர்தல் சட்டமாகி விட்டது. அரசியலில் நேரடி பங்கு வகிக்கக்கூடிய, சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய நிலைக்கு இப்பெண்கள் உயர்த்தப்பட்டிருக்கிறார்களா? பெயரளவில் இவர்கள் நியமனம் செய்யப்பட்டு தெரிவானதும் ஆண்களே இவர்களை இயக்குவார்கள் என்ற ஒரு எண்ணம் உள்ளது. இன்னொரு குற்றச்சாட்டும் உள்ளது. மலையக ஆண்களுக்கு பெண்களின் கல்வி, சிந்தனை, சுதந்திர தீர்மானம் என்பனவற்றில் எந்த அக்கறையும் எக்காலத்திலும் இருந்ததில்லை. சமையல் கட்டுக்கும், படுக்கைக்குமாக இருந்தால் போதும் என்ற சிந்தனையே மலையக ஆண்களிடம் உள்ளது. இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பெண்களுக்கு 25 சதவீதம் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற தேர்தல் முறை பாராட்டத்தக்கது. இன்று பெண்களில் 50 வீதமானோர் படித்தவர்களாகவே உள்ளனர். அதில் சிலர் தொழில் கிடைக்காததன் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கு கல்வி அறிவு முழுமையாக இருக்கின்றது. இன்று எல்லோரினதும் வீடுகளில் தொலைக்காட்சி, வானொலி, கைத்தொலைபேசி பாவனைகள் வந்துவிட்டதால் உலக நடப்புக்களை தெரிந்து வைத்துள்ளனர். சிலர் இன்று ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் அனுபவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர். இவர்களுக்கு இன்று நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும் சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையகத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்கின்றார்கள். இவர்களுக்கு அரசியல் செய்யும் சந்தர்ப்பத்தை வழங்கி அரசியல் அனுபவத்தை பெறுவார்கள் என்றால் நல்ல உந்துசக்தியாக திகழ்வார்கள். நம்முடைய மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதுடன் சமூகம் மீதான அக்கறையும் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை.

கே : தோட்டங்கள் கிராம மயப்படுத்தல், காணி உறுதியுடனான வீடு என்பன புதிய வரவேற்கத்தக்க விஷயங்கள்தானே! இத்திட்டம் தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் என்ன?

இந்த வீட்டுத்திட்டத்தை 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் வீடுகள் தனியாக இருக்க வேண்டும் என்று 1976, 1977 ஆம் ஆண்டுகளில் கொல்வின் ஆர் டி சில்வா வீடமைப்பு அமைச்சராக இருந்தபோதே கூறியிருக்கிறார். அப்போது பெருந்தோட்டங்கள் ஜனவசம வசம் இருந்தது அன்று குயின் கொட்டேஜ் வீடுகளை அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைத்தார்கள். அப்போது செளமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் தனிவீடு, காணி உரிமை பெறுவதற்கான போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதன் விளைவாக 1994ம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக பதவியேற்றபோது நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக தோட்டப்பகுதிகளில் ஒரு குழுவை நியமித்து பெருந்தோட்ட மக்களின் வீடு, வாழ்க்கை, தொழில், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வீடமைப்பு, கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு இவை அனைத்துமே உள்ளடக்கப்பட்டது. இதன் பின்னரே தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 1994ம் ஆண்டு சந்திரிகா ஆட்சியமைக்க பெரியசாமி சந்திரசேகரன் என்ற தனிநபரின் வாக்கு தேவையாக இருந்தது. அன்றைய அரசாங்கத்தில் பெரியசாமி சந்திரசேகரனுக்கு தோட்ட உட்கட்மைப்பு பிரதி அமைச்சு வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் பெரியசாமி சந்திரசேகரன் 7 பேர்ச் காணி வேண்டும் என்ற கொரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்து 10 பேர்ச் காணிக்கு கோரிக்கை விடுப்போம் என தீர்மானித்தோம். அப்போது சௌமியமூர்த்தி தொண்டமான், மக்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படும் காணியை பெற்றுக்கொள்வோம். நாம் இடையில் குறுக்கீடு செய்தால் அரசாங்கம் காணிகள் வழங்குவதை நிறுத்தி ஒருவருக்கும் பயன் இல்லாமல் போய்விடும். எனவே சந்திரசேகரனின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதனையே இன்று மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் செய்துவருகின்றார்கள். வேறொன்றும் புதிதாக செய்யவில்லை. 7 பேர்ச் காணிக்கு பதிலாக 10 பேர்ச் அல்லது 20 பேர்ச் காணியை பெற்றுக்கொடுங்கள். நீங்கள் தானே நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்தீர்கள்? உங்களுக்கு பேரம்பேசும் சக்தி இருக்கவேண்டுமே! 1994 ஆம் ஆண்டுகளில் நாங்கள் சந்திரிகா அம்மையாருக்கு வாக்குகள் வழங்கவில்லை. ஐ.தே.கவில் போட்டியிட்டு பின்னர் சந்திரிகா அம்மையாருக்கு ஆதரவு வழங்கி செளமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்தார். ஆனால் இன்று காணி உறுதிப்பத்திரங்களை வழங்குகிறீர்கள் அதனை பாராட்ட வேண்டும் வேறொன்றும் புதிதாக செய்யவில்லை. ஏறத்தாழ 3 இலட்சம் பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் இருக்கின்றார்கள் இவர்கள் அனைவருக்கும் வீட்டுரிமை வழங்கப்பட வேண்டும்.

கே : out growers திட்டம் பற்றி உங்கள் சாதக பாதக கருத்துக்களை சொல்ல முடியுமா?

ப : வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் வீதம் தேயிலை மலைகளை பிரித்து கொடுப்பதனால் தொழிலாளர்கள் அதனை பராமரித்து வருமானத்தை கூட்டிக்கொள்வது சாதகமானதுதான். காணிகளை இதே தேயிலை வெளியாருக்கு கொடுக்கும்போது தொழிலாளர்களுக்கு வேலை நாள் குறைவடையும். 100 வருடங்களுக்கு மேல் பராமரித்த தேயிலைக் காணி கைமாறக்கூடிய வாயப்புகள் இருக்கின்றன. அதனால் இந்தக் காணி பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் தேயிலை தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு காணி கொடுத்து பராமரிப்பதே சிறந்தது. தேயிலை மலைகளை பாராமரிப்பதனால்தான் கம்பனிகளுக்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் அதனால் தேயிலை ஏற்றுமதியில் அதிக இலாபம் ஏற்படுவதில்லை எனவும் கம்பனியினர் தெரிவிக்கின்றனர். தேயிலை காணியை தொழிலாளர்களே பராமரித்தால் கம்பனிக்காரர்கள் தேயிலை கொழுந்தை மாத்திரம் தொழிலாளர்களிடமிருந்து பெற்று அதனை உற்பத்தி செய்து விற்று இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு மானியம் போன்ற உதவிகளை செய்து கொடுக்கலாம் என கம்பனிகள் திட்டமிட்டுள்ளனர். வெளியாருக்கு தேயிலை காணியைக் கொடுக்காமல் தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரம் கொடுக்கும் ஒரு முறையாக இருந்தால் அது தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும்.

கே : மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றால் பெருந்தோட்ட வாழ்க்கையை விட்டு வெளியேறி புதிய வாழ்க்கைக்கு செல்வது அவசியம்தானே!

ப : மனிதனுக்கு மாற்றங்கள் தேவைதான். அதேபோல பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் மாற்றம் தேவைதான். வெளியிடங்களில் வேலை செய்வது தன்னுடைய சுய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது என்பன அவர்கள் முழுமையாக மாற்றமடைந்து வருவதைக் குறிக்கிறது. பெருந்தோட்டங்களில் வேலை இல்லாதவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வருமானத்திற்காக வேலை செய்வது காலத்தின் கட்டாயமாகும். தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களை விட்டுவிட்டு தொழிலுக்காக வெளியிடங்களுக்கு வெளியேறினால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆள் இல்லாத சூழல் உருவாகும். இதனால் தேயிலைத் தோட்டங்களை பாராமரிக்கும் பிரச்சினைகள் தோட்ட நிர்வாகத்திற்கு ஏற்படலாம்.

இதனால் வெளியாட்கள் தோட்டத்திற்குள் குடியேறலாம் அல்லது வேலைக்கு அமர்த்தப்படலாம். சிறுத்தோட்ட முதலாளிமார் உருவாகலாம். எனவே எமது சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறாமல் அதனை பாதுகாக்க வேண்டும். பெருந்தோட்டங்களிலே பசுமையான புல்தரைகள் காணப்படுகின்றன. இங்கு மேலதிக வருமானத்துக்கான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நம்முடைய கல்வி,பொருளாதாரம், சுகாதாரம், சமூக அபிவிருத்தி போன்றவற்றில் மாற்றம் தேவை. ஆனால் எமது உரிமைகளையும் சலுகைகளையும் யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது. இன்று இரத்திரபுரி, தெனியாய பகுதிகளில் சிறுதோட்ட முதலாளிமார் உருவாகிவிட்டார்கள். அங்கு எமது மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். அந்த நிலைமை நுவரெலியாவிலும் ஏற்படக்கூடாது.

கே : முன்னரை விட இப்போது டிரஸ்ட் சிறப்பாக செயல்படுவதாகக் கருதுகிறீர்களா?

ப : கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் 75 வீதமான வாக்குகளை மலையக மக்களே வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசாங்கம் மக்களுக்கு அனைத்து விடயங்களையும் செய்ய வேண்டும். ட்ரஸ்ட் நிறுவனத்தை அன்றும் இன்றும் குறைகூற முடியாது இருந்தாலும் அன்றைய காலகட்டத்தைவிட தற்போது மிகத்துரிதமாக வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கே : எதிர்காலத்தில் மலையக அரசியலிலும் பொருளாதாரத்திலும் எவ்வாறான மாற்றங்கள் நிகழும் எனக் கருதுகிறீர்கள்?

ப : எதிர்காலத்தில் தேயிலைத் தொழிலை நாம் கைவிடக்கூடாது. இன்னும் பல ஆண்டுகளுக்கு தேயிலையும் தேயிலை தொழிற்சாலைகளும் இந்நாட்டிலே இருக்கத்தான் போகின்றது. பெருந்தோட்டங்களில் காணப்படுகின்ற வளங்களை பயன்படுத்தவேண்டும். உதாரணத்திற்கு புற்தரைகள். இன்று பெருந்தோட்ட பகுதிகளிலே பெருமளவில் பிள்ளைகள் மந்தபோசனை குறைப்பாட்டிற்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை குறைப்பதற்கு பசும்பால் உற்பத்தியை அதிகரித்து அபிவிருத்தி செய்து ஊக்கவிப்பதன் மூலம் இந்த மந்தபோசனை குறைப்பாட்டை இல்லாதொழிக்க முடியும். மேலும் தச்சன், மேசன் ஆகியோர் இன்று ஒரு நாள் சம்பளமாக அதிக தொகையை உழைக்கின்றார்கள். இவ்வாறான தொழில்களை ஊக்குவிக்கலாம். விவசாயம், பண்ணை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிக்கலாம். எந்த தொழில் செய்தாலும் நமக்கு வருமானம் கிடைக்கக்கூடிய சரியான தொழிலை தெரிவு செய்ய வேண்டும். கல்வி கற்றவர்களுக்கெல்லாம் தகுந்த தொழில்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு குடும்பம் எவ்வாறு வளர்ச்சியடைகின்றதோ அதேபோலவே ஒரு சமூகத்தின் வளர்ச்சியும் இருக்கும்.

கே : உங்களின் எதிர்கால திட்டங்களைப் பற்றி கூறுங்கள்?

ப : நன்கு திட்டமிட்டே அரசியல் செய்து வருகின்றேன். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் பெருங்கட்சிகள் செய்த துரோக செயல்களினாலும் இன்று இந்நிலைக்கு ஆளாக வேண்டியதாயிற்று. பல வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியிலேயே இருந்தேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தேன். அதற்கு காரணம் அவரின் ஆளுமை மற்றும் எதற்கும் சரியான தீர்வை எடுக்கக்கூடிய ஆற்றல். அவரின் காலப்பகுதியிலே பெருந்தோட்ட பகுதிகள் கூடுதலான அபிவிருத்தியைக் கண்டன. இதனால் அவருடன் இணைந்தேன். ஆட்சி மாற்றத்தின் காரணமாக இவை அனைத்தும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது.

தற்போது நான் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றேன். மேலும் எனது தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியை சிறப்பாக நடாத்தி வருகின்றேன். எனக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் வெகு விரையில் அமையும் என எதிர்பார்க்கின்றேன். 

 

Comments