கூண்டிற்கு சுதந்திரம் | தினகரன் வாரமஞ்சரி

கூண்டிற்கு சுதந்திரம்

ஆற்றிலும் கடலிலும் தோன்றும் சுனையிலும்

இனத்துடன் கூடி இன்பமாய் வாழும்

ஆழத்தில் அடியில் விளையும் உணவை

உண்டு மகிழ்ந்து குலம் பெருக்கி

வாழும் மீனைப் பிடித்து வீட்டில்

தொட்டியில் அடைத்து மின் வழியூட்டி

அழகினை நுகர மாடியில் வைத்தால்

இயற்கை நீர்போல் இன்பம் கிடைக்குமோ

இனத்தோடு சேர்ந்து இறக்கை விரித்து

விண்ணில் தூரம் உயரப் பறந்து

இனிக்கும் காய் கனி உண்டு சுவைத்து

மரத்தை துளைத்து கூடுகள் கட்டி

இலண்டமிட்டு இளவல் பொரித்து

இரையும் ஊட்டி நலமாய் வளர்த்து

வாழும் வாழ்க்கை பச்சைக் கிளிக்கு

தனவான் வீட்டு கூண்டில் கிடைக்குமோ

புற்றிலும் புதரிலும் வாழும் பாம்பை

மகுடியை ஊதி மயக்கிப் பிடித்து

கடைவாய்ப் பற்களைக் களைந்து

பெட்டியில் அடைத்து காப்புமிட்டு

வயிற்றுப் பசிக்கு நிறையுணவின்றி

சீற்றம் குறைந்து அடங்கிய பாம்பு

முட்டையிட்டு குஞ்சு பொரித்திட

பாம்புப் பெட்டியில் சுதந்திரமுண்டோ

கூடிக் காட்டில் வாழும் குரங்கு

மந்தியோடு கொஞ்சி விளையாடி

காய் கனி பறித்து சுவைத்துண்டு

கவலைகளின்றி வாழும் குரங்கை

துரத்திப் பிடித்து இடையில் கட்டி

சந்தியில் வீதியில் ஆட்டிப் பிழைப்பதால்

தாவும் குரங்கிற்கு இனத்தொடு குலாவ

அடவிபோல் வாழக் கிடைக்குமோ

கரு முகில் திரள கடுங்காற்று வீச

கண்ணைப் பறிக்கும் வண்ணத்தோகை

கருங்கடல் திரைபோல் அகல விரித்து

அழகிய நடனம் பெடையுடன் ஆடும்

வண்ண மயில்களை சிறையிலடைத்து

நீரும் உணவும் உவந்தளித்தாலும்

கோயில் மணியொலிக்க கோலமயிலாடாது

காட்டில் சுதந்திரம் கூட்டில் கிடைக்குமோ 

Comments