அந்தமான் தாழமுக்கம் தீவிரம்; சூறாவளியாகும் அச்சுறுத்தல் | தினகரன் வாரமஞ்சரி

அந்தமான் தாழமுக்கம் தீவிரம்; சூறாவளியாகும் அச்சுறுத்தல்

வளிமண்டலவியல் திணைக்களம்

 

நமது நிருபர்

 

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்குச் சூறாவளி அச்சுறுத்தல் இருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என்று வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால் கெஹலெல்ல பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தமான் தீவில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், ஒக்கி புயல் இலங்கையைக் கடந்து சென்று 850 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அந்தமான் தீவுப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் இன்னும் ஓரிரு தினங்களில் மேலும் தீவிரமடைந்து மோசமான பாதிப்புகளை உருவாக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வங்காள விரிகுடா பகுதியில் இருந்து அரேபிய கடற்பரப்பு நோக்கி நகர்ந்த ஓக்கி சூறாவளி, இந்து சமுத்திரத்தின் கரையோரத்தினூடாகக் கடக்கவுள்ளது.

இதனால், சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் தென்பகுதி ஆகியவற்றில் கூடுதல் மழை வீழ்ச்சி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு தினங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாறும்பட்சத்தில் அது சாகர் எனப் பெயரிடப்படவுள்ளது.

தெற்கு அந்தமான் தீவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம், இலங்கையிலிருந்து 1700கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேகக் கூட்டங்களின் கட்டமைப்பும், வளமண்டலவியல் நிலைமைகளும் தாழமுக்கத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஸ்கைமெட் வெதர் எச்சரித்துள்ளது. கால நிலையில் ஏற்பட்ட இவ்வகையான மாற்றங்களால் எதிர்வரும் 36 மணிநேரத்தில் அது தாழமுக்கமாக மாறும் என்றும் மேற்கு மற்றும் வட மேற்குத்திசை நோக்கி நகரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3- முதல் 4 நாட்களுக்குள் அதாவது எதிர்வரும் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் இத்தாழமுக்கம் தமிழ் நாடு வடக்கு மற்றும் ஆந்திராவின் தென்பகுதிக் கரையோரத்தைக் கடக்கும் அதேவேளை, இலங்கைக்கு மிக அண்மித்து செல்லும் வாய்ப்பு இருப்பதால், அதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளில் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் அறிக்ைக சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், வளிமண்டலத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் காரணமாக இது பயணிக்கும் திசையிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் 24 மணித்தியாலமும் ஊஷார் நிலையில் இருந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் மழை

இலங்கையிலிருந்து மேற்கு நோக்கி சுமார் 850 கிலோ மீற்றர் தொலைவில் இலட்சத்தீவை நோக்கி Ockhi புயல் சென்று கொண்டிருப்பதால் அதன் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.

எனினும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களுக்கும், புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு காலை நேரங்களில் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் சுமார் 75 -50 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகும்.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மாவட்டங்களில் காற்றின் வேகம், சுமார் மணிக்கு 50கி.மீ வேகத்தில் விதம்.

இடியுடன் கூடிய மழை பெய்யவும் வேளைகளில் இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments