ஆசனப்பங்கீடு தொடர்பில் ஐ.தே.கவுடன் இன்று இறுதிச் சுற்று பேச்சு | தினகரன் வாரமஞ்சரி

ஆசனப்பங்கீடு தொடர்பில் ஐ.தே.கவுடன் இன்று இறுதிச் சுற்று பேச்சு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் இதுபற்றி கூறியுள்ளதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக இதுவரையில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பிலேயே ஐக்கிய தேசிய கட்சியுடன் ஆசன பங்கீட்டு பேச்சுகளில் ஏறக்குறைய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஏனைய சபைகளை பொறுத்தவரையில் பேச்சுகள் முடிவு பெறவில்லை.

அதேவேளை உள்ளூராட்சி சபைகளை, நமது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில், மக்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகள், குறைவாக வாழும் சபைகள், கணிசமாக வாழும் சபைகள் என நாம் தரம் பிரித்துள்ளோம். நமது மக்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகள் மற்றும் குறைவாக வாழும் சபைகளை பொறுத்தவரையில் ஐ.தே.கவுடன் கூட்டிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற அடிப்படையில் போட்டியிடுவதில் சிக்கல் கிடையாது.

ஆனால், நமது வாக்காளர்கள் கணிசமாக வாழும் சபைகளை பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய முன்னணியாக போட்டியிடுவதில் நமக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனென்றால் புதிய கலப்பு தேர்தல் முறையில் வட்டாரங்களில் மட்டுமல்லாமல், பட்டியலிலும் உறுப்பினர்களை பெறவேண்டியுள்ளது. ஆகவே நமது வாக்காளர்கள் கணிசமாக வாழும் சபைகளில் அனைத்து வட்டாரங்களிலும் நாம் போட்டியிடுவதன் மூலமே நாம் உரிய இலக்கை அடைய முடியும்.

இதனால் சில சபைகளில் சேர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியாகவும், சில சபைகளில் தனித்து முற்போக்கு கூட்டணியாகவும் போட்டியிட வேண்டும் என்பதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியில் தற்போது கலந்தாலோசிக்கப்படும் பிரபல நிலைப்பாடாக இருக்கின்றது.

எவ்வாறாயினும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேக குழுவுடன் பேச்சுகள் நடத்திய பிறகு, ஐந்தாம் திகதி கொழும்பில் கூடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.