மலையகத்தில் வீடுகள் தாழிறக்கம்; சாமிமலையில் மக்கள் இடம்பெயர்வு | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் வீடுகள் தாழிறக்கம்; சாமிமலையில் மக்கள் இடம்பெயர்வு

ஹற்றன் சுழற்சி, ஹற்றன் விசேட நிருபர்கள்

 

வீடுகள் தாழிறக்கம் மற்றும் வீடுகள் வெடிப்புற்று காணப்படுவதன் காரணமாக, அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாமிமலை - ஓல்டன் பகுதியை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் மேற்பிரிவு, கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்த ஆகிய தோட்டத்தில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியில் தாழிறக்கம் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன.

அத்துடன், குடியிருப்பு பகுதியில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு நீர் வெளியேறுவதனால் அச்சம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

25 குடும்பங்களைச் சேர்ந்த 110 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து கலாசார மண்டபம், சன சமூக நிலையம், சிறுவர் பராமரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.

தற்காலிகமாக தங்கியுள்ள மக்களுக்கு, தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக கிராம சேவகரின் மூலம் உலர், உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களுக்கு மாற்று நடவடிக்கைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதோடு, நிரந்தரமான வீடுகள் எங்களுக்கு வேண்டும் என சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

Comments