நடக்கும் என்பார் நடக்காது! | தினகரன் வாரமஞ்சரி

நடக்கும் என்பார் நடக்காது!

தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தில் என்னத்த கண்ணையா பேசும் ஒரு நகைச்சுவை இண்டைக்கும் மறக்காது. இளைய வட்டங்களையும்கூட அவரின் நகைச்சுவை கவர்ந்திருக்கிறது. சாதாரணமாகப் பேசும்போதும் 'வரும் ஆனால், வராது' என்று சொல்வாங்க.

இப்ப அந்த வசனத்தை அநேகமானவங்க பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. இலங்கைக்குப் புயல் வரும் ஆனால், வராது என்று சொல்கிறார்கள். வந்ததும் வந்தது யாருக்கும் தெரியாமல் ஒரு பெயருடன் வந்திருக்கு. அதுதான் ஒக்கி... அல்லது ஒகி! ஒக்கிதான் (Ockhi) சரியென்று நினைக்கிறன்.

அண்மையிலை தமிழகத்தைப் புரட்டிப்போட்ட புயலுக்குப் பெயர் வர்தா! இப்ப இலங்கைக்கு வந்தது ஒக்கி. காலநிலையைக் கணித்துச் கொள்வதற்கும் அந்தக் கணிப்பைப் பொதுமக்களுக்குச் சரியாகக் கொண்டு செல்வதற்கும் வசதியாக, தெற்காசிய பிராந்திய நாடுகள் சுழற்சி முறையில் புயலுக்குப் பெயர் சூட்டி வருகின்றன. அந்த வகையில் இந்த ஒக்கி என்ற பெயர் பங்களாதேஷின் பெயராகும். ஒக்கி என்றால், பெங்காளி மொழியில் கண் என்று அர்த்தம். அடுத்து வரும் புயலுக்கு இந்தியா பெயர் சூட்டவுள்ளது. அந்தப் புயலுக்குப் பெயர் 'சாகர்'

ஒக்கி இலங்கையில் சுமார் இருபது பேரைப் பலிகொண்டுள்ளது. கேரளாவிலும் கன்னியாகுமரியிலும் எண்பதுக்கும் அதிகமான மீனவர்களைக் காணவில்லையாம். இலங்கையில் ஐந்து மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தகவல் வந்திருக்கிறது. தமிழகத்தில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் சொல்லுது.

இலங்கையிலை அண்மைக்காலமாக வானிலை அவதான நிலையத்தினர் சொல்லுகிற எதிர்வுகூறல் வலு சுப்பரா இருக்கு. ஆனால், ஏனோ தெரியேல்ல, ஒக்கி வாறதைப்பற்றிக் கோட்டை விட்டிட்டாங்க. எங்கடை ஆக்களுக்குப் பொறுப்புகளை எடுக்கிறத்துக்கு நல்ல விருப்பம். ஆனால், பொறுப்ப எடுத்திட்டா சிலவேளை செய்யமாட்டாங்க. மற்றவங்கதான் செய்ய வேணும். வானிலை அவதான நிலையத்திலை டிஜிட்டல் அறிவிப்ப பார்த்தீங்கெண்டால், ஒரு வாரத்திற்கு மேல பழசுதான் இருக்கும். ஓர் இங்கிலீசு பேப்பரிலை எழுதினோன்னதான் திருத்தினவங்க. இப்ப சரியாக தெரியுது. இப்படித்தான் சில நேரங்கள்ல எங்கடை ஆக்கள் காட்ட வேண்டியதை காட்ட மாட்டாங்க. தேவையில்லாததைக் காட்டிக்ெகாண்டு இருப்பாங்க!

காலநிலையைப் பற்றி அறியிறத்துக்கு ஆருக்குத்தான் விருப்பம் இல்லை. அதுக்கு இந்தியாத்தான் என்று உதட்டைக் கடிக்கிறார் நண்பர். ஏன் என்று கேட்டால், அவங்கள் எப்பிடி செய்வாங்கள் தெரியுமா?

ஏன் எங்கடை ஆக்கள் செய்யமாட்டாங்களா?

செய்வாங்கள்...செய்வாங்கள்...புயல் வரும் புயல் வரும்... என்று நாட்டு மக்கள் அச்சத்திலை உறைஞ்சு கிடக்கும்போதும் பாட்டும் கதையும்தானே றேடியோவிலையும் டிவியிலையும் போகுது. செய்ய மாட்டாங்களா? என்று கேட்குறீங்கள்! என்று சற்றே ஆத்திரப்படுகிறார்.

நீங்க சொல்லுவீங்க, பிள்ளைகள் ஏதும் பிழையா கதைச்சுப்போட்டால், பிறகு ஆர் பதில் சொல்றது? என்று கேட்டன். பிழையா ஏன் கதைக்க வேணும்?! விசயத்தைத் தேடிக்ெகாண்டு வர வேண்டியதுதானே! அப்பிடி தேடிக் ெகாண்டு வந்து எங்கடை சனத்திற்குச் சரியான தகவலைச் சொன்னால், வரும் வராது என்று ஏன் கதைப்பான்? இப்ப ஏதாவது தகவலைக் கேட்க வேணுமெண்டால், பேஸ்புக்ைகத்தான் பார்க்க வேண்டிக்கிடக்கு. சில நேரங்கள்ல அதுக்குள்ளயும் ஒரே கூத்தடிப்பாங்கள்!

நீங்க வேற! அந்தப் புக்ைகப் பார்த்துட்டுத்தான் சில பேர் செய்தியாகவும் போடுறாங்க. முகநூலிலை மூழ்கிக் கிடக்கிறவங்க, றேடியோ, ரிவி, பேப்பர் பார்க்காததாலை பிரச்சினையில்லை. இல்லையெண்டால், தன்ரை தகவல் செய்தியாக வந்திருக்ெகன்று நினைச்சு ஒண்டு வருத்தப்படுவார், இல்லாட்டிக்குச் சந்தோசப்படுவார்.

இலங்கையையும் இந்தியாவையும் டிசம்பர் மாதம் இயற்கை அனர்த்தம் தாக்குமென்று இப்ப ஒரு மாசத்துக்கு முந்தியிருந்தே சொல்லிக்ெகாண்டு இருக்கிறாங்க. அதை ஆராய்ந்து பார்க்கிறத்துக்கு ஆக்கள் இல்லை. புயல் அடிக்கிற அண்டைக்குச் சொன்னாங்க, ஒண்டுக்கும் பயப்படாதீங்க, ஒண்டும் நடக்காது என்று. ஆனால், அன்றைக்கு அந்திக்கு ஒண்டுக்குப் போகவும் பயந்துகொண்டு இருந்தது ஆருக்குத்தெரியும். அவங்கவங்களுக்குத்தான் தெரியும்.

தொழில் நுட்பம் நல்லா வளர்ந்துள்ள இந்தக் காலத்திலை போய் குத்து மதிப்பா சொல்லிக்ெகாண்டு இருக்க முடியுமா? முக்கியமான விசயங்களத் தமிழ்ல குடுக்கிறத்துக்கும் முடியல. கேட்டால், எல்லாரும் தமிழ் படிச்சிருக்காங்க. எல்லாத்துக்கும் வேலையும் குடுக்கிறாங்க. ஆனால், வேலை செய்யிறத்துக்குத்தான் ஆட்கள் இல்லை.

டிசம்பர் மாதம் தொடங்கி இன்றைக்கு மூணு நாளாப்போச்சு. இந்த மாதம் முடியிறத்துக்கு முந்தி பெரிய விசயம் எல்லாம் நடக்கும் என்று வதந்திகள் பரப்பிக்கிடக்குது.

அதனாலை, கொஞ்ச நாளைக்கு உங்கட றூட்டிங் வேலைகளை விட்டிட்டுச் சனத்தைப் பற்றிக் கவனம் எடுங்க என்றதுதான் எங்கட கோரிக்ைக. இயற்கையின் மாற்றங்களைப்பற்றிக் கவனிச்சு பொதுமக்களுக்கும் சொல்ல வேண்டியது யாருடைய பொறுப்போ அந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்யுங்க! 

Comments