யாரோடு யார் சேர்வார்! கொதிக்கும் அரசியல் களம் | தினகரன் வாரமஞ்சரி

யாரோடு யார் சேர்வார்! கொதிக்கும் அரசியல் களம்

இப்னு ஷம்ஸ் 
 

இலங்கை அரசியில் வரலாற்றில் இந்த வாரம்(டிசம்பர் முதல் வாரம்) ஒருபோதுமில்லாத அளவு மிக முக்கியமானதாகும்.ஜ.தே.க -சுதந்திரக் கட்சி நல்லாட்சியின் இரு வருட ஒப்பந்த காலம் இவ்வாரம் முடிவடைகிறது. நல்லாட்சி அரசின் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இவ்வாராம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இவை இரண்டு விடயங்கள் தொடர்பிலும் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படும் நிலையில் இந்த வாரம் அரசியல் அரங்கில் முக்கியமாக கருதப்படுகிறது.

நல்லாட்சி அரசில் ஜ.தே.க-, சு.க இடையில் முறுகல் அதிகரித்துள்ள நிலையில் சு.க-ஒன்றிணைந்த எதிரணி இணைவு குறித்து பேச்சுக்கள் தொடர்கின்றன. வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தாலே பேச்சு சாத்தியம் என ஒன்றிணைந்த எதிரணி தரப்பு சு.கவுக்க நிபந்தனை விதித்திருக்கிறது.

இந்த இடியப்ப சிக்கல் இந்த வாரம் அவிழ இருக்கிறது.ஏதோ பெரிய பூகம்பம் வெடிக்கப்போவதாக எதிர்பார்க்கப்பட்டாலும் சிறிய அதிர்வு மட்டும் தான் சாத்தியம் என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.

சு.க -ஒன்றிணைந்த எதிரணிக்கிடையிலான பேச்சு ஜ.தே.க தரப்பில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.குறிப்பாக பின்வரிசை எம்.பிகளையும் பிரதி அமைச்சர் பதவி வகிக்கும் இளம் ஜ.தே.க எம்.பிகளையும் இந்த முன்னெடுப்பு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஜ.தே.க பாராளுமன்ற குழுவில் இந்த கோபம் அப்பட்டமாக வெளியானதாக நம்பகரமாக தெரிய வருகிறது. இளம் எம்.பிகள் பலரும் சு.க-ஒன்றிணைந்த எதிரணி இணையும் முயற்சி பற்றி தமது அதிருப்தியை வெளியிட்டனராம்.இனியும் சு.கவை நம்பாது தனிவழி செல்ல வேண்டும் எனவும் சிலர் கூறியதாக தெரியவருகிறது.

ஆனால் இவற்றை அமைதியாக செவி மடுத்த கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சில நாட்களுக்கு முன்னர் தான் ஜனாதிபதியுடன் இந்த விவகாரம் பற்றி பேசியதை விளக்கினாராம். தான் சுதந்திரக் கட்சி தலைவர் என்ற வகையில் இந்த இணையும் முன்னெடுப்பை தடுக்க முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

முன்பு ஒன்றாக இருந்தவர்கள் என்ற வகையில் கட்சிக்குள் நடக்கும் பேச்சுக்களுக்கு தடைபோட முடியாது அது நியாயமானது எனவும் பிரதமர் தமது எம்.பிகளிடம் எடுத்துரைத்துள்ளார். தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகுமாறும் அவர் எம்.பிகளிடம் கோரியுள்ளதாக அறிய வருகிறது.

ஜ.தே.கவிலுள்ள சிலர் ஜனாதிபதியை விமர்சிப்பது பற்றியும் பிரதமர் இங்கு கருத்து கூறியிருக்கிறார். அது உகந்ததல்ல என்பதனையும் அவர் எடுத்துரைத்தாராம். இதே வேளை திறைசேரி முறி ஜனாதிபதி ஆணைக்குழு ஜ.தே.கவுக்கு எதிரானது என ராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க கூறிய கருத்து தொடர்பில் சில ஜ.தே.க சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். அது அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் இதனை பொருட்படுத்த வேண்டாம் எனவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதே வேளை பின்வரிசை ஜ.தே.க எம்பிகள் சிலர் தாம் வெளிநாட்டிலிருக்கையில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி ஆளும் தரப்பிலுள்ள சு.க அமைச்சர்கள் பற்றி கடுமையாக பேசியது பற்றி சிரேஷ்ட அமைச்சர்களிடம் பிரதமர் கடந்த வாரம் வினவியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தான் இதன் பின்னணியில் இருப்பதாக பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருந்ததாக தெரியவருகிறது. ஆனால் இதனை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பது அவருக்கு பின்னர் தெரியவந்ததாம்.மேல் மாகாணத்தில் உள்ள ஒருவரே இவ்வாறு மின்சார அதிர்ச்சி வழங்க பங்களித்திருந்தாராம்.

இதே வேளை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இணையும் பேச்சுக்கள் சாத்தியமாகாது என நம்பகரமாக தெரியவருகிறது. அமைச்சுப் பதவிகளை கைவிட அநேக அமைச்சர்கள் தயாரில்லையாம்.வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்கும் வேண்டுகோளையும் பலர் விரும்பவில்லையாம்.

எது எப்படியோ சு.க -ஒன்றிணைந்த எதிரணி இணைவு சாத்தியமானாலும் இல்லாவிட்டாலும் டிசம்பர் 8 ஆம் திகதியுடன் சு.க-.ஜ.தே.க ஒப்பந்தம் நிறைவடைவதோடு அரசில் இருந்து அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் மற்றும் எம்.பிகள் அடங்கலான 10 இற்கும் அதிகமான சு.கவினர் எதிரணியில் இணைவது உறுதி என அண்மையில் மஹிந்த அணியில் சேர்ந்த ஒரு எம்.பி கூறினார்.

இது இவ்வாறு இருக்க சு.க- மஹிந்த தரப்பு பேச்சு தேல்வியடையும் நிலையில் ஜ.தே.க-சு.க இடையில் மீண்டும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு தொடந்து இணைந்து செயற்பட இருப்பதாகவும் தெரியவருகிறது. 

Comments