ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ணே முதலாம் திகதி என்ன தினம் அண்ண?”

“முதலாம் திகதியோ... வெள்ளிக்கிழமை”

“கிழமை இல்லண்ண தினத்தைக் கேட்டனான்?”

“தினமோ?”

“ஏதோ நோயின்ட தினமென்டு சொன்னவை”

“ஒன்றாம் திகதியோ எயிட்ஸ் தினமல்லோ”

“உதைத்தான் சொன்னனான்... எயிட்ஸ் தினம்தான்... விழிப்புணர்வு கூட்டம் நடத்துறனாங்கள் ஒருக்கா வாசிகசாலைக்கு காலையில வந்துபோடு என்டு ராசையா மாஸ்டர் சொன்னவர் ஆனால் நான் மறந்து போட்டனான் இப்பதான் அண்ணே.. ஞாபகம் வருகுது”

“டிசெம்பர் முதலாம் திகதி சின்னராசு உலகளாவிய எயிட்ஸ் தினம்”

“எயிட்ஸ் என்றால் என்ன அண்ணே...?”

“எயிட்ஸ் என்ட எச்.ஐ.வி வைரஸ் கிருமியினால ஏற்படுகிற ஒரு பால்வினை நோய் உந்த எச்.ஐ.வி கிருமி சாதாரண சூழலில உயிர்வாழ முடியாது. அது உயிர்வாழுறதுக்கு உயிர்க்கலங்கள் தேவைப்படும் என்டபடியா காற்றிலயோ நீரிலயோ உணவுகளிலயோ உந்த கிருமி உயிர்வாழாது”.

“தெரியாதண்ணே”...

“உந்த வைரஸ் மனிதரிண்ட நோய் எதிர்ப்பு செயற்பாட்டை தாக்கி அழிச்சுப்போடும். உதால தொற்று நோய் கிருமிகளை எதிர்க்கிற சக்தி எங்கட உடலுக்கு இல்லாமல் போடும்.”

“உதுக்கு பிறகு?”

“உதுக்குப் பிறகு சாதாரண தடிமன் வந்தாலும் கதை கந்தல் தான்”.

“உது எப்படி வருகுது?”

“உந்த எச்.ஐ.வி வைரஸ் பாலியல் தொடர்பு மூலம் தான் 80 சதவீதம் ஏற்படுகுது. அதோட நோயற்ற ஒருவரின்ட இரத்தத்தை வேறு ஒருவருக்கு செலுத்தினாலும் இந்த நோய் பரவும்”.

“அண்ண... உந்த எயிட்ஸ் என்டது இலங்கையில கிடக்கோ?

“இலங்கையில 3700 எயிட்ஸ் நோயாளிகள் வரையில இருக்கலாம் என்டு எயிட்ஸ் நோய் தடுப்பு மருத்துவ பிரிவு தலைவர் கூறியிருக்கிறார”

“அப்ப இலங்கையிலயும் இருக்கினம் என்ன?”

“இலங்கையில மட்டுமில்ல யாழ்ப்பாணத்தில இந்த வருஷத்தில மட்டும் 13 பேர் எயிட்சால பீடிக்கப்பட்டிருக்கினம் என்டு யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுது. உதுல என்ன அதிர்ச்சியான விஷயம் என்டா உந்த 13 பேரில 03 பேர் குழந்தையள் மற்றவையில இளம் பெண்கள் தான் அதிகமா இருக்கினமாம்.”

“அப்பிடியோ...?”

“அது மட்டுமல்ல சின்ன ராசு.. யாழப்பாணத்தில எயிட்ஸ் தொற்று நோய்க்கு ஆளானவை நூற்றுக்கணக்கில இருக்கினம். அவையளுக்கு எயிட்ஸ் நோய் தொற்று இருக்குதென்டு அவையளுக்கே தெரியாது என்டும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுது. உது மட்டுமல்ல கடந்த ஒன்றரை வருஷத்தில எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 43 பேர் இனங் காணப்பட்டிருக்கினம். உதுல 23 பேர் மோசம் போயிருக்கினம் என்டு யாழ் போதனா வைத்தியசாலையின்ட பால் நிலை தொற்று நோய் எயிட்ஸ் தலைவர் கூறினவர்”.

“உது எப்படி அண்ண பரவுது?”

“எயிட்ஸ் ஏற்பட்ட ஒருவரோட பாதுகாப்பற்ற முறையில உடலுறவு வைத்தால் பரவும். நோய் உள்ளவருக்கு போட்ட ஊசியை மற்றவைக்கு உபயோகிக்க உது பரவும். தாயிடம் இருந்து பிள்ளைக்கு பரவும். பாலுட்டும் நேரத்திலயும் பரவும் மற்றது நோயுற்ற ஒருவரின் இரத்தத்தை சுகமாக உள்ள ஒருவருக்கு ஏற்றினால் அவருக்கும் நோய் பரவும்”.

“எந்தெந்த நாடுகளில இந்த எயிட்ஸ் நோயாளிகள் அதிகமாக இருக்கினம்?”

“பெரும்பாலம் ஆபிரிக்க நாடுகளிலதான் எயிட்ஸ் நோயாளிகள் அதிகமாக இருக்கினம். எயிட்ஸ் அதிகமாக இருக்கிற 10 நாடுகளின்ட பெயர்களை சொன்னம் என்டா முதலில தென் ஆபிரிக்கா தான். இரண்டாவது நைஜிரியா, மூன்றாவதை சொன்னா நம்ப மாட்டனீ... இந்தியா உதுக்குப் பின்னால் கென்னியா, மொசாம்பிக், தன்சானியா, உகண்டா, அமெரிக்கா, சிம்பாப்வே, ரஷ்யா என்டுதான் புள்ளி விபரங்கள் காட்டுது”.

“அப்ப ஆசியாவில இந்தியாவுக்குத்தான் முதலிடம் என்ன?”

“ஓம். சின்ன ராசு.. இந்தியாவில 25 இலட்சம் பேருக்கு எயிட்ஸ் நோய் இருக்குதென்டு அறிக்கைகள் கூறுது. இந்தியாவில மட்டுமில்ல சின்ன ராசு, எத்தியோப்பியா, இந்தியா, கென்யா, நைஜிரியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில எல்லாம் 25 இலட்சத்திற்கு குறையாத எயிட்ஸ் நோயாளியள் இருக்கினமாம்.. உது மாதிரி பொட்ஸ்வானா, லெசோதோ, சாம்பியா, சிம்பாபே ஆகிய நாடுகளில 20க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதில உள்ளவையில 5 இல் ஒருவருக்கு எயிட்ஸ் இருக்குதாம்.”

“பயமா கிடக்குதண்ண...”

“உதுல எத்தியோப்பியா, நைஜிரியா மற்றும் உகண்டா என்ற ஒவ்வொரு நாட்டிலயும் 10 இலட்சம் பிள்ளையள் அநாதையா கிடக்கினம். அவையின்ட தாய் தந்தையர் எல்லாம் எயிட்ஸ் நோயால மரணிச்சுப் போட்டினமாம்”.

‘நோய் இருக்கிறவைக்கு கிட்ட இருந்தாலும் உது வருமே?”

“இல்லை... இல்லை... கிட்ட இருக்கிறதால, தொட்டுப் பேசுறதால நோய் உள்ளவரிண்ட சோப், கோப்பையல பகிர்ந்து கொண்டாலும் உந்த எச்.ஐ.வி தொற்று ஏற்படாது”.

“உதை தடுக்கிறதுக்கு வழி இருக்கே...?”

“எயிட்ஸ் நோய் வந்துதென்டா. பிறகு குணப்படுத்த முடியவே முடியாது.

பணம் இருந்தால் ஓரளவு கட்டுப்படுத்தலாம் குணப்படுத்தமுடியாது அவ்வளவு தான். ஆனால் பாலியல் தொடர்புகள் இல்லாமல் ஒருவருக்கு ஒருத்தி என்பதை கடைப் பிடிச்சம் என்டா ஒரு ஆபத்தும் இல்லை. உந்த விஷயத்தில சபலைப் புத்தி இருந்ததெண்டா பிரச்சினை தான். ஓரினச் சேர்க்கை, விபச்சாரியல்ட்ட போற பழக்கம் இருந்துதென்டா அவையளுக்கு ஆபத்துதான்”.

“வந்ததென்டா அவ்வளவு தான்.என்ன?”

“எச்.ஐ.வி வைரஸ் கிருமியை கண்டு பிடிச்சி 24 வருஷம் ஆகப் போகுது. உலகம் முழுவதிலயும் 32 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால போராடிக் கொண்டிருக்கினம். ஒவ்வொரு நிமிஷமும் 4 பேர் இந்த நோயாள மரணிக்கினம் என்டா பாத்துக்கொள்ளன்...”

“மெய்யே...”

“எயிட்சுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கினம் என்டு சொல்லிக் கொண்டிருக்கினம். ஆனா கண்டுபிடிச்ச பாடில்லை. ஆராச்சி செய்து கொண்டு தான் இருக்கினம்”.

“எப்படி அண்ண உதுல இருந்து தப்பறது?”.

“எங்கட ஆக்களுக்கு அறிவுரை சொன்னாலும் கேட்க மாட்டினம். சின்ன ராசு உடலுறவின் போது பாதுகாப்பான ஆனுறை பாவியுங்கோ, திருமண உறவுக்கு அப்பால வேறு உறவுகளை வைச்சிக் கொள்ளாதீங்கோ உப்பிடி அவசரம் என்டா ஆனுறையை மறந்து போடாதியள். பின்னால வில்லங்கம் வரலாம் என்டு நினையுங்கோ. சபல புத்தியை கொஞ்சம் தள்ளி வையுங்கோ. உங்க மனைவி பிள்ளைகளை எப்பவும் மனசில வைச்சிக்கொள்ளுங்கோ. அப்படி நினைச்சா உப்படி தவறு செய்ய மாட்டியள்.”

“சரியா சொன்னியள் இப்படி அடிக்கடி அடிச்சி அழுத்தி சொன்னால் தான் எங்கட ஆட்கள் கேட்பினம்.”

Comments