பெண்களை கௌரவப்படுத்தாத மலையக அரசியல் எப்படி உருவாக்கும் பெண் தலைமைத்துவத்தை? | தினகரன் வாரமஞ்சரி

பெண்களை கௌரவப்படுத்தாத மலையக அரசியல் எப்படி உருவாக்கும் பெண் தலைமைத்துவத்தை?

பிரிடோ சந்திரசேகரன்

மலையகத்தில் ஆண்களைப் போலவே பெண்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும், அவர்கள் மத்தியில் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும், அரசியலில் பங்குபற்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டகாலமாகவே அரசு சார்பற்ற நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. இக்கருத்தை எவரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைவர்கள் சர்வதேசப் பெண்கள் தினம் போன்ற தினங்களை சம்பிரதாயத்துக்கு கொண்டாடி அன்றைய தினத்தில் பெண்கள் உரிமைகள் குறித்து மேடைகளில் முழங்கினார்களே தவிர அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆக்கபூர்வமான எதனையும் செய்யாத பின்னணியிலேயே உள்ளூராட்சித் தேர்தல்கள் வந்திருக்கின்றன.

தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் சூழலில், வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 25 விகித இட ஒதுக்கீடு சட்டத்தால் கட்டாயப்படுவதாலும் நாட்டிலுள்ள கட்சிகள் வேட்பாளர்களைத் தேடிவருவதாக அனேகமாக எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. மலையகத்திலும் இதுவரை காத்திரமான பெண் தலைமைத்துவம் கட்டியெழுப்பப்படாததால் அவசர அவசரமாக பெண் வேட்பாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் மலையக அரசியல் கட்சிகளும் தலைவர்களும் உள்ளனர். இவ்வாறு சட்டத்தால் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அரசியலில் பங்குபற்றும் வாய்ப்பு பெண்களுக்கு கிடைக்கும் என்பது உண்மைதான். ஆயினும் மலையகத்தைப் பெறுத்தவரையில் பெண்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்ற மனப்பாங்கு ரீதியான விருப்பம் மலையக அரசியல் தலைவர்கள் மத்தியிலோ அல்லது ஆண்கள் மத்தியிலோ கிடையாது என்பதுதான் உண்மையான யதார்த்த நிலைமை.

எத்தனை மலையகக் கட்சிகள் அல்லது தலைவர்கள் பெண்களை ஊக்குவித்து அவர்களை தலைமைத்துவ பண்புள்ளவர்களாக உருவாக்கியிருக்கின்றன?. குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள் அல்லாமல் திறமையின் அடிப்படையில் எத்தனை பெண்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க கட்சிகள் தயாராக இருக்கின்றன என்ற கேள்விகளை இந்த தலைவர்களிடம் கேட்டால் அவர்களால் நிச்சயமாக மனச்சாட்சியுடன் பதில் சொல்ல முடியாது.

இந்த பின்னணியில் பெண்களுக்கு வேட்புமனுக்களில் இடஒதுக்கீடு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் மலையகத் தலைவர்கள் இருக்கிறார்கள். இதய சுத்தியுடன் இந்த விடயத்தை செயல்படுத்தும் மனப்பாங்கு அவர்களிடம் இல்லாத பின்னணியில் பெண்களுக்கு வேட்புமனு கொடுத்தாலும் அவர்களை வெற்றிபெறச் செய்வதில் கட்சிகள் நேர்மையுடன் உழைக்குமா என்பது மலையகத்தைப் பொறுத்தவரையில் கேள்விக்குறியே. பெண்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வும், தலைமைத்துவமும் கட்டியெழுப்பப்படாமல் அவர்களை வேட்பாளர்களாக நியமித்து ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால் கூட அவர்கள் தலைவர்களின் அடிவருடிகளாகவும், தலைமைகளின் துதிபாடுபவர்களாகவும் ஆகிவிடும் ஆபத்து உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. சந்தர்ப்ப வசத்தால் மலையகப் பிரதேசத்தில் ஒருமுறை பிரதேச சபையொன்றில் தலைவியாக வரும் வாய்ப்பு ஒருபெண்ணுக்கு கிடைத்ததையும் மிகக்குறுகிய காலத்திலேயே அந்த பதவி பறிபோனதை நாம் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். சட்டத்தால் நிர்ப்பந்திக்கப்படுவதாலே தற்போது மலையகப் பெண்களின் அரசியல் பிரவேசம் பற்றி பேசவேண்டியுள்ளது. எனவே மலையகப் பெண்களின் அரசியல் பிரவேசம் நிர்ப்பந்த அரசியலாகியுள்ளது என்பதுதான் உண்மையான நிலைமை! ஆயினும் சட்டம் பெண்களைப் பொறுத்தவரையில் கட்டாயமான ஒரு மாற்றத்துக்கு வழி வகுத்திருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பெண்களும் மலையத்தில் பெண்கள் தலைமைத்துவம் உருவாக வேண்டும் என ஆர்வத்தோடு செயல்படும் சமூக ஆர்வலர்களும் கட்டாயமாகப் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும்.

பெண்களை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை அவசியம்.

மலையக மக்கள் நீண்டகால அடக்குமுறைக்கும், புறக்கணிப்புக்கும் உட்பட்டிருந்து அண்மைக்காலமாகத் தான் மாற்றங்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். மலையக மக்கள் மொத்தமாகவே புறக்கணிக்கப்பட்டதும் பின்தள்ளப்பட்டதும், சுயமாக தீர்மானங்கள் எடுக்கமுடியாததுமான சமூகமாகவே இருந்துவந்துள்ள பின்னணியிலும், மலையக சமூகம் கடுமையான ஆணாதிக்க சமூகமாக இருந்த பின்னணியிலும் பெண்கள் இருமடங்கு புறக்கணிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்கள் தமது பொதுவான ஜனநாயக உரிமைகள், தனிமனித சுதந்திரம் என்பவற்றறைக்கூட அனுபவிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. வாக்களிக்கும் போது கூட தமது கணவன், தொழிற்சங்கங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற முறையில் வாக்களிக்க வேண்டியிருக்கிறதேயன்றி சுயமாக தீா்மானம் எடுக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

குடும்ப பொருளாதாரத்திற்கு அவர்களே அதிக பங்களிப்பு செய்தாலும் குடும்ப வரவு செலவுத்திட்டத்தை தீர்மானிப்பதில் அவர்கள் பங்களிப்புச்செய்ய அனுமதிக்கப்படவில்லை. கோயில்களைப் பரிபாலிப்பதற்கு அதிக நிதிப்பங்களிப்பு செய்பவர்கள் பெண்களாக இருந்தாலும் கோயிலில் கூட அவர்கள் சமமாக மதிக்கப்படவில்லை என்பதுடன் கோயில் கமிட்டிகள் முழுக்கமுழுக்க ஆண் ஆதிக்கத்திலேயே இருந்துவருகின்றன. பெருந்தோட்டபகுதியில் இருக்கும் கோயில் கமிட்டிகள் போன்ற எந்தவொரு அதிகார அமைப்பிலும் பெண்களுக்கு பங்களிப்பு செய்ய எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. கீழ்மட்டத்தில் பெண்களைப் பொறுத்தவரையில் இவ்வாறான நிலை காணப்பட்டதாலேயே பெண்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்த வேண்டுமானால் அடிமட்டத்தில் இருந்தே பெண்களின் தலைமைத்துவம் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும், தங்கள் பேச்சுத்திறனை அதிகரித்துக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், நிதி முகாமைத்துவத்தில் பங்குபற்றும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை பலவருடங்களாகவே பிரிடோ வலியுறுத்தி வருவதுடன் கீழ் மட்டத்தில் பெண்கள் அமைப்புக்களை உருவாக்கி அவைகளை பலப்படுத்தும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளது.

சமூகத்தில் பங்களிப்புச் செய்யவும் இதேவேளையில் பெண்களுக்கு அரசியலில் பங்களிப்பு செய்யும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பெண்களுக்கு கோயில் கமிட்டிகள், கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட கீழ்மட்ட அதிகார அமைப்புகளில் சமசந்தர்ப்பம் வழங்கப்பட்டு அவர்கள் கீழ் மட்டத்தில் இருந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை பிரிடோ நிறுவனம் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே வலியுறுத்தி ஊடகங்கள் மூலம் அந்த கருத்திற்கு பரிந்துரை செய்தபோதும் ஒருசில தனிநபர்கள் மட்டுமே இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

(தொடர் 17ஆம் பக்கம்)

 

Comments