டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை மோசமான ஆட்டம் | தினகரன் வாரமஞ்சரி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை மோசமான ஆட்டம்

எம்.எஸ்.எம். ஹில்மி

இலங்கை-−இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த வாரம் நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. காலநிலை குறுக்கிட்டதால் முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற ஆரம்பித்தது. இலங்கை அணியின் ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன, தலைவர் தினேஷ் சந்திமாலின் அரைச்சத உதவியுடன் 205 ஓட்டங்களுக்கு முதலாவது நாளே சகல விக்கெடடுகளையும் இழந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசியிருந்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி லோகேஷ் ராகுலின் விக்கெட்டை விரைவாக இழந்தாலும் அதன் பின் வந்த அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களும் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர். தலைவர் விராட் கோஹ்லி தனது ஐந்தாவது இரட்டைச் சதத்தைப் பெற்றார். புஜாரா, விஜய், ஷர்மா ஆகியோர் தமது பங்குக்கு சதங்களை விளாச அவ்வணி 6 விக்கெட் இழப்பு 610 ஓட்டங்களைப் பெற்றது. முதல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய இலங்கை வேகப்பந்து விச்சானர்கள் இப்போட்டியில் சொதப்பியிருந்தனர். இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் கூட சிறப்பாகப் பந்து வீசவில்லை.

405 ஓட்டங்கள் என்ற பாரிய பின்னடைவுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி வீரர்கள் பொறுப்பாக நிலைத்து நின்று ஆடமுற்படவில்லை. முன் வரிசை துடுப்பாட்ட வீரர்களும் அதிரடியாக ஆட முற்சித்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். தலைவர் சந்திமால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச்சதம் பெற்றார். இறுதியில் இலங்கை அணி 166 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இனிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் பாரிய தோல்வியடைந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் பற்றி பல விமர்சனங்க்ள் எழுந்த வண்ணமுள்ளது. தற்காலிகப் பயிற்சியாளர் நிக் போத்தா கூட இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை சாடி பல கருத்துக்களைக் கூறியுள்ளார். மூத்த வீரர் அஞ்சலோ மெதியூஸின் துடுப்பாட்டம் இத்தொடர் முழுவதும் படுமோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இலங்கை அணியின் சில அனுபவ துடுப்பாட்ட வீர்ர்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லக்மாலின் துடுப்பாட்டத்தை விட மோசமாக இருப்பதாக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளிவந்தமுள்ளன. இலங்கை அணியியின் மூன்றாவது இலக்க துடுப்பாட்ட வீரரை அவுஸ்திரேலியாவின் 10வது துடுப்பெடுத்தாட வரும் பந்துவீச்சாளருடன் ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு எமது அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டம் மட்டமாகவுள்ளது. இப்போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தம் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக இரட்டைச்சதமடித்த விராட்கோஹ்லி தெரிவானார். டெஸ்ட் வரலாற்றில் 284 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியின் 100வது தோல்வி இதுவாகும். மேலும் இவ்வருடத்தில் இலங்கை அணி சந்திக்கும் 7வது தோல்வி இதுவாகும். இதற்கு முன் 2005ம் ஆண்டிலும் 7 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்திருந்தது.

இத் தோல்வியானது இலங்கை அணி டெஸ்ட் வரலாற்றில் பெறும் மிகப்பெரிய தோல்வியாகும் இதற்கு முன் 2001ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 229 ஓட்டங்களால் தோல்வியுற்றதே இதுவரை மோசமான தோல்வியாக இருந்தது.

இப்போட்டியின் போது இவ்வருடத்தில் 50க்கு மேல் டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய 4 வது வீரராக ரவிந்தந்திரன் அஸ்வின் சாதனை படைத்தார். இதற்கு முன் தென்னாபரிக்க வீரர் ரபடா, இலங்கை வீரர் ரங்கன ஹேரத், அவுஸ்திரேலிய வீரர் நதன் லயான் ஆகியோர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அஸ்வின் இச்சாதனையை தொடர்ந்து மூன்று வருடங்கள் புரிந்துள்ளார். இதற்கு முன் தொடர்ந்து மூன்று வருடங்கள் 50 விக்கெட்டுக்கள் என்ற சாதனையை அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வோனும், இலங்கை சுழற்பந்து ஜாம்பவானுமான முரளிதரனும் புரிந்துள்ளனர்.

இப்போட்டியின் போது இந்திய சுழற்பந்து ஜோடியான அஸ்வின் - ஜடேஜா இருவரும் இணைந்து 300 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக இந்திய அணியின தொடர் வெற்றிகளுக்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளனர். இந்த ஜோடியின் திறமையினால் 2015 முதல் இதுவரை இந்திய அணி தொடர்ந்து 9 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலப் பகுதியில் 28 டெஸ்ட் போட்டிகளில் இந்தப் பந்து வீச்சு ஜோடி 300 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் அஸ்வின் 163 விக்கெட்டுகளையும் ஜடேஜா 143 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இப்போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றொரு சாதனையையும் படைத்தார். இதுவரை 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர் டெனிஸ் லிலி படைத்திருந்த சாதனையை அவர் 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி முறியடித்துள்ளார்.

இப்போட்டியில் இந்தியத் தலைவர் பெற்ற இரட்டைச்சதமானது இவ்வருடத்தில் அவர் பெறும் 10வது சதமாகும். ஒருவருடத்தில் மூவகைப் போட்டிகளிலும் அதிக சதங்கள் விளாசிய தலைவர்கள் வரிசையில் 2005-2006 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கிபொன்டிங் மற்றும் 2005ம் அண்டு தென்னாபிரிக்க தலைவர் கிரஹம் ஸ்மித் ஆகியோர் 9 சதங்கள் விளாசியிருந்த சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.

மேலும் டெஸ்ட். போட்டிகளில் அரைச்சதமடித்த பின்பு அதைச் சதமாக மாற்றிய தலைவர்களுள் விராட் கோஹ்லியே முனனிலையில் உள்ளார். இவர் 16 முறை அடித்த அரைச்சதங்களில் 12ஐ சதங்களாக மாற்றியுள்ளார். இது 75 சதவீதமாகும். இதற்கு முன் அவுஸ்திரேலியத் தலைவர் பிரட்மன் 21 அரைச்சதங்களில் 14ஐ சதங்களாக மாற்றியுள்ளார். இது 67 சத வீதமாகும்.

மேலும் இந்தியத் தலைவர்கள் விளாசிய கூடிய சாதனையாக சுனில் கவஸ்காரின் 11 சதங்களே இருந்தது அச் சாதனையையு்ம் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் கோஹ்லி முறியடித்துள்ளார்.

Comments