ஆதரவாக 155 எதிராக 56 2018 பட்ஜட்: 2/3 பெரும்பான்மையால் சபையில் நிறைவேற்றம் | தினகரன் வாரமஞ்சரி

ஆதரவாக 155 எதிராக 56 2018 பட்ஜட்: 2/3 பெரும்பான்மையால் சபையில் நிறைவேற்றம்

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

 

2018ஆம் நிதியாண்டுக்கான தேசிய அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நேற்று சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வரவு- - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அதேவேளை இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்ததுடன் மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர் கட்சியான மஹிந்த ஆதரவு அணியும் எதிராக வாக்களித்தன.

நேற்றைய வாக்களிப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த சிவசக்தி ஆனந்தன், மஹிந்த ராஜபக்ஷ உட்பட 13 பேர் வாக்களிப்பின்போது சபைக்கு சமூகமளிக்கவில்லை.

2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நீலப் பசுமைப் பொருளாதாரத்தை கருப்பொருளாக கொண்டதாக நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவால் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு மீது கடந்த 10,11,13,14,15, 16ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூம் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. கூட்டு எதிர்க்கட்சியான மஹிந்த அணியும் மக்கள் விடுதலை முன்ணியும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தன.

இரண்டாம் வாசிப்பை தொடர்ந்து கடந்த 17ஆம் திகதிமுதல் நேற்று 9ஆம் திகதிவரை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நடத்தப்பட்டது. நேற்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுகள் மீதான இறுதி விவாதம் நடைபெற்ற நிலையில் மூன்றாம் வாசிப்பை நிறைவேற்ற ஜே.வி.பியின் தலைவரும் எம்பியுமான அநுரகுமார திஸ்ஸாநாயக்க வாக்கெடுப்பை கோரினார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலேயே ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் கிடைத்தன. 

Comments