உயிரிழப்பு 15ஆக உயர்வு | தினகரன் வாரமஞ்சரி

உயிரிழப்பு 15ஆக உயர்வு

கடும் மழை, வெள்ளம், சூறைக்காற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதுடன் காணாமற்போன 4 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

காணாமற்போனதாக கருதப்பட்ட மற்றுமொரு மீனவர் நேற்று பலபிட்டி ஆஸ்பத்திரிக்கருகே கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 27 ஆம் திகதி தொடந்தூவ பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காகச் சென்றவர் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலின்படி 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, 16 மாவட்டங்களில் 23,884 குடும்பங்களைச் சேர்ந்த 77,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் காயமடைந்துள்ளதுடன் 536 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 20,360 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். களுத்துறை, கொழும்பு, காலி, கம்பஹா, பதுளை மாவட்டங்களிலிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் 8649 குடும்பங்களைச் சேர்ந்த 33,977 பேரும், காலி மாவட்டத்தில் 5291 குடும்பங்களைச் சேர்ந்த 19,960 பேரும், கொழும்பில் 4905 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்ததாக பதுளை மாவட்டத்தில் 1320 குடும்பங்களைச் சேர்ந்த 4964 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 4961 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதுடன் இன்னும் இரண்டொரு தினங்களில் ‘சாகர்’ சூறாவளி தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால்,பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

10,000 ரூபா இன்று ஞாயிற்றுக்கிழமையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அனர்த்தங்களை எதிர்நோக்கிய பொதுமக்களுக்கு 10,000 ரூபா நட்டஈடு வழங்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந் நட்டஈட்டுத் தொகைகளை பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சென்று இன்று ஞாயிற்றுக்கிழமையும் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அடிப்படையில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக முழு நட்டஈட்டுத் தொகையில் ஆரம்ப தொகை நேற்று பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்பொருட்டு, அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் இன்று திறந்திருக்கும்.

ஏதேனும் அனர்த்த நிலைமைகள் தொடர்பாக தகவல்கள் கிடைத்திருப்பின் அது தொடர்பாக பிரதேச செயலாளருக்கோ அல்லது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 1902 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

 

Comments