ரயில்வே தொழிற்சங்கம் பிடிவாதம்; அத்தியாவசிய சேவை பிரகடனம் உதாசீனம் | தினகரன் வாரமஞ்சரி

ரயில்வே தொழிற்சங்கம் பிடிவாதம்; அத்தியாவசிய சேவை பிரகடனம் உதாசீனம்

படங்கள்: சமன் மெண்டிஸ்

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளபோதிலும் நேற்றும் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பவில்லை.

அரசாங்கத்தின் நடவடிக்ைகயைப் புறந்தள்ளியுள்ள ரயில்வே ஊழியர் சங்கம், தமது கோரிக்ைக க்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

நேற்று மூன்றாவது நாளாகவும் ரயில் சேவைகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக நேற்றும் பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கினர். ரயில் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியிருப்பதால், அனைத்து ஊழியர்களும் கடமைக்குத் திரும்ப வேண்டும் என்றும் இல்லையேல், சமூகமளிக்காத ஊழியர்களின் பதவி வெற்றிடமாகக் கருதப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளதுடன், க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும் தொழிற்சங்கத்திடம் கோரிக்ைக விடுத்துள்ளார்.

இருப்பினும் தொழிற்சங்கம் அவரது கோரிக்ைகயை நிராகரித்துள்ளதுடன், அரசாங்கம் அடக்கு முறையைப் பிரயோகித்து தமது கோரிக்ைககளை மழுங்கடிக்க முயற்சிக்குமானால், அதற்கு முகங்கொடுக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் முடிந்தால் தமது மூவாயிரம் அங்கத்தவர்களையும் பதவி நீக்கம் செய்யுமாறும் சவால் விடுத்துள்ளனர்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்காக ரயில் சேவையை மேற்கொள்வதற்குத் தாங்கள் விருப்பத்துடன் இருக்கின்றபோதிலும் அதனைச் சரியான முறையில் அணுகத் தவறிவிட்டது என்றும் மாணவர்களுக்கு ரயில் சேவை இன்மையால் அசௌகரியம் ஏற்படுமாயின் அரசாங்கமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் 'லொக்ேகா மோட்டிவ் ஒப்பரேஷன் எஞ்சினியரிங் யூனியன்' தலைவர் லால் பரணவிதான தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், நேற்று முன்தினம் மாலை வரை மூன்று சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. எனினும், இப்பேச்சுவார்த்தைகள் எவற்றிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதியின் செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, தொழிற்சங்கம் போராட்டத்தைக் கைவிட இணக்கம் தெரிவித்ததாகவும் பேச்சுவார்த்தை நிறைவுற்று வெளியில் வந்த சில நிமிடங்களில் தாங்கள் தொழிற்சங்கப்போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அறிவித்ததாகவும் அமைச்சு வட்டாரங்கள் நேற்று தினகரனுக்குத் தெரிவித்தன.

எக்காரணம் கொண்டும் தமது கோரிக்ைககள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்த ரயில்வே தொழிற்சங்கம், இனிமேலும் அரசாங்கம் அடக்கு முறையைப் பிரயோகிக்குமானால், தற்போது சேவையில் விடப்பட்டிருக்கும் ஐந்து ரயில் சேவைகளையும் நிறுத்தப்போவதாகவும் மேலும் விமான நிலையத்திற்கு எரிபொருள் எடுத்துச் செல்லும் ரயிலையும் நிறுத்த முடியுமென்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்ைக விடுத்துள்ளது.

அரசாங்கம் அறிவித்துள்ள அத்தியாவசிய சேவைப் பிரகடனம் உத்தியோகபூர்வமாகத் தமக்குக் கிடைக்கவில்லையென்றும் ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்துகொண்டதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

சம்பளப் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது ஏனைய அரச சேவைகளும் பாதிக்கப்படலாம் என்ற காரணத்தினால், ரயில்வே ஊழியர்களின் சம்பளப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதற்குச் சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ரயில்வே ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதால், எந்தவோர் அரச சேவைக்கும் பாதிப்பு ஏற்படாது. சிலரது அழுத்தங்கள் காரணமாகவே இது நிறுத்தப்பட்டதாகவும் ரயில்வே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ரயில்வே பொது முகாமையாளருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும் சாதகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதேவேளை, ரயில்வே ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக நிதி அமைச்சிலும் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது.

Comments