ஹம்பாந்தோட்டை துறைமுகம்; சீன நிறுவனத்திற்கு கையளிப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஹம்பாந்தோட்டை துறைமுகம்; சீன நிறுவனத்திற்கு கையளிப்பு

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்

 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன கம்பனிக்கு கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (09) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஒப்பந்தம் அடிப்படையில் ஆரம்ப முதலீடான 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை செயற்படுத்தி நிருவகிக்கவுள்ள சைனா மேர்ச்சன்ட் குரூப் லிமிட்டட் நிறுவனம் நேற்றைய இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கத்திடம் கையளித்தது. இதனடிப்படையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன கம்பனிக்கு கையளிப்பதற்காக கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் நேற்று (9) முதல் அமுலுக்கு வந்தது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான காசோலையைப் பெற்றுக் கொண்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

முக்கிய அமைச்சர்கள், இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியேன்லிங் மற்றும் சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

300 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்ெகாண்டதன் பின்னர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், நான்கு தசாப்தத்துக்குப் பின்னர் பாரிய முதலீடொன்று இலங்கைக்கு கிடைத்திருப்பது இதுவே முதன்முறையாகுமென பிரதமர் தெரிவித்தார்.

 

 

அத்துடன் இப்பணம் விசேடமான நிலையான வைப்பில் வைப்புச் செய்யப்பட்டு பின்னர் வெளிநாட்டுக் கையிருப்பில் சேர்த்துக்ெகாள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் ஆட்சியை பொறுப்பேற்றபோது வாக்குறுதியளித்ததுபோல் ஹம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையில்லாமல் திருப்பி வழங்கப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,-

அடுத்ததாக நாம் தெற்கை அபிவிருத்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். இதில் கைத்தொழில் பேட்டையை நிறுவி அதில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளை ஆரம்பிப்போம். இதில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சீமெந்து தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச்செயற்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் றுகுணு அபிவிருத்தி அதிகாரசபை கவனத்திற் கொள்ளும்.

இவற்றின் மூலம் ஆயிரக்கணக்காள டொலர்கள் நாட்டுக்குள் வரும். இது மக்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும். எமது இலக்கு எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையில்லாத சிறந்த நாட்டை உருவாக்குவதேயாகும் என்றும் தெரிவித்தார். 

Comments