ஆணைக்குழுக்களின் வரலாற்றில் | தினகரன் வாரமஞ்சரி

ஆணைக்குழுக்களின் வரலாற்றில்

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து காலத்திற்குக் காலம் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த ஆணைக்குழுக்களின் மூலம் முன்வைக்கப்படும் விசாரணை அறிக்ைககள், பரிந்துரைகள் பற்றி நடவடிக்ைக எடுக்கப்படுவது இல்லை. அதனால், ஆணைக்குழுக்கள் என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்ைக என்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் உண்டு. அந்த அபிப்பிராயத்தைப் பொய்யாக்கும் வகையில், பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்ைக தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்ைககளை முன்னெடுத்திருக்கிறார். இது வரலாற்று நடவடிக்ைக என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள விடயங்கள் பற்றி ஜனாதிபதி வெளிப்படையாக தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளதுடன் உரிய நடவடிக்ைக எடுப்பதற்கான பணிப்புரைகளையும் விடுத்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற தகவல்களுக்கு ஒப்பான நிலைமை 2008 ஆண்டிலிருந்து இடம்பெற்று வந்திருப்பதாக ஆணைக்குழு கருதுகின்றது. அவ்விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு அதாவது 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதனை இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் அதற்கமைய கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்றும் ஆணைக்குழு அறிவுறுத்துகிறது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) நிதியே அக்காலத்தில் அதிகளவில் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

2015/2016 காலப்பகுதிக்கான ஆணைக்குழுவின் அறிக்கை இடைக்கால அறிக்கை அல்லாது 1,257 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கையாகும். இப்பணியை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு 10 மாத காலத்தை செலவிட வேண்டியிருந்தது.

மத்திய வங்கியின் கட்டமைப்பு, அரச கடன் திணைக்களம், நேரடி பிணைமுறி வழங்கல், பிணைமுறி இறைமை மற்றும் பிணைமுறியை ஏலத்தில் விடுதல் ஆகியவற்றின் சாதக பாதக நி​ைலமைகளை தெளிவுபடுத்தி இருக்கின்றது.

அர்ஜுன் மகேந்திரனதும் வங்கி உத்தியோகத்தினர்களினதும் வெளியிலிருந்து செயற்பட்ட நபர்களினதும் நிறுவனங்களினதும் பங்கேற்புடனும் பேர்பச்சுவல் ரெஸறிஸ் நிறுவனம் சட்டத்திற்கு முரணான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளது என்பதை இந்த அறிக்கை கூறுகின்றது.

2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் ஆகக்குறைந்தது 688 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது. இத்தொகையானது இந்த விசாரணைக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஈட்டிய இலாபமாக இருப்பதால் இதைவிட கூடுதலான இலாபத்தை இந்நிறுவனம் ஈட்டியிருக்க கூடுமென ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

விசாரணைகளிலிருந்து வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டாம் நிலைச் சந்தையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11,145 மில்லியன் ரூபாயாகும். இதனால் ஊழியர் சேமலாம நிதி உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8,529 மில்லியன் ரூபா ஆகும். அதாவது 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் முடிவுகள் தொடர்பில் மத்திய வங்கியின் உயரதிகாரிகள் செயலிழந்த நிலையில் இருந்ததாகவும் அவர்கள் எந்தவித கேள்விகளையும் எழுப்பாது செயலிழந்த நிலையில் இருந்ததால் தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியிருக்கலாமென ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அத்தோடு அர்ஜுன் மகேந்திரன், முறைகேடான முறையிலும் தவறான முறையிலும் தீர்மானங்களை மேற்கொண்டு பிணை முறி ஏலம் தொடர்பான செயற்பாடுகளில் தொடர்புபட்டிருப்பதுடன் உள்ளக தகவல்களை வெளித்தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இலாபமீட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.

அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பது தொடர்பான பிரதமரின் அதிகாரங்கள் முறையானது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர், அர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் பற்றியும் அதிலும் குறிப்பாக அர்ஜுன் மகேந்திரன் கொடுத்த வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்றும், எனினும் பிரதமர் அப்படி நடந்திருக்கக் கூடாது எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இந்த விடயங்கள் கோப் விசாரணைக்குழுவின் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிரதமரால் அர்ஜுன் மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமான, அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த ‘வோல்ட் அன் றோ’ நிறுவனத்தினால் ‘பென்ட் ஹவுஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான ‘பென்ட் ஹவுஸ்’ மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தியிருப்பதையிட்டு பொறுப்பேற்க வேண்டியவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவே என்பதும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும், ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முறைகேடான விதத்தில் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது. அதன் உண்மையான தொகையை அறிவதற்கு சட்டரீதியான ஆய்வு (தடவியல் தணிக்கை பரிசோதனை Forensic Audit Examintion) மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் செயற்பாடுகள் காரணமாகவே ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி தவறான முறையில் உபயோகப்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருப்பதாக கூறும் இவ்வறிக்கை, சம்பந்தப்பட்ட தரப்பினரை இனங்கண்டிருப்பதுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. 2008 முதல் 2015 வரையில் இடம்பெற்ற பிணைமுறி வழங்கல் தொடர்பில் ஆராய்வதற்கான உரிமை இவ்வாணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறாமையினால் அதைப்பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்படுகின்றது.

ஆணைக்குழுவை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் ‘பேர்பச்சுவல்’ நிறுவனத்திடமிருந்து அறவிடப்படவேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய வழக்கு தொடுப்பதற்கு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தில் ஏற்படுத்த வேண்டிய ஒரு சிறிய மாற்றத்தைப் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவை பலப்படுத்தி அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை நீண்டகாலத்திற்கு முன்பே எடுக்கவேண்டியிருந்த போதிலும் தற்போதே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் இரகசியத்தன்மை செயற்பாட்டு முறைமை, கணக்காய்வு முறைமை ஆகியன மிகவும் பலவீனமாக இருந்து வந்திருக்கின்றது. தொலைபேசி உரையாடல் பதிவுமுறை, கண்காணிப்பு ​ெகமரா முறைமை ஆகியன எதுவுமே மத்திய வங்கியினுள் இருந்திருக்கவில்லை. இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த ஆணைக்குழு விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மத்திய வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறான முறைகேடுகள் ஊழல்கள் ஆகியன எதிர்காலத்தில் மத்திய வங்கியினுள் இடம்பெறும்வதை தவிர்ப்பதற்கு ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மூன்று சட்டவாக்கங்களை விரைவாக தயாரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மாஅதிபரையும் நீதியமைச்சரையும் ஜனாதிபதி கேட்டுக்ெகாண்டுள்ளார்.

அரசுக்கு ஏற்பட்டிருக்கின்ற நட்டமான 11,145 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மீள் அறிவீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதற்கும் எந்தவிதத்திலும் பின்னிற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி விசேடமாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘பேர்பச்சுவர்’ நிறுவனம் பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த பெருந்தொகை வருமானமான 11,145 மில்லியன் ரூபாயை ஐந்து மாதங்களுக்குள்ளேயே ஈட்டியிருக்கின்றது.

இவ்வறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மக்களுக்கு வெளிப்படையான அறிக்கையாக முன்வைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உரிய முறையில் துரிதமாக முன்னெடுப்பதற்கும் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளுக்கமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும்போது அந்த வழக்குகளுக்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தாத வகையில் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் தகவல்களின் வெளிப்படைத்தன்மை பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆணைக்குழுவுடன் தொடர்புபடாத தன்னால் இதற்கு முன் நியமிக்கப்பட்ட இன்னுமோர் ஆணைக்குழுவின் அறிக்கையும் தமக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி,

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அரச வள துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே தனது அறிக்ைகயைச் சமர்ப்பித்திருக்கிறது.

இந்த ஆணைக்குழுவின் 34 விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப் பட்டிருக்கின்றன.

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அரசவள துஷ்பிரயோகம் பற்றிய விசாரணை நடத்துவதற்கான ஆற்றலையும் அறிவையும் அனுபவங்களையும் கொண்ட உத்தியோகத்தர்களின் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தக்க தகுதி வாய்ந்தவர்களை அந்தந்த நிறுவனங்களுக்கு நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது நாட்டில் அந்தப் பயிற்சிபெற்ற தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதனால் அந்த உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்து அதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருக்கின்றது.

திணைக்களங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களின் போது அதற்கான தகுதி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவ்வாறான உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் உரிய தகமைகளைப் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதை திட்டவட்டமாக இவ்வாணைக்குழு எடுத்துரைத்திருக்கின்றது.

பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அரசவள துஷ்பிரயோகம் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவை கொண்டு நடத்துவதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட செலவீனத்தைவிட அதிகமான இலாபத்தை அரசுக்கு பெற்றுக் கொடுத்திருப்பதாக இவ்வாணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இலஞ்சம் தொடர்பான வழக்குகளை கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் முறையீடு செய்வதன் மூலம் உரிய பலன் கிடைக்கவில்லை, சாட்சியாளர்கள் தூரப்பிரதேசங்களிலிருந்து வரவேண்டியிருப்பதே அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதனால் இக்குறையை நிவர்த்திசெய்து கொள்வதற்கு குறைந்தபட்சம் மாகாண ரீதியில் இவ்வாறான நீதிமன்றங்களை செயற்படுத்த வேண்டுமென இந்த ஆணைக்குழு பரிந்துரைத்திருக்கின்றது.

இந்த ஆணைக்குழுக்களை நியமிப்பது தொடர்பிலும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்ததுடன் இதன் செயற்பாடுகளைப்பற்றி அறிந்துகொள்வதற்கான ஆவலை வெளிப்படுத்தி இருந்தது. இந்த ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு முன்பாக குறிப்பாக இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் போது இந்த ஆணைக்குழுவுக்கும் இதற்கு முன் இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கும் நேர்ந்த கதியே நேருமென சிலர் கூறினார்கள்.

அத்தோடு காலத்தை கடத்துவதற்காகவே இவ்வாறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதாகவும் இன்னும் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். இவ்வாறான கருத்துக்கள் பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன. இருப்பினும் இந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளைப்பற்றி நாம் மனமகிழ்ச்சி அடையவேண்டும். அதனால் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைத்து அங்கத்தவர்களுக்கும் அதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த ஆணைக்குழுக்களை நியமித்ததைப் பற்றி சில தரப்பினர்கள் வெளியிட்ட விமர்சனங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இந்த ஆணைக்குழுக்கள் எந்தவோர் அரசியல் கட்சியையும் குறிவைத்து முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் இந்த இரண்டு ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகளின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போதும், சட்ட நடவடிக்கைகளின் போதும், வழக்கு தொடுக்கப்படும் போதும் இரண்டு பிரதான கட்சிகளினதும் உறுப்பினர்கள் இவற்றிற்கு முகம்கொடுக்க வேண்டிய குற்றம் சுமத்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.அதனால் எந்தவொரு கட்சியையும் இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை, முன்னெடுக்கப்படாது என்பதனை ஜனாதிபதி ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் ஆவணங்கள் குறிப்பாக 20-08ஆம் ஆண்டு முதல் 2015 வரையிலான காலப்பகுதிக்குரியவற்றைப் பாதுகாப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடவடிக்ைக எடுப்பதற்கு மூன்று அமைச்சுகளின் செயலாளர்களைக் கொண்ட குழுவொன்றைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருக்கிறார். ஆக, ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்ைக எடுக்கப்பட்ட ஓர் ஆணைக்குழுவாக இந்தப் பிணை முறி ஆணைக்குழு விளங்கும் என்பதில் மாற்றமில்லை.

அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமான, அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த ‘வோல்ட் அன் றோ’ நிறுவனத்தினால் ‘பென்ட் ஹவுஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான ‘பென்ட் ஹவுஸ்’ மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தியிருப்பதையிட்டு பொறுப்பேற்க வேண்டியவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவே என்பதும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது. 

 விசு கருணாநிதி.

Comments