ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு இன்று | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கூட்டமும் இன்று 07ஆம் திகதி காலை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறுகிறது.

கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மாநாடு நடைபெறும்.

கட்சியின் 70ஆவது மாநாடு கடந்த செப்டம்பர் மாதம் இரத்தினபுரியில் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலையினால் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்கின்றவர் யாராக இருந்தாலும் அவர் தலைவராவார் என்று ஸ்பிறாட் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். மேலும் தலைமை என்பது நடத்தை முறை இது பிறரின் நடத்தை முறையை பாதிக்குமே தவிர பிறரின் நடத்தை முறை தலைவரின் நடத்தை முறையை பாதிக்காது என்று லாட்பியர், பிரான்ஸ் வொர்த் என்ற அறிஞர்கள் குறிப்பிடுகிறனர். இவ்வாறாக பார்க்கும் போது தலைவரின் நடத்தையானது அவர் சார்ந்த அமைப்பினை பாதிக்கும் என்ற கருத்தினை பெறக்கூடியதாக உள்ளது. எனவே தலைமைத்துவமானது மிகவும் முக்கியமானதும், அதன் தன்மையினை பொறுத்தே கட்சியின் செயற்பாடும் அமையும் என எம்மால் அறிய முடிகின்றது.

அரசியற் கட்சி எனும் போது, ஓர் இணைந்த அரசியல் சமூகமாக செயற்படுவதும், ஓரளவிற்கு நெறிப்படுத்தப்பட்டதுமான ஓர் அமைப்பு என்றும் அது குடிமக்களால் உருவாக்கப்படுமாயின் அதுவே அரசியற் கட்சி என்று குறிப்பிடலாம். ஓர் அரசியற் கட்சியின் வெற்றிக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும், அக்கட்சியின் தலைமைத்துவத்திலேயே அவற்றை ஒழுங்கப்படுத்தி செயற்படுத்தக் கூடிய பலம் காணப்படுகின்றது. ஆகவே கட்சியானது நிலைத்து ஆட்சிப்பீடத்தை கைப்பற்றுவதும் அதன் வெற்றி தோல்வி என்பன தலைமைத்துவத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எந்தவொரு கட்சியானாலும் ஒரு தலைமைபீடத்தைக் கொண்டே காணப்படும். அதில் ஒரு தலைவர் காணப்படவே செய்கின்றார். மேலும் ஆட்சி பீடத்தை அமைக்கும் கட்சியின் தலைவர் நாட்டின் தலைமைத்துவத்திற்கு முன்மாதிரியானவராக போற்றப்படுகின்றார். இவ்வாறாக ஓர் அரசியற் கட்சிக்கும் தலைமைத்துவத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது.

ஒரு கட்சியின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி செயற்படுத்துவதற்கும் வினைத்திறனான செயற்பாடுகளையும், முன்னோக்கிய பயணத்திற்கும் தலைமைத்துவம் முக்கியமானதாகும். கட்சியானது பொதுஜன அபிப்பிராயத்தை ஒன்றுதிரட்டி அதனை நடைமுறைப்படுத்துவதும், தேசிய ஒருமைபாட்டை வளர்த்தலும் தனது முக்கிய பணியாகும். இதனோடு உறுதியான அரசாங்கத்தை அமைத்தலும், பலமான எதிர்க்கட்சியினை உருவாக்குவதும் இதன் பிரதான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடுகளை வெற்றிகரமானதாக செயற்படுத்த கட்சி தலைமைத்துவமானது முக்கியமானதாகும்.

கட்சியானது வெற்றிபெறுவதற்கு பலவழிகள் காணப்படுவதுடன் அவற்றை ஒழுங்கான முறையில் முறைப்படுத்தி வழிநடத்துவது தலைமைத்துவத்திலேயே தங்கியுள்ளது. இதனாலேயே கெபினட் ஆட்சி முறையில் ஆட்சி அமைக்கும் கட்சித் தலைவரை சூரியனை ஒத்தவர் என்று குறிப்பிடுகின்றனர். இதனூடாக கட்சியில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ளக் கூடியதாய் உள்ளது. ஒரு கட்சியானது தமது சூழலுக்கு ஏற்ப செயற்பட்டு மக்களின் நலன்களை பேணி, சிறந்த கொள்கைகளை வகுத்து செயற்படுமாயின் அக்கட்சியானது நிலைத்து நிற்கக் கூடியதொன்றாக காணப்படும். இருப்பினும் சில கட்சிகளில் தலைமைத்துவம் மாறும் போது கொள்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். அது தலைமை ஏற்பவரின் தன்மையினைப் பொருத்து அமையும்.

இந்தவகையில் இலங்கையின் கட்சி முறையானது காலணித்துவ காலத்தில் தோற்றம் பெற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. குறிப்பாக 1940களிளேயே வலதுசாரி கொள்கையுடைய கட்சிகளின் தோற்றம் இடம்பெற்றன. இவ்வாறாக காலனித்துவ காலத்தில் தோற்றம்பெற்ற கட்சிகள் தமது தலைமைத்துவத்தில் பல முரண்பாடுகளைச் சந்திக்காமல் இல்லை. இதனால் பிளவுகள் ஏற்பட்டு, பல கட்சிகள் தோன்ற ஏதுவானது. என்றாலும் ஐக்கிய தேசிய கட்சி அதன் கட்டுக்ேகாப்பை இழந்துவிடாமல், ஆரம்பம் காலந்தொட்டு ஒன்றுபட்ட நிலையில் இருந்து வருகிறது. கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்ற காலத்திலிருந்து தன்னுடைய நேர்மையான அரசியல் போக்கிலிருந்து சற்றும் பிசகாமல் தூய்மையான செல்நெறியைத் தொடர்ந்து வருகிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அவர் தமது தூய்மையான அரசியல் செயற்பாட்டை பிணை முறி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க சென்ற சமயத்தில் மீள உறுதிப்படுத்தியிருந்தார்.

பில்லியன் கணக்கான ரூபாய் நட்டத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்குத் தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்று சொல்லப்பட்டாலும், நாட்டின் பிரதமர் ஒருவர் சுயமாக முன்வந்து சாட்சியமளிக்க சென்றமையானது அவரின் தூய்மையான அரசியலை வௌிப்படுத்தியது.

ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் கைப்பற்றிக் கொள்ளவும் என்ன கைங்கரியத்தையேனும் மேற்கொள்ளத் தயாராக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பிரதமர் பதவிக்குப் பயந்தவர் அல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 'ஜென்ரில்மன்' அரசியல் போக்கினை 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிச் சிந்தித்தால் புரிந்துகொள்ள முடியும். 1993ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரதமராகவிருந்த டி.பீ.விஜேதுங்க பதில் ஜனாதிபதியானார். அந்தக் காலப்பகுதியில் அதாவது 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டி.பீ.விஜேதுங்க ஆட்சியமைப்பதற்குப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தார். எனினும், வெற்றிபெற்றது சந்திரிகா என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் இருந்து சூட்கேசுடன் வெளியேறினார். இந்தச் சம்பவம் எவருக்கும் மறந்துபோகாத ஒரு வரலாற்றுப் பதிவாகும். அதேபோன்று ஜென்ரில்மன் அரசியலிருந்து தாம் விலகப்போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அவர் பிணை முறி ஆணைக்குழு முன்பாக ஆஜராகியிருக்கிறார். இஃது உண்மையில் நாட்டின் நல்லாட்சிக்கும் புதிய அரசியல் கலாசாரத்திற்கும் சிறந்த முன்னுதாரணமாகும்.

இந்தப் பின்னணியில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் ​வேளையில் கட்சியின் 70ஆவது மாநாடு இன்று நடைபெறுகிறது.

இரண்டரை வருடங்களாக தேசிய அரசாங்கத்தினூடாக ஐக்கிய தேசியக் கட்சி கிராமங்களுக்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் அதனைப் பிரசாரப்படுத்துவதற்கு எந்தவித அரச நிதியையும் செலவிடவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காது பிரசாரங்களுக்காக பெருந்தொகை அரச நிதியை செலவிட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி கல்வி, வீதி அபிவிருத்தி, மதத் தலங்களைப் புனரமைத்தல், சுகாதார சேவைகள் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களையும் கிராம மட்டத்தில் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்ற கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குமான விசேட மாநாட்டின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த இரண்டரை வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

சகல தேர்தல் சட்டங்களையும் முறையாக பாதுகாத்து ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு முன்மாதிரியாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் செயற்படுவது அவசியமென இதன் போது வேட்பாளர்களுக்கும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கிய அவர், தேர்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் அவர்களுக்கு விசேட பணிப்புரைகளையும் வழங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கிராமப்புற மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்ட பிரதமர் புதிய முறைமையின் கீழ் இடம்பெறும் இம்முறை தேர்தலில் வாக்குகளை கட்சிக்கு பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

தேர்தலில் வெற்றிபெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பிரதமர் ஏதாவது உள்ளூராட்சி சபையொன்றை வெற்றிகொள்ள முடியாவிட்டால் அது தொடர்பில் அதற்கு பொறுப்பான அமைப்பாளரை பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தோல்வியைத் தழுவும் உள்ளூராட்சி சபைகளிலுள்ள தொகுதி அமைப்பாளர்கள் பொறுப்புடன் செயற்பட்டார்களா என்பதை மீளாய்வு செய்து அவர்கள் தொடர்பில் பின்னர் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் மாநாட்டுக்கும் சகல வேட்பாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே, இஃது முக்கியத்துவமான மாநாடாகவே அமையவுள்ளது. 

இளையகனி

Comments