பொலித்தீன் அற்ற உலகம் சாத்தியமா? | தினகரன் வாரமஞ்சரி

பொலித்தீன் அற்ற உலகம் சாத்தியமா?

புதிய பொலித்தீன் வகை

பொலித்தீன் அற்ற வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க இயலாத அளவுக்கு அது எங்கள் அனேக அன்றாட செயற்பாடுகளில் தவிர்க்க இயலாத ஓரம்சமாக மாறிவிட்டது. அதனாலேயே பொலித்தீன் பாவனை அன்றாட வாழ்வுக்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டும் அப்பாவனையை சட்ட ரீதியாக ஒழிக்க நீண்ட காலம் அரசுக்குத் தேவைப்படிருக்கின்றது.

பொலித்தீன்,ஷொப்பிங் பேக், லஞ்ச் சீட், ரெஜிபோர்ம் உணவுப் பெட்டிகளுக்கு மத்திய சூழல் அதிகார சபையினால் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக சுமார் நான்கு மாதம் கால சலுவை வழங்கப்பட்டு இவ்வருடம் முதலாம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுலுக்கு வந்துள்ளது​.

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த வருடங்களில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனாலும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அவற்றை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் பொலித்தீன் கழிவுகள் சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதும், குப்பைகளை அகற்றும் கழிவு முகாமைத்துவத்தில் பொலித்தீன் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியதையடுத்தும் அரசாங்கம் இறுக்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது

பொலித்தீன் பாவனைத் தடை என்றதும் அது பொலித்தீன் உற்பத்தியாளர்களுக்கு மாத்திரமல்ல சாதாரண பாவனையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. காரணம் இனி பொருள் கொள்வனவுகளின் போது துணியினாலான பையினையா, கடதாசிப் பையினையா உபயோகிக்கப் போகின்றோம்? எந்தவிதமான பொலித்தீன் பைகளையும் உபயோகிக்க முடியாதா எனக் குழம்பியவர்களே அனேகம்.

கடந்த காலங்களில் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி சொப்பிங் பை பொருட்களை இட்டு அவற்றை வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்தோம். ஆனால் கடந்த முதலாம் திகதி முதல் பொலிதீன், ரெஜிபோர்ம் மற்றும் சொப்பிங் பேக் (shopping bag) ஆகியவற்றின் பாவனைக்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை முற்றாகத் தடை விதித்துள்ளது.

இது குறித்து மத்திய சூழல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிரி கருத்து தெரிவிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் பொலித்தீன் வகைகள், ரெஜிபோர்ம் என்பனவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் சலுகை அடிப்படையில் நான்கு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

சொப்பிங் பேக், லஞ்ச் சீட், ரெஜிபோர்ம் உணவு பெட்டி ஆகியவை முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ முடியாது. அவற்றை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் அல்லது பொதிசெய்து கொடுத்தல் சட்டவிரோதமான செயற்பாடாகும். அவ்வாறு நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் பத்தாயிரம் ரூபா தண்டம் அல்லது இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதற்கமைய விற்பனை நிலையங்கள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள் உட்பட பல இடங்களில் சுற்றிவளைப்புகள் நடைபெற்று வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பேராசிரியர் லால் தர்மசிறி.

அத்துடன், தேர்தல் காலங்களில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. தேசிய, சமூக, மத, கலாசார மற்றும் அரசியல் வைபவங்கள் உட்பட அனைத்து விழாக்களின் போதான அலங்காரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்தல் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

தற்போது விரைவில் உக்கிப்போக்கும் தன்மை கொண்ட விசேட பொலித்தீன் வகை பாவனைக்கு வந்துள்ளதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கருத்து கூறுகையில், பொலித்தீன் அற்ற சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அத்துடன் சூழலை மாசடையச் செய்யும் பொலித்தீன் அற்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டால் அது சந்தோஷமானதே. ஐக்கிய ராஜ்யத்தினால் நிர்ணயம் செய்யப்பட்ட EN-13432 தரப்படுத்தப்பட்ட உக்கிப்போகும் தன்மை கொண்ட பொலித்தீன்களைப் பயன்படுத்துவதே சிறந்ததாகும் என்றார்.

இது குறித்து புறக்கோட்டையில் பேக் வகைகள் வகைகள் விற்பனை செய்யும் ஆர். சுதாவை சந்தித்த போது, 21 மைக்ரோனுக்கு குறைந்த பொலித்தீனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷொப்பிங் பேக், லஞ்சீட், ரெஜிபோர்ம் லஞ்ச் பொக்ஸ் என்பனவற்றுக்கான தடை அமுல் செய்யப்பட நான்கு மாதகால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்குள் எம்மிடமிருந்த அவ்வாறான பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தியும் விட்டோம். புதிய வகையான உக்கிப்போகத்தக்க இலகுவகை பொலித்தீன் பாவனைக்கு வந்துள்ளது.

புதிய வகை பொலித்தீனை நானும் பரிசீலிப்பதற்காக எனது வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்துள்ளேன். இது சிறிய ஆராய்ச்சியும், பரிசோதனையும். இவை உக்கிபோனால் நாமும் உற்சாகத்துடன் நானும் வரவேற்பேன். நாங்களும் கொஞ்சம் பரிசீலித்து பார்ப்போம் என்றார்.

சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்கள் முழுமையாக தடைவிதித்தாலும் நானும் அதனை ஆதரிப்பேன். நானும் இத்துறையில் சுமார் இருபது வருடங்கள் இருக்கிறேன். மாற்று திட்டம் அரசு உருவாக்கினால் நானும் அதனை உள்வாங்க ஆயத்தமாக இருக்கிறேன். ரெஜிபோர்ம் லஞ்ச் பொக்சுக்கு பதிலாக கார்ட்போர்ட் பொக்ஸ் வந்துள்ளது. இதனை உணவு பொதி செய்பவர்கள் பயன்படுத்தலாம்.

எதிர்வரும் காலங்களில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொலித்தீன் உற்பத்தி பொருட்கள், அதிகமான பொருட்கள் பொலித்தீனினால் சுற்றிவருகிறது. இதனையும் தடை செய்தால் வரவேற்கத்தக்கது. இதுவும் சூழலுக்கு ஏற்புடையதல்ல என்பதையும் சுதா சுட்டிக்காட்டினார்.

பொலித்தீன் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் கொழும்பு பீப்பள்ஸ் பார்க் கடையில் தொழில் பார்க்கும் மகேஸ்வரனை சந்தித்த போது, எமது கடையிலும் சுற்றி வளைப்பு தேடுதல் நடைபெற்றது. எனது முதலாளியும் அரசாங்க அறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட உற்பத்தியை நிறுத்திவிட்டார். அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பொலித்தீன் வகைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம் என்றார்.

பொலித்தீன் தடையினால் நாளாந்த வியாபாரம் குறைந்து விட்டதையும், மாற்றீடாக வந்துள்ள 21 மைக்ரோன் பொலித்தீன் மற்றும் உக்கிப்போகும் தன்மையுடைய பேக் வகைகளின் விலை சுமார் 40 முதல் 60 சதவீதம் உயர்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

பொலித்தீனை குறித்த ஒருவித அச்சம் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுவதால் பொலித்தீன் பாவனை வீழ்ச்சியடையக் கூடும் என்றும் ஒருவர் குறிப்பிட்டார். அதேநேரத்தில் சில சுப்பர் மார்க்கெட், துணிக் கடைகளில் துணி மற்றும் சணலினால் ஆன பைகளிலேயே தங்கள் வாடிக்ைகயாளர்களுக்கு பொருட்களைக் கொடுக்கின்றனர். சில பல்​ெபாருள் அங்காடிகளில் குறைந்த விலைகளில் துணிகளினாலான பைகளை விற்கின்றனர் என்றார் ஒருவர்.

போல் வில்சன்

எதிர்காலத்தில் உணவகங்களில் பொதி செய்யப்பட்ட உணவை ஊக்குவிக்காமல், உணவகங்களிலேயே உணவை சுவைத்து செல்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றார் ஒரு முதியவர். உணவு வகைகளை பொதி செய்வதற்கு தேவையான வாழையிலை உட்பட தாமரை இலைகள் போதுமானளவில் சந்தையில் விற்பனையில் இல்லை. தொழிலுக்கு செல்பவர்கள் டிபன் கெரியரில் உணவுகளை கொண்டு செல்வது சூழலுக்கு ஏற்புடையதாக உள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பொலித்தீன் தடையானது காலத்தின் தேவையாகும். கழிவு முகாமைத்துவத்தின் கீழ் பொலித்தீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் அரசாங்க செயற்திட்டங்கள்வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் போது, பொலித்தீனால் சூழலுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து உலகைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Comments