'நீர்' துயர் தீர்க்கும் − மக்கள் நலன் காக்கும் | தினகரன் வாரமஞ்சரி

'நீர்' துயர் தீர்க்கும் − மக்கள் நலன் காக்கும்

மகாவலி கங்கை எமது நாட்டின் மிக நீளமான ஆறு என்பது உங்களில் நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கும். 208 மைல் (335 கி மீ) ஓடும் நாட்டின் நீளமான ஆறாக மட்டுமல்லாது நாட்டை வளப்படுத்தும் ஆறுகளில் முக்கியமானதும் மகாவலி கங்கையாகும்.

நாட்டின் மலையகப்பகுதியான ஹட்டன் பீட பூமியில் உருவாகும் மகாவலி கங்கை தேயிலை மற்றும் றப்பர் தோட்டங்களுக்கூடாக இறங்கி வந்து கண்டிக்கு அருகில் வடக்கில் திரும்பி பள்ளப் பகுதிகளில் ஓடுகிறது. அதன் பின் அதன் கிளை நதியான அம்பன் கங்கையுடன் கலந்து பொலன்னறுவைக்கூடாகச் சென்று திருகோணமலைக்கு ஏழு மைல் தெற்கில் கோடியார் விரிகுடாவில் கடலுடன் கலக்கிறது.

நாட்டின் விளைச்சல் பிரதேசத்திற்குத் தேவையான நீரை வழங்கும் அதேவேளை மகாவலி கங்கை நாட்டுக்கு அத்தியாவசியமான மின்சாரத்தை உருவாக்குவதிலும் முதன்மை வகிக்கிறது. மகாவலி கங்கையின் வடிகால் நிலம் மிகப்பெரியது. நாட்டின் மொத்தப்பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதியளவில் அது அமைகிறது.

இலங்கையின் மின்தேவையில் மகாவலி கங்கையின் பங்கு அளப்பரியது. பல இடங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக கங்கை மறிக்கப்பட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. நாட்டின் மின்தேவையில் பெரும்பகுதியை இந்த அணைக்கட்டில் நிறையும் நீர்தான் உற்பத்தி செய்கிறது. இதன்காரணமாகத்தான் நாட்டின் மின்சாரத் தேவைக்கு மகாவலி நீரை நம்ப வேண்டியுள்ளது.

பண்ணைக் கைத்தொழில், விவசாயம் ஆகிய இரண்டும் நாட்டில் முக்கியம் பெறுகின்றன. மகாவலி கங்கைதான் இந்த இரண்டிலும் பெரும்பங்காற்றுகிறது.

நாட்டின் உலர் வலயத்தில் பல இடங்கள் மகாவலி கங்கை மறிக்கப்பட்டு 386 சதுர கிலோ மீற்றர் காணியில் பயிர்ச்செய்கை செய்வதற்கான நீர்ப்பாசன வசதிகள் பெறப்படுகிறது. கங்கை மறிக்கப்பட்டு ஆணைக்கட்டுகள் மூலம் பெறப்படும் நீர் மின்சாரம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

மகாவலி கங்கையானது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. ஹோர்ட்டன் சமவெளியில் உள்ள கிரிகாலப்பொத்தை மற்றும் தொட்டுப்பொல மலைப்பகுதியில் இருந்துதான் மகாவலி கங்கை ஊற்றெடுக்கிறது என்பதே சரியானது.

மகாவலி கங்கையின் நீர் செல்லு மிடமெல்லாம் வளப்படுத்தும் என்பது உண்மையானபோதிலும் உலர் வலயத்தின் பல பகுதிகளுக்கு அப்பால் ஓடிய மகாவலி நீர் வெறுமனே கடலில் சங்கமித்தது. மகாவலி உபரிநீர் இவ்வாறு எவ்வித பயனும் இன்றி கடலில் கலப்பதை மாற்றியமைத்து அதனை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தும் வகையில்தான் மகாவலி அபிவிருத்தித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி திட்டம் லட்சக்கணக்கான விவசாய மக்களுக்கு நன்மை பயக்கும் பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமாகும்.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கம்தான் மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டம்.

நீர் பற்றாக்குறை காரணமாக உலர்வலய மக்கள் பல்வேறு சிரமங்களை நீண்ட காலமாகவே அனுபவித்து வந்தனர்.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பல செயற்திட்டங்கள் செயற்பட்டு வந்தபோதிலும் மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி திட்டமானது நான்கு தசாப்தங்களாக பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டது. நீரை எதிர்பார்த்து வந்த மக்களின் சிரமங்கள் இதனால் மேலும் அதிகரித்தன.

இதனால் அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருணாகல் உள்ளிட்ட உலர்வலய விவசாய மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீணாகின. நீர்ப்பாசனத்திற்கு, குடியிருப்புக்கு நீர் அவர்களது பிரதான தேவையாக இருந்தது. ஆனால் கிடைப்பதாக இல்லை. இதனால் அப்பிரதேச மக்களின் விவசாய செயற்பாடுகளும் வீழச்சியடைந்தன. போதாக்குறைக்கு சிறுநீரக நோய் போன்றவை அப்பகுதியில் தீவிரமடைந்தன. குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைக்காததே சிறுநீரக நோய் அதிகரித்தமைக்கு பிரதான காரணமாகும். இதன் காரணமான அப்பிரதேசங்களில் பொருளாதாரமும் வீழ்ச்சியுற்றது.

உலர்வலய மக்களின் நீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அப்போது விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சராக இருந்த கெளரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் அப்போது மேற்கொண்ட தீவிர முயற்சி பலனளித்தது. அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பங்களிப்புடன் 2007 ஜனவரி மாதம் 25ஆம் திகதி மொரகஹகந்த - களுகங்கை செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் அப்போதைய நீர்ப்பாசன மின்சக்தி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க வடமத்திய பதவிய மற்றும் வடக்குக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக மொரகஹதந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு முயற்சி செய்தார். எனினும் குறுகிய நோக்கத்தையுடைய இனவாதிகள் அதற்கு தடை ஏற்படுத்தினர்.

1977ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த மின்சக்தி நீர்ப்பாசன மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மின்னுற்பத்திக்கு முன்னுரிமையளித்து விக்டோரியா, ரந்தனிகல, ரந்தம்பே மற்றும் கொத்மலை ஆகிய நீர்த் தேக்கங்களை அமைத்த போதிலும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அமைக்க முடியாமல் போய்விட்டது.

மன்னர் காலம் முதல் விவசாயத்திற்காக நீர்ப்பாசன திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் அண்மைக் காலத்திட்டம் தான் மொரகஹகந்த- களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம்.

மொரகஹகந்த – களுகங்கை அணைக்கட்டு துரித மகாவலித் திட்டத்தில் இடம்பெறும் ஐந்தாவதும் இறுதியுமான பிரதான நீர்த்தேக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் 1980களில் விக்டோரியா, ரந்தம்பே, ரந்தனிகல மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களும் 2012இல் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களும் அமைக்கப்பட்டன.

இலங்கைக்கு பெருமை சேர்க்கும் இந்த நீர்த்தேக்கங்கள் நாட்டின் மின்சாரத் தேவையின் பெரும்பகுதியை வழங்குகின்றன.

இந்த நிலையில் அந்த வரிசையில் புதிதாக சேர்த்துக்கொள்ள மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்கள் இரண்டும் ஒன்று சேர்ந்தால் பராக்கிரம சமுத்திரத்தை 6 மடங்கு கொள்ளளவு நீரை வழங்கக்கூடியது என்பது குறிப்பிடப்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் 2012 இல் முடிக்கப்படவிருந்தது. அதனால் கடந்தகால அரசாங்கத்தின் அக்கறையின்மை காரணமாக அத்திட்டம் 2018 இலேயே முடிவடைந்துள்ளது. 2007 இல் மகாவலி அமைச்சராக இருந்தபோது மைத்திரிபால சிறிசேன அவர்கள் அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருந்தார். மொரகஹகந்த - களுகங்கை திட்டத்திற்கான மொத்தச் செலவு 100 பில்லியன் ரூபாவாகும்.

மாத்தளை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள 80 ஆயிரம் விவசாயிகளின் வயல் காணிகளுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளுடன் 25 மெகாவோல்ற் மின்சாரத்தையும் இந்த திட்டம் வழங்குகின்றது. ஏற்கனவே விவசாயம் செய்யப்பட்டுவரும் 82,000 ஹெக்டயார் வயற்காணிக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்கும் அதேவேளை 4,500 மெட்றிக் தொன் நன்னீர் மீன் அறுவடைக்கும் வழிசெய்கிறது.

மொரகஹகந்த திட்டத்தின் மூலம் இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு நீர் கிடைக்கிறது. இந்நீர் யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்கிறது.

கைத்தொழிலுக்கான நீர்த்தேவைகள் சூழலியல் சுற்றுலாத்துறை மற்றும் முறையான வெள்ளநீர் கட்டுப்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பயன்களாகும்.

மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2019 இல் 185,000 ஹெக்டயார் விளைநிலத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதி பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு போகங்களின் போதும் கிடைக்கும். விளைச்சலை இது அதிகரிக்கும் நிலையில் 109,000 தொன் நெற்செய்கையை எதிர்பார்க்கலாம். வருடாந்த நிகர விவசாய பயனைப் பொறுத்தவரை இது 27.7 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

மொரகஹகந்த - களுகங்கை ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் மூலம் 25 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் கிடைக்கும் வருடாந்த எரிபொருள் சேமிப்பு கிட்டத்தட்ட 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரு நீர்த்தேக்கங்களிலிருந்து 4,700 தொன் நன்னீர் மீன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகர பயன் 1.67 பில்லியன் டொலர்களாகும்.

1994 ஆம் ஆண்டு இப்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் சாத்திய வள ஆய்வறிக்கைகள் பரீட்சிக்கப்பட்டன. அதன் பின்னர் நீர்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காகஆரம்பிக்கப்பட்ட வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. ஆயினும் மகாவலி அதிகார சபையின் மீள் கட்டமைப்பு செயற்பாடுகளினால் அப்பணி தாமதமடைந்தது.

தற்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் 1998ஆம் ஆண்டில் மகாவலி அமைச்சராக பதவி ஏற்றபின் அதுவரை காணப்பட்ட அனைத்து தடைகளும் வெற்றி கொள்ளப்பட்டன. மொரகஹகந்த செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டு சகல சாத்தியவள ஆய்வுகளையும் நிறைவு செய்து 2007 ஜனவரி 23ஆம் திகதி மிகவும் கோலாகலமான முறையில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தற்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் தலைமையில் நிர்மாணிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது.

அந்த நிகழ்வு வரலாற்று முக்கியதுவமானதாக அமைந்தது. இலங்கையில் நிர்மாணிக்கப்படும் பாரிய நீர்த்தேக்கத்தை ஒரு கனவாக நினைத்திருந்த அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, குருணாகல் மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாய மக்கள் அந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இவ்வாறான பெருமளவு மக்கள் வெள்ளத்தை கண்ணுற்ற அக்கால தலைமைகளின் மனதில் தோன்றிய எண்ணங்களின் பெறுபேறாக 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் அதிக இடப்பரப்பையும் நீருக்கான உரிமையையும் கொண்ட மகாவலி அமைச்சுப் பதவி உடனடியாக மாற்றப்பட்டது.

2009ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை நிதி ஒதுக்கீடுகளும் தாமதப்படுத்தப்பட்டன. பிரதேச அபிவிருத்தி செயற்பாடுகளை பின்தள்ளி கருத்திட்டங்களுக்கு நிதி செலவு செய்யப்பட்டதுடன் மக்கள் நலன்கள் குறித்து கவனம் செலுத்தப்படாமையினாலேயே இந்த நிலை உருவாகியது. 2015ஆம் ஆண்டின் நதிப் பள்ளத்தாக்கில் பிறந்து வளர்ந்த விவசாயக் குடும்பத்தின் மகன் இலங்கை ஜனாதிபதி பதவிக்கு வந்தமை மகாவலி பிரதேச மக்கள் பெற்ற பெரும் பாக்கியமாகும். அதன் பெறுபேறாகவே மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Comments