யார் இந்த ஈஸ்வரன் பிரதர்ஸ்? | தினகரன் வாரமஞ்சரி

யார் இந்த ஈஸ்வரன் பிரதர்ஸ்?

 பிரபல தொழில் அதிபரும் மொரிசிஸுக்கான முன்னாள் தூதுவரும் இலக்கியவாதியும் சமூக சேவகருமான தெ.ஈஸ்வரன் நேற்று (06) சிங்கப்பூரில் காலமானார். 
2014- ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம்திகதியன்று அவர், தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்

மனித வாழ்க்கை ஒரு மனிதனின் முழுத் திறமைகளையும் வெளிக்கொணரும் ஒரு முயற்சி. திறமைகள் வெளியே வரும்போது ஓர் ஆத்ம திருப்தி ஒவ்வொருவருக்கும் ஏற்படுகிறது. நமக்கும் பிறர்க்கும் பயன் ஏற்படுகிறது. பலர் தங்களுக்கிருக்கும் திறமைகளை உணராமலே வாழ்நாளைக் கழித்து விடுகின்றனர். ஒரு கலைஞன் தன் கலையில் தன்னைக் காட்டுவதுபோல், தன் முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்து எல்லோரையும் மகிழ்விப்பது போல் ஒவ்வொரு மனிதனும் அவரவர் துறையில் தங்கள் முத்திரையைப் பதிக்க முடியும்” என்கிறார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

அவ்வாறு முத்திரை பதித்து வாழ்க்கையில் இன்னமும் சாதித்துக் கொண்டிருப்பவர்தான் ‘ஈஸ்வரன் பிரதர்ஸ்’ தெ. ஈஸ்வரன்.

“மனதிற்கும் செயலுக்கும் பெரிய தொடர்பிருக்கிறது. உண்மை, நேர்மை, சுதந்திரம், சமத்துவம், அன்பு, உதவும் உள்ளம் போன்ற நிரந்தர உண்மைகளால்தான் இவ்வுலகம் இயங்குகிறது. இதனைத் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்து பிறருக்கும் உணர்த்திக் கொண்டிருப்பவர் ஈஸ்வரன்!

உழைப்பு, மனவுறுதி, நேர முகாமைத்துவம், நன்னெறி நூல்களின் வழி பிறழாமை, பிறரையும் அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு, தாராள குணம், தளராத பக்குவம் இவை எல்லாவற்றினதும் மொத்த உருவமாகப் பார்க்கக் கூடிய ஒரு மானுடப் பிறவி!

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணப்பாறை என்ற குக்கிராமம்தான் பூர்வீகம்! ஆனால், இலங்கையில் வி.டி.வி என்ற மூன்றெழுதுக்குப் பின்னர், ஈஸ்வரன் பிரதர்ஸாக, தொழில் அதிபராக, மொறிசியஸ் தூதுவராக, சமூக சேவையாளராக ஆன்மிகவாதியாக சிறுகதை எழுத்தாளராக இலங்கையர் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். தனது வாழ்க்கையின் வெற்றி பற்றிக் ‘கதம்பத்திற்காக’ மனம் விட்டுப் பேசுகிறார்.

“எங்கள் தந்தையார் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார். அவருக்கு 11 வயதாகவிருக்கும்போது இலங்கையிலுள்ள எங்களுக்குத் தெரிந்த ஒருவர், அப்பாவை மாத்தறைக்கு அழைத்து வந்துவிட்டார். அங்கு உணவருந்தும் தட்டுகளையும் கோப்பைகளையும் கழுவிச் சுத்தம் செய்வது தான் அப்பாவின் வேலை. அப்படி படிப்படியாக முன்னேறி கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு மிக நம்பிக்கையுடன் பணிபுரிந்தார்.

அவ்வாறு காலங்கடந்து செல்கையில், இரண்டாவது உலகப்போரின்போது, இலங்கையிலிருந்த பல வர்த்தகர்கள் மீண்டும் இந்தியா சென்றார்கள். அப்போது, அப்பா பணியாற்றிய கடையின் உரிமையாளரான எங்கள் உறவினரும் (அருணாசலம்பிள்ளை) இந்தியா செல்லத் தீர்மானித்தார். அதுவரை கடையை மிகவும் இலாபம் நிறைந்த நிலைக்கு அப்பா கொண்டு வந்திருந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் (எங்கள் உறவினர்) அவரது மகளை எங்கள் அப்பாவுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, கடையையும் அப்பாவிடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அப்படித்தான் எங்கள் அப்பாவின் வாழ்க்கை ஆரம்பமானது.” என்று தெய்வநாயகம்பிள்ளை அவர்களின் தொழில் ஆரம்பத்தைச் சொல்கிறார் ஈஸ்வரன்.

சாதாரண ஒரு மளிகைக் கடை மூலமாகத் தமது உழைப்பை ஆரம்பித்த தெய்வநாயகம்பிள்ளை நாடறிந்த தொழில் அதிபராக மிளிர்ந்ததுடன், ‘விரிவி’ என்ற மூன்றெழுத்தை முழு இலங்கைக்கும் அடையாளப்படுத்திவிட்டார். ஆங்கிலம் தெரியுமோ இல்லையோ ‘விரிவி’ என்றால் ‘இன்னார்’தான் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அவரின் வியாபாரம் வளர்ச்சியடைந்தது.

“அது சரி, ‘விரிவி’ என்று அறியப்பட்டிருந்த, அடையாளப்படுத்தப்பட்டிருந்த வர்த்தகம் ‘ஈஸ்வரன் பிரதர்ஸ்’ ஆனது எப்படி? இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது”

“1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்னுடைய பட்டப் படிப்பை முடித்துவிட்டு, மூன்று மாதம் மதுரையில் ஒரு மில்லில் (ஆலையில்) தொழில் செய்துவிட்டு செப்டம்பர் மாதம் இலங்கை வந்தேன். எங்கள் குடும்பத்தில் எங்கள் சமூகத்தில் நான் ஓர் ஆள்தான் பட்டம் வாங்கியிருந்தேன். அந்தப் பெருமை எனக்கிருந்தது. இங்கே வந்தவுடன் அப்பாவிடம் ஒரு சிறிய ‘ஃபியட்’ கார் இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு தினமும் கோல்பேஸுக்குச் செல்வேன். நண்பர்களுடன் சுற்றுவேன். இப்படி ஓர் ஒன்றரை மாதம் ஓடிவிட்டது. எங்கள் அப்பா பார்த்தார். இது சரியில்லை. உனக்கு ஒரு வர்த்தகத்தை ஆரம்பித்துக் கொடுக்க வேண்டும். என்று ‘நான் செய்யும் வியாபாரத்தை நீ செய்ய வேண்டாம். ஏற்றுமதி வர்த்தகம் செய்’ என்று 1964 டிசம்பரில் ‘ஈஸ்வரன் பிரதர்ஸ்’ எனப் பெயரிட்டு அவர் ஆரம்பித்து கொடுத்ததுதான் இந்த நிறுவனம். அதன் பின்னர் நான் அந்தத் தேயிலைத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தேன்” என்று ‘ஈஸ்வரன் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் தோற்றத்தைத் தெளியவைக்கிறார் நெகிழ்ச்சியுடன்.

பல்வேறு நாடுகளுக்குத் தேயிலை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக - கொழும்பு, கிராண்ட்பாஸைத் தளமாகக் கொண்டு ஓர் ஏற்றுமதி கிராமம் போல் விசாலமான வளாகமாகக் காட்சி தருகிறது ஈஸ்வரன் பிரதர்ஸ். நேரத்தை வீணாக்காமல் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துச் செயற்படுத்தும் ஈஸ்வரன் தம் வர்த்தகத்தின் வெற்றியைச் சொல்கிறார்.

“எனக்கு இந்தத் தொழிலில் அனுபவம் கிடையாது. எங்கள் உறவுக்காரர் ஒருவர் தேயிலை வர்த்தகம் செய்து ‘நொடித்துப் போயிருந்தார்’, தோற்றுப்போனார். அவர் வெறுமனே அமர்ந்திருந்தபோது, அப்பா அவரை முகாமையாளராக்கி, என்னை அவருக்குக் கீழ் இருந்து தொழில் செய் என்றார். இப்படித்தான் ஈஸ்வரன் பிரதர்ஸ் வளர்ச்சியடைந்தது” என்று மன நிறைவாகச் சொன்னாலும், இந்த அதீத வளர்ச்சியில் ஏற்பட்ட இடையூறுகள், மன வலிகள், அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டார்கள் என்பதைப் பற்றியும் விபரிக்கிறார்.

“1983 இல் எங்கள் வர்த்தகத்திற்குப் பலத்த அடி வீழ்ந்தது. அதிலிருந்து ஒருவாறு மீண்டு வந்துவிட்டோம். ஆனால், 1994, 1995இல் பெருங் கஷ்டப்பட்டுவிட்டோம். நிறையபேர் கடனுக்குப் பொருள்களை வாங்கியிருந்தார்கள். எவரும் பணம் தரவில்லை. வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்த காசோலைகளைக் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தோம். இதனால், வியாபாரம் பெரும் பிரச்சினைக்குள்ளாகிவிட்டது. இதன்போது நான் தலையெடுத்து வியாபாரத்தை என் கைக்குள் கொண்டுவந்தபோது நான் சொன்னேன், இந்த வியாபாரம் நமக்குச் சரிப்பட்டு வராது, என்றேன். அந்த நேரம் எங்களுக்கு ஒரு பதினெட்டு வர்த்தகம் இருந்தது.

பதினெட்டு வர்த்தகத்தில் பன்னிரண்டு வர்த்தகத்தை முடிவுறுத்தினோம். இவற்றால் இலாபமில்லை. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. பெருமைக்காக 20, 25 ‘பிஸினஸ்’ இருக்கிறது என்று சொல்வதைவிட, இலாபமில்லாத ‘பிஸினஸ்’ வேண்டாம், என்று அவற்றில் உள்ள கடன்களை அடைப்பதற்கு, எங்களிடமிருந்த பெரிய பெரிய காணிகளையெல்லாம் விற்பனை செய்தோம். கட்டுநாயக்கவில் ஓர் 25 ஏக்கர் காணி இருந்தது. புளுமெண்டல் வீதியில் ஒன்றரை ஏக்கர் இருந்தது. அவற்றையெல்லாம் விற்று கடன்களை அடைத்தோம். வர்த்தகத்தையெல்லாம் ஒருமுகப்படுத்தி, பதினெட்டில் ஆறை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவற்றைக் கைவிட்டுவிட்டோம்.”

“அவை எல்லாம் அப்பாவின் தலைமையில் இயங்கியவையா?”

“அப்பாவின் தலைமையின் கீழ் இருந்தவை மட்டுமல்ல, என் தம்பிமார் தலைமையில், எனது தலைமையிலும் இருந்தன. அவற்றையெல்லாம் விற்று வங்கிக் கடனையெல்லாம் அடைத்தோம். அதனால், வங்கிகள் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு தொகையையும் கடனாகக் கொடுக்கும். எங்களிடம் கடன் வாங்கி, மீளச் செலுத்தாமல் பலர் இருக்கிறார்கள். ஆனால், நாம் யாரிடமும் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் இல்லை. ஆகவே, நாங்கள் தலைநிமிர்ந்து இருப்பதற்கு வங்கிகள் கைகொடுத்தன.”

வர்த்தகத்தில் வீழ்ந்து மீண்டெழுந்ததை கனத்த மனதுடன் நினைவு கூர்கிறார், அழுத்தம் திருத்தமாக. பேச்சிலும் செயலிலும் தெளிவு, நிதானம் நிறைந்த ஈஸ்வரனிடம்,

“ஈஸ்வரன் பிரதர்ஸ்” என்றால் யார் அவர்கள், எங்கே அந்த பிரதர்ஸ்?” என்ற போது,

எனக்கு நான்கு சகோதரர்கள். அதில் ஒருவர் சென்னையில் குடியேறியிருக்கிறார். மற்றைய மூவரும் இங்குதான் உள்ளனர். ஆனால், மூவரும் வெவ்வேறு வர்த்தகம் செய்கின்றனர். ஓர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்கள் அப்பா, மிகவும் முதுமையடைந்துவிட்டார். எனவே அவரிடம் போய் நான் சொன்னேன்," அப்பா இனிமேல் இந்தக் கூட்டுக் குடும்பம் கஷ்டமான விடயம். எங்களுடைய பிள்ளைகளும் வளர்ந்துவிட்டார்கள். நாம் ஒத்துப்போவோம்.

ஆனால் பிள்ளைகள் ஒத்துப்போவார்கள் என்பது கஷ்டமானது. ஆகவே, இந்தச் சொத்துகளை எப்படி பிரிக்க வேண்டுமோ அப்படி பிரித்துவிட்டால், எதிர்காலத்திற்குச் சிறப்பாக இருக்கும்" என்று சொன்னேன். அப்போது அப்பா சொன்னார், "அப்படி என்றால் நீங்களே உங்களுக்குள் பேசி, உங்களுக்குச் சம்மதமான விதத்தில் சொத்துகளைப் பிரித்துக்கொள்ளுங்கள்" என்றார். இங்கு உள்ள நிறுவனங்கள் எல்லாம் எங்கள் ஒவ்வொருவரின் தலைமையின் கீழ் இருந்தன.

ஆகவே, வெளியார் ஒருவரின் தலையீடு எதுவுமின்றிப் பிரித்துக்கொண்டோம். இந்தியாவில் அப்பாவின் பூர்வீக சொத்துகளாக நிலங்கள், வீடுகள், கடைகள் என ஏராளமான சொத்துகள் இருந்தன. இங்குள்ள சொத்துகளைப் பிரிப்பது இலகுவாகவிருந்தது. எல்லோரும் சம்மதித்துப் பிரித்துக்கொண்டோம். ஆனால், பயிர் செய்யும் நிலம் இருக்கின்றது. பத்து அறைகளுடன் ஒரு பெரிய வீடு."

"அந்த வீட்டை எல்லாம் விட்டுவிட்டுத்தான் அப்பா இலங்கைக்கு வந்தாரா?"

"இல்லை. இலங்கையில் சம்பாத்தியம் செய்து எங்கள் அப்பா கட்டி வைத்திருந்தார். (16 ஆம் பக்கம் பார்க்க)

 

அவர் வரும்போது அஃதெல்லாம் ஏது? ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். 1950 இல் அந்த வீட்டை அப்பா கட்டினார். அந்தச் சொத்துகளைப் பிரிப்பது எங்ஙனம் என்பது பிரச்சினையாகவிருந்தது. ஏனெனில், ஒருவருக்கு வீடு சேர வேண்டும். ஒருவருக்குக் கடை சேர வேண்டும். இன்னொருவருக்கு பயிர் செய்யும் நிலம் சேர வேண்டும்.

இதை எப்படி பிரிக்கப்போகிறோம் என எங்களுக்கே ஒரு சந்தேகம். அப்போது ஒரு தம்பி சொன்னார், என்னுடைய மைத்துனர் - மூத்த தம்பி திருமணம் செய்தவரின் சகோதரர்- அவரை வைத்து சொத்துகளின் பெறுமதியை மதிப்பீடு செய்வோம் என்று. கூட்டாக இருக்க வேண்டும் அல்லவா, பயிர் செய்யும் நிலம் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அதனை எவ்வாறு பிரிப்பது? பயிர் செய்வது கஷ்டமாக இருக்கும்.

ஆகவே, அந்த பயிர் செய்யும் நிலத்தை எல்லாம் ஒருவருக்கும் எட்டுக் கடை இருந்தால், அந்த எட்டுக் கடையும் ஒருவருக்கும் என நினைத்தோம். வீட்டைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான பெறுமதி இருக்காது. மொத்த சொத்துகளின் பெறுமதியில் ஒருவருக்குப் பதினைந்து இலட்சம் (இந்திய) ரூபாய் சேர வேண்டும் என்பது உடன்பாடு.

ஆகவே, சொத்துகளைப் பிரிக்கும்போது இந்தத் தொகை மாறுபடலாம். ஒருவருக்குப் 12 இலட்சம் வரலாம், ஒருவருக்குப் 13 வரலாம்... ஆகவே அப்படி வந்தாலும் பரவாயில்லை. ஒரு பட்டியலைப்போட்டு சொத்துகளைக் குறித்தொதுக்கச் சொன்னேன். அவ்வாறு செய்து எங்கள் அப்பாவிடம் கொண்டுபோய் கொடுத்தோம். இதில் உள்ள சொத்துகளை நீங்களே தெரிவு செய்யுங்கள். யார் யாருக்கு என்னென்ன வருகிறதோ அவற்றை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னோம்.

ஏனென்றால், ஒருவர் நிலம் வேண்டும் என்பார், இன்னொருவர் ஐயோ, இந்தப் பென்னம்பெரிய வீட்டை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்று எண்ணுவார். ஆகவே, அப்பாவையே தெரிவு செய்யுமாறு சொன்னோம். அப்பா எங்கள் அம்மாவை அழைத்தார். நீயே எடுத்து உன் பிள்ளைகளுக்குக் கொடு என்றார்.

அதன்படி எங்கள் அம்மா வந்து அந்தப் பட்டியலில் உள்ளவற்றினை ஒவ்வொரு பிள்ளைக்கும் கொடுத்தார். அதில் எனக்கு எல்லாம் வெறும் வயலாக வந்தது." மனம் விட்டுச் சிரிக்கிறார் ஈஸ்வரன். " என்ன செய்வது.. எங்கள் ஒரு தம்பிக்குப் பெரீய்ய வீடு.. அவர் சொல்கிறார்.

நான் இதனை எப்படிப் பராமரிக்கப்போகிறேன்! மாதம் ஐம்பதினாயிரம் வேண்டுமே..! யார் அதில் போய் இருப்பது? என்றாலும் இப்போது ஒவ்வொருவரும் சொத்துகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்." யார் அந்த ஈஸ்வரன்கள் என்றதற்கு ஒரு பெரிய விளக்கத்தையே தருகிறார். சொத்துகளைப் பிரித்த கதை பற்றிச் சுவாரஸ்யமாக, நிதானமாக அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது தொலைபேசி அழைப்பொன்று இடை மறிக்கிறது. "நான் ஒரு 'மீட்டிங்கில்' இருக்கிறேன். அரை மணி நேரத்தின் பின் அழையுங்கள்" என்று அழைப்பைத் துண்டிக்கிறார்.

அதுவும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்தான். 'எப்போதாவது நீங்கள் ஒரு விடயத்திற்கு இல்லை என்று சொல்ல வேண்டும் என்றால், ஆம் என்று சொல்லாதீர்கள்' என்கிறது முகாமைத்துவம். ஆனால், அப்படி நடந்து கொள்வதைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. காலத்தைத் தன் கைக்குள் வைத்துச் செயற்படுத்துபவன் தோல்வியடைவதில்லை என்பது ஈஸ்வரனிடம் கற்க வேண்டிய பாடம். சரியாக இரண்டரை மணிக்கு வருகிறேன் என்றவர், ஒரு நொடியும் பிசகாமல் காரில் 'ஜம்மென' வந்து இறங்குகிறார்.

அவர் சொன்ன நேரத்தை நாம் தவற விட்டதால், ஓர் அரை மணித்தியாலம் காத்திருக்க வேண்டிய நிலை. அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போது இரண்டு பாடசாலை மாணவர்கள் வெள்ளைச் சீருடையில் வருகிறார்கள். அவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்! என்கிறது ஊடகக்காரன் புத்தி. "கிளாஸ் பீஸ் வாங்க வந்தோம்" என்று கையில் இருந்த ஓர் அட்டையைக் காண்பிக்கிறார்கள். வெள்ளையைக் கண்டதும் ஈஸ்வரனின் ஞாபகம். எடுத்த எடுப்பில் 'வைற் கொலர்' உத்தியோகத்தை எதிர்பார்த்தோம் என்றால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது என்று எனக்கு ஒரு முறை கூறியிருக்கிறார்.

உயர் தரத்தில் கணிதப் பிரிவில் ஆங்கிலத்தில் கற்ற ஒரு மாணவன். தந்தை ஒரு வர்த்தகர். திடீரென பக்கவாத நோய் தாக்கியதில் இப்போது அவரால் கட்டிலைவிட்டு அசைய முடியாது. உழைப்பு முடங்கியது. குடும்ப பொருளாதாரத்தின் அச்சாணி முறிந்தது. தந்தையின் சகோதரன் (சித்தப்பா) வாங்கிக்கொடுக்கும் உணவுப் பொருள்களைக்கொண்டு அரைவயிற்றுச் சாப்பாடோடு வாடகை வீட்டில் அவர்களின் காலம் ஓடுகிறது. தம்பி இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறான்.

அம்மா, அம்மம்மா, அசையாமல் கிடக்கும் அப்பா.. இதனையெல்லாம் நினைத்துச் செத்துப்போய்விடலாமா என்றுகூட அந்த இளைஞன் பல முறை எண்ணியிருக்கிறானாம். நெஞ்சைப் பிழியும் இந்த நிலையைப் பற்றிப் பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களுக்கு ஏதாவது உதவிசெய்யுங்கள் என்று கெஞ்சியிருக்கிறேன். எதுவும் (இன்னமும்) நடக்கவில்லை. ஈஸ்வரனை ஒருமுறை சந்திக்கக் கிடைத்தபோது, விடயத்தைச் சொன்னேன்.

அந்த இளைஞனுக்கு ஏதாவது செய்தீர்கள் என்றால் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்றேன், அப்போதுதான் சொன்னார்.. இப்போது என்னிடம் 'வைற் கொலர் ஜொப்' என்றால் இல்லை. அவரை உடனே வரச்சொல்லுங்கள். உடனடியாக ஏதாவது வேலை போட்டுக்கொடுக்கிறேன், என்றார்.

இப்போது இந்த மாணவர்கள் வெள்ளைச் சீருடையில் நிற்கும்போது அந்த ஞாபகம்தான் வருகிறது. பொதுவாக செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் சொத்துகளை வைத்தே பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால், பிள்ளைகளைப் பெரிய..பிரபல பாடசாலைகளில் படிக்க வைத்திருப்பார்கள். இப்படித்தான் ஈஸ்வரனும் பட்டம் வாங்கியிருக்கிறார்.

"படித்துப் பட்டம் வாங்கிய உங்களை, உங்கள் அப்பா, வர்த்தகத்தில் உட்கார வைத்தபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது"

"நான் 'டிகிரி' முடித்துவிட்டு வந்தவுடன் பட்டயக் கணக்காளருக்குப் படிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாகவிருந்தது. அப்பாவிடம்போய் என் விருப்பத்தைச் சொன்னேன்.

"நீ எத்தனை வருஷம் படிக்கணும்?"

"நாலு வருடம் படிக்கணும்.. பிரக்டிஸ் பண்ணுவது எல்லாமாகச் சேர்த்து ஐந்து வருடங்கள் போகும்"

"ஐந்து வருடம் படித்தால் உனக்கு என்ன சம்பளம் கிடைக்கும்?" என்று அப்பா கேட்கிறார். அந்த நேரத்தில், 1963.. ஒரு சாட்டட் எக்கவுண்டன்ரனுக்குச் சம்பளம் ஐயாயிரம் ரூபாய். அப்பாவிடம் சொன்னேன்.

"ஐந்து வருடம் படித்து மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாகச் சொல்கிறாய்.. நீ என்னுடன் வந்தால், ஒரு நாளைக்கு ஐயாயிரம் உழைக்கும் வழியைச் சொல்லித்தருகிறேன். மாதம் ஐயாயிரம் வேண்டுமா, இல்லை ஒரு நாளைக்கு ஐயாயிரம் வேண்டுமா? என்பதை நீயே முடிவுசெய்துகொள்" என்றார். மாதத்திற்கு ஐயாயிரம் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பின்னர்தான்.

அப்பா சொன்னார் இன்றைய தினத்தில் இருந்து ஐயாயிரம் ரூபாய் உழைப்பதற்கு சொல்லித்தருகிறேன் என்று. அப்போதும் எனக்கு மனதுக்குத் திருப்தியாக இல்லை. ஏனென்றால், அந்த சாட்டட் எக்கவுண்ட்ஸ் மீது எனக்கொரு மோகம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் சாட்டட் எக்கவுண்டன்ற் ஒருவர் இருந்தார்.

ஒரு நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் போய் பேசிப்பார்க்குமாறு அப்பா சொன்னார். அவரின் ஆலோசனையின்படிச் செய் என்று என்னிடம் சொல்லிவிட்டு, 'மகன் வருவார் உங்களைச் சந்திக்க.. சாட்டட் எக்கவுண்டன் என்பதைப்பற்றி மிக மோசமாகச் சொல்லி அவனை 'டிஷ்கரேஜ்' பண்ணிவிடுங்கள்' என்று அவருக்குத் தொலைபேசியில் கூறியிருக்கிறார்கள்.

நான் போய் அவரைச் சந்தித்ததும், "ஐயோ! இது மிகவும் கஷ்டமானது. இருநூறு பேர் பரீட்சை எழுதினால், இரண்டுபேர்தான் சித்தியடைவார்கள். இது சரிப்பட்டு வராது. மிகவும் கஷ்டப்படவேண்டியிருக்கும்" என்று என்னை உற்சாகமிழக்கச் செய்து அனுப்பிவிட்டார். அந்த நிலையில்தான் நான் வர்த்தகத்திற்கு ஒப்புக்கொண்டேன்."

தந்தை சொல்லை மந்திரமாகக் கொண்டு ஏற்று நடந்ததால் இன்று நாடறிந்த தொழில் அதிபராக மிளிர்வதைப் பக்குவமாக விபரிக்கிறார்.

விசு கருணாநிதி

Comments