வெட்டுப்புள்ளியில் வீண் குழப்பமா? | தினகரன் வாரமஞ்சரி

வெட்டுப்புள்ளியில் வீண் குழப்பமா?

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்தாயிற்று. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறும் வெளியாயிற்று.

பலருக்குப் பரீட்சை முடிந்த நிம்மதி. அநேகருக்குப் பெறுபேறு வந்துவிட்ட நிம்மதி. ஆனாலும், இந்தப் பெறுபேறு பல பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்திருக்கிறது.

என்ர பிள்ளை ஒரு புள்ளியில் தட்டுப்பட்டிற்று. இரண்டு புள்ளியில் தட்டுப்பட்டிற்று என்பதே பேச்சாக இருக்கிறது. நல்ல கெட்டிக்கார பிள்ளை, ஏனோ பரீட்சையிலை சின்னதாய் மிஸ் பண்ணிட்டுது. ரெண்டாம் முறை எடுத்தால், பாஸ் பண்ணிடலாம். ஆனால், நான் கேட்கல்ல என்று சிலர் தம் கவலையைச் சொல்கிறார்கள். இன்னுஞ்சிலர், பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேணும் என்பதற்காக மீண்டும் பரீட்சை எழுதுவதற்கு ஒப்புக்ெகாண்டிருக்கிறார்கள். ஒரு சிறு புள்ளி வித்தியாசத்தில் பிள்ளைகளினதும் பெற்றோரினதும் கனவுகள் தவிடுபொடியாகிவிடுகின்றன.

இதில், விசேடமாக உயிரியல் பாடத்திற்குத் தோற்றிய மாணவர்களே அதிகம் வேதனையடைகின்றனர். அவர்களுக்கு வேறு தெரிவுகள் இல்லை என்பதுதான் இந்த வேதனைக்குக் காரணம்.

இந்தத் தடவை இன்னுமொரு பிரச்சினை. அதாவது, கடந்த டிசம்பர் 28ஆம் திகதி வெளியான பெறுபேற்றின்படி சமூக விஞ்ஞான பாடங்களில் தோற்றியுள்ள கலைப்பிரிவு மாணவர்களின் இசட் புள்ளி, பின்னிலையில் உள்ளதாகச் சில பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். சங்கீதம், நடனம், சித்திரம், நாடகமும் அரங்கியலும், தமிழ் போன்ற பாடங்கள் முன்னிலையில் திகழ்வதாகச் சொல்கிறார்கள். இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்திருப்பதாகவும், இந்தக் குழப்பம் பற்றிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிவித்திருப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுவிடயத்தில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

அதேநேரம், இந்தத் தடவை நடந்த கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சையில், கணித பாடம் கடினமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மாணவர்கள் எதிர்பார்க்காத வகையில் புதிய முறையில் வினாக்கள் தொடுக்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். தாம் பாடசாலையிலோ, தனியார் வகுப்பிலோ கற்காத வினாக்கள் வந்திருந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். போதாக்குறைக்கு அரசியல்வாதிகள்கூடக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். மாணவர்களுக்குச் சலுகை வழங்க முடிந்தால் சிறப்பு என்றும் அவர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். இந்த நிலையிலை, விசயங்களைத் தேடிப்பார்த்துச் செயற்படுத்துறதாக கல்வி அமைச்சர் சொல்லியிருக்கிறார். என்னவாக இருந்தாலும், கணிதப் பாடத்திற்கு மாணவர்கள் எழுதும் பதிலைப் பொறுத்து அவர்களுக்குப் புள்ளிகளை வழங்க முடிவு செய்திருப்பதாகத் தெரியவருகிறது.

கணிதப் பாட வினாத்தாளைப் பொறுத்தவரை, குளறுபடி ஏற்பட்டது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவை ஏற்பட்டிருக்கிறது. வினாத்தாள் முன்கூட்டியே ​ெவளியில் சென்றமை, தயாரிப்பதில் குளறுபடிகள் எனப் பலமுறை குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தத் தடவை,வினாத்தாள் கடினம் என்ற குற்றச்சாட்டைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இருந்தாலும், ஒரு பிள்ளை 'ஏ' சித்தியைப் பெறுகிறது என்றால், அதற்கு அர்த்தம் இருக்க வேண்டும். மிக இலகுவாக வினாவைத் தயாரித்துக்ெகாடுத்துவிட்டு அதற்கு ஏ சித்தி வழங்குவதில் அர்த்தம் இல்லை என்கிறார்கள் கல்விப் புலமையாளர்கள். பிரச்சினை என்னவென்றால், பரீட்சைக்கு இரண்டாம் முறை தோற்றியவர்களுக்ேக கூடுதல் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அவர்கள் இனி மூன்றாவது முறை எழுதப்போவதில்லை. எனவே, பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிக்கும்போது இரண்டாவது தடவை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்ைக வலுவாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. பட்டப் படிப்பை நிறைவுசெய்யவும், தொழிலில் நிரந்தரமாகவும் கணிதப்பாடச் சித்தியை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நிலைமை பலத்த ஏமாற்றமாக அல்லவா இருந்திருக்கும்! ஆகவே, கணித வினாத்தாள் தொடர்பில், பரீட்சைகள் திணைக்களமும் கல்வி அமைச்சும் இணைந்து பரீட்சார்த்திகளுக்கு ஏதாவது நிவாரணத்தை வழங்க வேண்டும்.

இங்கு இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாணவர்களை உயர்தரத்திற்குத் தயார்படுத்தும்போது கணித பாடத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை.

அவர்கள், ஆறுக்கு மூன்று என்ற சித்தாந்தத்தையே கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்பவே மாணவர்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள். வெறுமனே உயர் தரம் கற்பிக்கச் செய்துவிட்டால் கடமை முடிந்து விட்டது என்று ஆசிரியர்கள் நினைத்துச் செயற்படுவதும் மாணவர்கள் கணிதத்தில் பின்னடைவைச் சந்திப்பதற்கு ஏதுவாகிறது. ஆறு பாடங்களில் சித்தியடைய வேண்டும், அதில் மூன்று பாடங்களில் திறமைச் சித்தி வந்தால் போதுமானது உயர் தரம் கற்கலாம். என்ற நம்பிக்ைகயை ஊட்டி வரும் ஆசிரியர்கள், எதிர்காலத்தில் மாணவர்கள் முகங்கொடுக்கவிருக்கும் இக்கட்டுகள் குறித்துச் சிந்திப்பதில்லை. பட்டப்படிப்புக்குச் செல்லும்போதும் சரி, தொழிலுக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போதும் சரி, கணிதம் முக்கியம் என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்தத் தவறிவிடுகின்றனர்.

உண்மையில் பாடசாலைகளில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் கணித பாடத்தில் இலகுவான வினா கேட்கப்பட வேண்டும், என்ற எதிர்பார்ப்பை களைய முடியும். வெட்டுப்புள்ளிச் சிக்கலையும் தீர்க்க முடியும்.

Comments