அவள் என்னசெய்வாள்? | தினகரன் வாரமஞ்சரி

அவள் என்னசெய்வாள்?

அவள் பாவம்.

நிரம்ப எதிர்பார்ப்போடு அவள் உருதுவானாள்.

இன்னும் அவள் நினைத்த தெதுவும் நடக்கவில்லை.

அதற்கான காரணம் அவளுக்கும் தெரியவில்லை. அவளின் பெற்றாருக்கும் தெரியவில்லை.

அவளின் பெயர் காஞ்சனா. இந்த மாதத்தோடுஅவளுக்கு வயது முப்பத்தைந்தாகிறது.

அவளின் பாடசாலைக் காலங்களில் காதலிக்க முயற்சித்திருந்தாள். கைகூடவில்லை. காதலிப்பது அவளுக்கு அவ்வளவு சுலபமாகவும் இருக்கவில்லை. மற்றவர்கள் திடீர் திடீரென்று காதலில் விழும்போது அவளுக்கு வியப்பாக இருந்தது.

தன் உருவைத் தானே கண்ணாடியில் பார்ப்பாள். தன் அழகையிட்டுஅவளுக்குப் பெருமை.

உண்மையில் அவள் நல்ல அழகிதான்.

காதலும் வரவில்லை, கல்யாணமும் வரவில்லை.

அவளின் அப்பா பல வரன்களை ஒழுங்கு செய்தார்.

வருவார்கள். பார்ப்பார்கள்.

பிறந்த ஊர் கேட்பார்கள். அந்த ஊரில் தங்களுக்குத் தெரிந்த சில பெயர்களைச் சொல்லி அவர்கள் உங்களுக்குச் சொந்தமா என அவளின் அப்பாவைக் கேட்பார்கள்.

“தெரியும்” என அப்பா சொன்னால் “அவர்கள் உங்களுக்குச் சொந்தமா?” எனக் கேட்பார்கள். இல்லை என்று அவர் சொன்னால் வேறு சிலரின் பெயர்களைச் சொல்லி தங்களுக்குத் தேவையான விடையைப் பெறுவதில் மும்முரமாக இருப்பார்கள்.

இவை எல்லாம் அவளின் குடும்பம் என்ன சாதியென அறிவதுதான் நோக்கம்.

அவர்களின் சாதியாக அவள் குடும்பம் இல்லை எனும்போது சாதுரியமாகப் பிறகு சொல்வதாகக் கூறி நழுவி விடுவார்கள்.

காஞ்சனா ஒன்றும் ஊரில் பிறந்தவளல்ல.

லண்டனில் பிறந்து லண்டனில் வளர்ந்து லண்டனில் வயதுக்கு வந்தவள்தான். இந்தச் சாதி விடயம் அவளுக்குத் தெரியாது.

தகப்பன் சொல்லித்தான் தெரியும். ஆனாலும் லண்டனில் படித்து வளர்ந்த பெண்ணாகையால் நம்பவில்லை.

அவளைப் பெண் கேட்டு வருபவர்களின் மகனும் லண்டனில் பிறந்து வளர்ந்தவன் தான்.

“எங்கடை பிள்ளையை விடேக்கை நாங்கள் நல்ல இடத்திலைவிடவேணும்” என்று பெரியகாரணம் சொல்வார்கள்.

என்னதான் வளர்ந்த நாடுகளுக்கு வந்தாலும் தமிழ்ச் சமூகம் இப்படித்தான் வாழ்கிறது.

இது புதியதலைமுறைப் பிள்ளைகளுக்குத் தவறாகத் தெரிந்தாலும் பெற்ேறார்களால் பல காரணங்கள் சொல்லப்பட்டு அடக்கப்பட்டு விடுகிறார்கள்.

‘ சாதி குறைந்தவர்கள் ஒழுக்கமற்றவர்கள் சுகாதாரம் தெரியாதவர்கள்‘ என்று தங்கள் பிள்ளைகளுக்கு நாளும் பொழுதும் தங்கள் பிள்ளைகளை மூளைச் சலவை செய்து விடுவார்கள்.

சில பெற்ேறார்கள் எங்கள் பிள்ளைகளுக்கு எதுவும் தெரியாதென கூறினாலும் நடைமுறையில் எதுவுமே இல்லை.

காஞ்சனாவைப் பலர் பார்க்க வந்தும் இன்னும் எதுவும் நடக்கவில்லை. சில அவர்கள் நிராகரித்தது சில காஞ்சனாவின் அப்பா நிராகரித்தது. அவளின் ஆசைகளை யாரும் பொருட்படுத்தவில்லை.

அவளின் உணர்வுகளை யாரும் உள்வாங்கவில்லை.

அவளின் பெற்ேறார்கட்டும் அல்லது அவளை வந்து பார்க்கின்ற மாப்பிள்ளைப் பெருமக்களாகட்டும் அவளை ஒரு பெண்ணாகக் கருதவேயில்லை.

பதினைந்து வயதில் ருதுவடைந்தாள்.

“ இனி என்ன நீங்கள் மாப்பிள்ளை பார்க்க வெளிக்கிடவேணும்” இப்படி

காஞ்சனாவின் அப்பாவைப்பார்த்து கிண்டல் செய்தார்கள்.

காஞ்சனாவும் மெல்லிய புன்னகையை உதிர்த்து அவர்களின் கிண்டலுக்கு உரம் சேர்த்தாள்.

ஏதோ இனி தனக்குக் கல்யாணம் நடக்கப்போகிறது என்று கனவு கண்டாள். யாரோ தெரியாத ஓர் அந்நியனைத் தன் கணவனாக எண்ணி அவள் கனவுகள் வலம் வந்தன.

இப்படிப் பலவருடங்கள்.

எதுவுமே நடக்கவில்லை.

அவள் சர்வகலாசாலை சென்ற போதுஅவளின் அம்மாவும் அப்பாவும் “பிள்ளை கவனம். யாரையும் பார்த்திடாதை. நாங்கள் இருக்கிறம். உனக்கேற்ற கணவனை நாங்கள் பார்த்துத் தருவம்”

என்று எச்சரித்து அனுப்பியிருந்தார்கள்.

இதனால் அவளுக்குக் காதலும் வரவில்லை. இன்னும் கல்யாணமும் நடக்கவில்லை.

உணர்ச்சிகள் கொப்பளிக்கும் போது வெறும் தண்ணீரைக் குடித்து தன்னை அடக்கிக் கொள்வாள்.

இப்போ அவளுக்கு முப்பத்தி ஐந்து வயதாகி விட்டது. கல்யாண வயதையும் தாண்டியாகி விட்டது.

இப்போ அவளை முதிர்கன்னி என்கிறார்கள்.

ஒரு தடைவ அவளின் கூடப்படித்த நண்பியின் வளைகாப்புக்கு அழைப்பு வந்திருந்தது. அவளுக்குச் சந்தோசமாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கென வெம்பிளி சென்று கிருஷ்ணாவில் நல்லதொரு சாறி வாங்கிக் கொண்டாள்.

தாயையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டாள். அங்கு பலர் கூடி இருந்தனர். பெரும்பாலானவர்களுக்குக் காஞ்சனாவையும் தாயையும் தெரியும்.

ஒருசிலர் அவளைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டனர்.

அந்தக் கட்டம் வந்ததும் எல்லோரும் எழும்பி ஒருவர் பின் ஒருவராக காஞ்சனாவின் நண்பிக்கு வளைகாப்பிட்டுக் கன்னத்தில் சந்தனம் இட்டனர்.

காஞ்சனா போகவில்லை.

அவள் வராதிருப்பதைக் கவனித்த அவள் நண்பி கையசைத்து அவளைக் கூப்பிட்டாள்.

காஞ்சனாவும் எழும்பிச் செல்ல அவளின் நண்பியின் அம்மா மெல்ல முன்னுக்கு வந்து “ காஞ்சனா இஞ்சை ஒருக்கா வாரும்” என்று அவளைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்று “ காஞ்சனா குறை நினைக்காதையுங்கோடா வயித்துப் பிள்ளைத் தாச்சிக்கு நீர் சந்தனம் பூசக் கூடாது” என்று சொல்ல காஞ்சனாவுக்கு யாரோ முகத்தில் அறைந்தது போல இருந்தது.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. வெளியில் வந்து தாயைக் கூப்பிட்டாள். அப்போ யாரோ தாய்க்கு “ நீங்களெண்டாலும் மகளுக்குச் சொல்லக் கூடாதோ” என்று கூறியவார்தைகள் அவள் காதுகளிலும் விழுந்தது.

எதையும் கேளாதவள் போல் தாயையையும் கூட்டிக்கொண்டுவெளியில் சென்றுவிட்டாள்.

வழி நெடுகிலும் இருவரும் ஒன்றுமே கதைக்க வில்லை.

வீட்டுக்கு வந்ததும் காஞ்சனா விக்கி விக்கிஅழுதாள்.

அப்போதான் வீட்டுக்குள் நுழைந்த காஞ்சனாவின் அப்பா “நாளைக்குப் பிள்ளையைப் பார்க்க வருகினம்” என்ற செய்தியைக் கூறினார்.

காஞ்சனாவின் அம்மா நடந்தததைக் கூறினாள்.

“ஒண்டுக்கும் கவலைப் படாதையுங்கோ. இந்த முறை எல்லாம் நல்லாய் நடக்கும்” என்றார்.

என்ன நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு அடித்தளம் வருகின்ற மாப்பிள்ளை வீட்டாரும் இவர்களும் ஒரே சாதி என்பதுதான்.

அவருக்கு ஒரே சந்தோசம்.

அடுத்த நாளும் வந்தது.

மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர்.

பெண் பார்க்கும் படலம் அழகாக நடந்தது.

அவர்களுக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டது.

சாதகத்தைக் கேட்டார்கள். சாதகம் கொடுக்கப்பட்டது.

“ஏதும் பாரதூரமான குற்றம் இருக்கோ” என்று மாப்பிள்ளையின் அப்பா கேட்டார்.

“நாங்கள் அறிஞ்ச அளவிலை ஒண்டும் இல்லைப் பாருங்கோ”

அவர்கள் சாதகத்தோடுபோய் விட்டார்கள்.

மூன்று நாட்கள் கடந்துவிட்டன. பதில் ஏதும் வரவில்லை.

நான்காம் நாள் மாப்பிள்ளையின் அப்பா வீடு வந்திருந்தார்.

காஞ்சனா முன்னுக்கு வரவில்லை.

காஞ்சனாவின் அப்பாவும் அம்மாவும் பதற்றத்தோடு;

அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர் செருமிக் கொண்டு ஆரம்பித்தார்.

“எங்கடை பொடியனுக்கு உங்கடை மகளை நல்லாய்ப் பிடிச்சிருக்கு.”

இவர்கள் இருவரும் மெதுவாகச் சிரிக்க ஆரம்பித்தனர்.

அவர் தொடர்ந்தார்.

“..ஆனால் சாதகம் கொஞ்சம் பிரச்சினை. உங்கடை மகளின்ரை சாதகத்திலை கனக்க பாவக் கிரகங்கள் கூடி நிற்கினம். இராகுவும் கேதுவும் ஒன்றையொன்று பார்க்கிறது மாப்பிள்ளைக்குப் பாதகம் என்று சாத்திரியார் சொல்லிறார். நான் பாருங்கோ உதிலை அவளவு நம்பிக்கை கொண்டவனில்லை. நம்ம மனிசி பிடிவாதமாக நிற்கிறா. குறை நினைக் காதையுங்கோ” என்று கூறிவிட்டு காஞ்சனாவின் சாதகத்தை அவர் மடியில் வைத்துஅவர் எழுந்து நடந்தார்.

காஞ்சனாவின் பெற்றார் திகைத்துப் போயிருந்தனர்.

அறைக்குள் இதைக் கேட்ட காஞ்சனா

“நெத்துக்கு விட்ட முத்தின வெண்டிக்காய் போலப் பேசாமலிருந்தாள்”

அவள் தான் என்ன செய்வாள்?. 

கரவை மு. தயாளன்

Comments