உள்ளூராட்சி மன்றத்தேர்தல்: | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்:

சமூக உணர்வோடு தேர்தலை சந்திக்க மலையக கட்சிகள் முன்வர வேண்டும்

குட்டித் தேர்தல் திருவிழா மலையகமெங்கும் களைகட்ட ஆரம்பித்து விட்டது. அடிதடி ஆர்ப்பரிப்பு என்று முட்டி மோதும் கலாசாரமும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் வந்துவிட்டால் மோதல்களுக்கு இங்கு குறைவிருக்காது. ஒரே தோட்டத்தில் வாழ்பவர்கள் கூட ஆளுக்காள் எதிரிகளாக மாறுவது சர்வ சாதாரணம். வழக்கு, வம்பு, விளக்க மறியல் என சம்பவங்கள் தொடரவே போகின்றன.

கடந்தவாரம் கொட்டகலையில் இ.தொ.காவும் ஹட்டனில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வேட்பாளர் அறிமுக நிகழ்வை நடாத்தின. இதன்போது தலைமைகள் வழமை போல ஆளுக்கு ஆள் சேற்றை வாரி இறைத்துக்கொள்ளத் தவறவில்லை. இவ்வாறான சம்பவங்களால் கட்சி உறுப்பினர்களே பாதிக்கப்படுகின்றனர். காவல் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை என அலைக்கழிக்கப்படுகின்றனர். ஏட்டிக்குப் போட்டியாக அரசியல் செய்யும் அநாகரிக செயற்பாடுகளினால் தான் இவ்வாறான போட்டாப் போட்டிகளும் விரும்பத்தகாத நிழ்வுகளும் அரங்கேறுகின்றன. இது ஒன்றும் புதிய சங்கதியல்ல. கடந்த காலங்களிலும் இதைவிட மோசமான காரியங்களும் நடந்தேறியுள்ளன.

இதே நேரம் வரவு செலவு குழுநிலை விவாதத்தின்போது இ.தொ.காவின் கடந்தகால செயற்பாடுகள் பற்றி மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். கடந்த காலங்களில் மலையக அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி 50 சதவீதம்கூட பயன்படுத்தப்படவில்லை என சாடியிருந்தார் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அ. அரவிந்தகுமார்.

கண்டி மாவட்ட பா.உ. வேலுகுமார் முன்னைய காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதி நுவரெலியா மாவட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என கூறியிருந்தார். பதுளை மாவட்ட பா.உ. வடிவேல் சுரேஷ் ஒருபடி மேலேபோய் அபிவிருத்திக்கென முன்னர் ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி இந்தியாவுக்கு ஏற்றுமதியானது எனப் பழி சுமத்தியிருந்தார்.

இதற்கெல்லாம் உச்சமாக இ.தொ.கா. கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியினை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் உறுதி செய்திருப்பதால் இந்த ஊழல் பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வழமைபோல ஆணித்தரமான வாதமொன்றை நிகழ்த்தியிருந்தார் நுவரெலியா மாவட்ட பா.உ. எம். திலகராஜ்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளையெல்லாம் இ.தொ.கா. கணக்கில் எடுக்கப்போவதில்லை என்பது வேறுவிடயம். ஆனால் குட்டித்தேர்தல் பிரசாரங்களில் இவையெல்லாம் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு சாதகமான விடயங்களாகவே இருக்கப்போகின்றன. மலையகத்தைப் பொறுத்தவரை தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இ.தொ.காவுக்குமிடையே தான் நேரடிப் போட்டிகள் நிலவப்போகின்றன. வாக்குறுதிகள் சிலதை ஓரளவுக்கு தானும் நிறைவேற்றி வரும் தமிழ் முற்போக்குக் கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது மேலும் பலம் சேர்க்குமென நம்பப்படுகிறது.

இதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணி கொழும்பு, எட்டியந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. அதேநேரம் இ.தொ.கா. நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடத் தயாராகியுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பதுளை போன்ற மாவட்டங்களிலும், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தனித்தும் போட்டியிட முன்வந்துள்ளது. இ.தொ.காவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் பிரதமர் ரணிலைப் போலவே ஜனாதிபதி மைத்திரியும் தற்போதைய நிலையில் மலையக மக்களின் மனதை கவர்ந்தவராக மாறிப் போயிருக்கிறார். அதனால் யார்பக்கம் சாய்வது என்பதில் மக்கள் அதிகமாக குழம்பித்தான் போகின்றார்கள்.

அண்மையில் ஹப்புத்தளையில் ஜனாதிபதி கலந்து கொண்ட முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்துக்குச் சமுகமளித்திருந்த பெருந்தோட்ட மக்கள் தொகை இதை உணர்த்தவே செய்கின்றது. இக்கூட்டத்தை இ.தொ.கா சார்பில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை 2012ஆம் ஆண்டு புள்ளிவிபரக் கணிப்பீடுகளின்படி மொத்த சனத்தொகை 7,06,588 ஆகக் காணப்படுகின்றது. இன ரீதியான கணக்கெடுப்பின்படி மலையகத் தமிழர் 53.18 சதவீதமாக காணப்படுகின்றார்கள். ஒட்டுமொத்த தமிழ் பேசுவோர் என்ற ரீதியில் 60 சதவீதமானோர் அடங்குகின்றார்கள். முன்பு 5 பிரதேச சபைகளைக் கொண்டிருந்த இம்மாவட்டம் தற்போது 6 புதிய பிரதேச சபைகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது. நுவரெலியா, கொட்டகலை, அக்கரப்பத்தனை, அம்பகமுவ, நோர்வூட், பொகவந்தலாவ என்பன அவை. இதன்படி மொத்தமாக உள்ள 12 பிரதேச சபைகளில் குறைந்து ஆறிலிருந்து ஏழு வரையிலான பிரதேச சபைகளை தமிழ் சமூகம் பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

பதுளை மாவட்டத்தில் 9 தேர்தல் தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் தொகை 6,43,580 பேர். இதில் தமிழ் மக்களின் வாக்குகள் 1,37703 ஆக உள்ளது. இதில் தற்போதைய நிலையில் வெளிநாடுகளிலும் வெளி மாகாணங்களிலும் 35 ஆயிரம் பேர் வரை இருக்கும் நிலையில் வாக்களிப்போர் தொகை 1 இலட்சத்துக்குள்ளேயே அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு இ.தொ.காவுக்கு செல்வாக்கு இருக்கவே செய்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த போட்டியிடும் இ.தொ.கா. நம்பிக்கையுடனே களமிறங்குகின்றது. பதுளை மாவட்டத்தில் இரண்டு மாநகர சபைகள். ஒரு நகர சபை உள்ளிட்ட மொத்தம் 18 உள்ளூராட்சி மன்றங்களை இலக்கு வைத்து இ.தொ.காவை பங்காளியாகக் கொண்டு தேர்தலை சந்திக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் என்பது அதன் கணக்கு.

எது எப்படியாயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவும் மஹிந்த அணியும் மைத்திரி அணியும் ஒரே கட்சி வாக்காளர்களை இலக்கு வைத்து செய்யும் பிரசாரங்களும் ஐ.தே. கட்சிக்கு அதிகளவு வாய்ப்புக்கு அடிகோலும் என்பதே அரசியல் அவதானிகளின் கணிப்பாக இருக்கின்றது. அந்த வகையில் தேசிய ரீதியில் மைத்திரி, மஹிந்த, ரணில் அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சைக்கு களம் அமைத்துள்ளது.

இ.தொ.கா அரசியல் ரீதியில் பின்னடைவினைக் கண்டுள்ள நிலையில் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள அது வியூகம் வைத்து செயற்படவே செய்யும். ஏற்கனவே இ.தொ.கா பிரமுகர்கள் நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்கள். இப்பொழுது அதே ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரியுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ள இ.தொ.கா. இந்த நல்லாட்சியில் குறைகாண முயற்சிக்குமானால் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தவே செய்யும். எனவே அதன் ஒரே இலக்காக பெரும்பாலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியே இருக்கப் போகிறது என எதிர்ப்பார்க்கலாம். இது இருகட்சிகளுக்கிடையேயான செல்வாக்கை வெளிப்படுத்தும் சவால் நிறைந்த தேர்தல். இதே நேரம் ஒவ்வொரு கட்சியும் சண்டித்தன முனைப்புகளை காட்டாது ஆக்கப் பூர்வமான பிரசாரங்களை முன்னெடுக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி.

ஏனெனில் புதிய கலப்புத் தேர்தல் முறைமையின் கீழ் மலையக பிரதிநிதித்துவம் பறிபோவது என்னவோ உண்மைதான். உதாரணத்துக்கு கடந்த தேர்தலின் போது 20 உறுப்பினர்கள் வரை பதுளை மாவட்டத் தமிழ் மக்களால் பெற முடிந்தது. இம்முறை அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றது. தமிழ் சமூகம் கட்டுக்கோப்புடன் வாக்களிக்கும் பட்சத்தில் பசறை, லுணுகலை, ஹப்புத்தளை. ஹல்தும்முல்லை, எல்ல பிரதேச சபைகளில் செல்வாக்க செலுத்த முடியலாம். ஆனால் தான் வெல்லாவிட்டாலும் எதிராளி வென்று விடக் கூடாது என்பதிலேயே மலையக கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்குமாயின் விளைவு என்னவோ சறுக்கல்தான். எனவே சமூக உணர்வோடு தேர்தலை சந்திக்க மலையக கட்சிகள் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயம். 

பன். பாலா   

Comments