கிரிக்கெட்: 2017ஆம் ஆண்டும் இந்திய அணியே ஆதிக்கம்! ஆப்கான் அணியும் முன்னேற்றம் | தினகரன் வாரமஞ்சரி

கிரிக்கெட்: 2017ஆம் ஆண்டும் இந்திய அணியே ஆதிக்கம்! ஆப்கான் அணியும் முன்னேற்றம்

கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் மிக மோசமான ஆண்டாகும். மிகவும் மோசமான பல தோல்விகளைத் தந்துவிட்டுச்சென்ற ஆண்டில் டெஸ்ட், மற்றும் ஒரு நாள், டி/டுவெண்டி என்ற மூவகைப் போட்டிகளிலும் இலங்கை அணி மற்றைய கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளை விட கடந்த வருடம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆனால் கடந்த வருடம் சர்வதேச ரீதியில் இந்திய அணியே கூடுதலான வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்திருந்தது. கடந்த வருடம் முதல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளான அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளில் ஆப்கானிஸ்தான் அணியே ஒருநாள் மற்றும் டி/டுவெண்டி போட்டிகளில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தித் தீவுகள், இலங்கை, பங்களாதேஷ் போன்ற பலம்வாய்ந்த அணிகளை பின்னுக்குத்தள்ளிவிட்டு கூடிய வெற்றிகளைப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் மொத்தமாக 47 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 8 இரட்டைச் சதங்கள் அடங்களாக 92 சதங்கள் பெறப்பட்டுள்ளன. டெஸ்ட் போட்டிகளில் தனிநபர் பெற்ற கூடிய ஓட்டங்களாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்து வீரர் அலஸ்டயர் குக் பெற்ற 244 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டங்களாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற 687 ஓட்டங்களும் ஒரு அணி பெற்ற குறைந்த ஓட்டங்களாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக பங்களாதேஷ அணி பெற்ற 68 ஓட்டங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் 129 நடைபெற்றுள்ள ஒருநாள் போட்டிகளில் 86 சதங்கள் பதிவாகியுள்ளது. இதில் இலங்கை அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற போட்டியொன்றில் ரோஹித் சர்மா பெற்ற 208 ஓட்டங்கபே தனிநபர் கூடிய ஓட்டமாகவும் இப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற 4 விக்கெட் இழப்புக்கு 392 ஓட்டங்களே கடந்தாண்டு ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டங்களாகவும் பதிவாகியுளளதுடன் ஒரு அணி பெற்ற குறைந்த ஓட்டங்களாக சிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராகப் பெற்ற 54 ஓட்டங்களே பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் மொத்தம் 63 போட்டிகள் நடைபெற்றுள்ள டி/டுவெண்டி போட்டிகளில் 6 சதங்கள் பெறப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லெவிஸ் பெற்ற 120 ஓட்டங்களே இவ்வகைப் போட்டிகளில் கடந்த ஆண்டு வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகவும் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற 260 ஓட்டங்களே இவ்வகைப் போட்டிகளில் கடந்த ஆண்டு ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டங்களாகவும் பதிவாகியுள்ளன..

கடந்த வருடம் இலங்கை அணி கூடிய போட்டிகளில் கலந்து கொண்டு கூடிய தோல்விகளைச் சந்தித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. கடந்த வருடம் 13 டெஸ்ட், 29 ஒருநாள், 15 டி/டுவெண்டி என மொத்தமாக 57 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 40 போட்டிகளில் தோல்வியுற்று ஒரு வருடத்துக்குள் ஒரு அணி பெற்ற கூடிய தோல்விகள் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இவ்வருடமும் இந்திய அணியே கூடிய டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுள்ளது. அவ்வணி 11 போட்டிகளில் வியையாடி 7 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன் கடந்த வருடம் அவ்வணி ஒரு டெஸ்டில் மாத்திரமே தோல்வியுற்றுள்ளது.

கடந்தாண்டு இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்டத் திறமையைப் பார்ப்போமாயின் திமுத் கருணாரத்ன 13 போட்டிகளில் 1031 ஓட்டங்களையும், தலைவர் தினேஸ் சந்திமால் 12 போட்டிகளில் 1003 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். டெஸ்ட் துடுப்பாட்டத்தில் சர்வதேச ரீதியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 11 போட்டிகளில் விளையாடி 1309 ஓட்டங்களைப் பெற்று இவ்வருடம் கூடிய ஓட்டங்களைப் பெற்றவராகத் திகழ்கிறார்.

டெஸ்ட் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய வீரர் நதன் லயன் கடந்த வருடம் 11 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்திலுள்ளார். வழமை போல் இலங்கையில் இம்முறையும் ரங்கன ஹேரத்தே 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை சார்பாக கூடிய விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இலங்கை அணிக்கு மிக மோசமான வருடமாகும். 8 ஒருநாள் தொடர்களில் பங்களாதேஷுடன் நடைபெற்ற தொடரை மட்டுமே சமன் செய்துள்ளது. ஏனைய அனைத்துத் தொடர்களையும் இழந்துள்ள இலங்கை அணி ஒருநாள் வரலாற்றில் முதன் முதலில் கடந்த வருடமே சிம்பாப்வேயுடனான தொடரையும் இலங்கை அணி இழந்தது. சர்வதேச ரீதியில் இந்திய அணியே கூடிய வெற்றிகளைப் பெற்றுள்ள அவ்வணி 29 போட்டிகளில் 21 வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இலங்கை அணியின் ஒருநாள் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் உபுல் தரங்க கடந்த வருடம் 25 போட்டிகளில் விளையாடி 2 சதம், 6 அரைச்சதம் அடங்கலாக 1011 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். சர்வதேச ரீதியில் கூடுதலான ஓட்டங்களை இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 26 போட்டிகளில் விளையாடி 6 சதம், 7 அரைச்சதங்கள் அடங்களாக 1460 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். ஒருநாள் பந்து வீச்சைப் பொறுத்தவரை இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால், அகில தனஞ்சய சற்றுச்சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் குறிப்பிடத்தக்களவு கடந்த வருடம் ஒருநாள் பந்து வீச்சில் ஒருவரும் பிரகாசிக்கவில்லை.

சர்வதேச ரீதியில் பாகிஸ்தான் அணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி 18 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழத்தி கடந்த வருடம் கூடிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரஷீத் கான் 16 போட்டிகளில் 43 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடந்த வருடம் சாதனை படைத்திருந்தார்.

டி/டுவெண்டி போட்டிகளைப் பொறுத்தவரையில் கடந்த வருடம் கூடிய போட்டிகளில் வினையாடியுள்ள இலங்கையே கூடிய தோல்விகளையும் அடைந்தள்ளன. அவ்வணி 15 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளையும் 5 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன், 5 தொடர்களில் ஒரு தொடரில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச ரீதியில் டி/டுவெண்டி போட்டிகளில் பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது அவ்வணி 10 போட்டிகளில் மோதி 8 வெற்றிகளைப் பெற்று கடந்தாண்டு சர்வதேச டி/டுவெண்டி தரவரிசையில் முதலிடத்திலுள்ளது.

இவ்வகைப் போட்டிகளிலும் இந்திய அணியே 9 வெற்றிகளைப் பெற்று கூடிய வெற்றிகளைப் பெற்ற அணியாக சாதனை படைத்துள்ளது. கத்துக்குட்டி அணியாகக் கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணியும் 10 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று கடந்தாண்டு பலம்வாய்ந்த அணிக்குகெல்லாம் தன் வரவை பறைசாற்றியுள்ளது. டி/டுவெண்டி துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எவின் லெவிஸ் 9 போட்டிகளில் விளையாடி 1 சதம் 2 அரைச்சதம் அடங்கலாக 357 பெற்று கடந்த வருடம் கூடிய ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்து வீச்சில் இந்திய சுழற் பந்து வீச்சாளர் யுஸ்வேந்ரா சஹால் 11 போட்டிகளில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடந்த ஆண்டு இவ்வகைப் போட்டிகளில் கூடிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானும் 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கடந்த வருடம் 6 டி/டுவெண்டி போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து விச்சாளர் லசித் மலிங்க 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை சார்பாக கடந்த வருடம் கூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சுஹைல் ஹில்மி 

Comments