விராட் கோலி பற்றி மனம் திறந்தார் கயான் | தினகரன் வாரமஞ்சரி

விராட் கோலி பற்றி மனம் திறந்தார் கயான்

இத்தாலியில் திருமண பந்தத்தில் இணைந்த விராட் கோஹ்லி- அனுஷ்கா ஜோடியின் திருமண வரவேற்பு வைபவம் மும்மை நகரில் நடைபெற்றது. இவ்வைபவத்துக்கு இந்திய இந்நாள், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களும், திரையுலக நட்சத்திரங்களும், பிரபல அரசியல்வாதிகளும் கலந்து சிறப்பித்தனர். இத்திருமண வைபத்திற்கு கோஹ்லியின் விசேட அழைப்பின் பேரில் இலங்கையிலிருந்தும் ஒரு முக்கியஸ்தர் கலந்து கொண்டார்.

அவர் இலங்கையின் பிரபல அரசியல்வாதியோ, கிரிக்கெட் நட்சரத்திரமோ, திரையுலக நட்சத்திரமோ அல்ல. இலங்கை அணி எங்கு சென்று ஆட்டங்களில் கலந்து கொண்டாலும் வீரர்களை உற்சாகப்படுத்த தேசியக் கொடியுடன் மைதானத்தில் வலம்வரும் மாற்றுத் திறனாளியான கயான் சேனாநாயக்க. அவர் இந்திய அணி பற்றியும் தலைவர் விராட் கோஹ்லி பற்றியும் அண்மையில் கூறியிருந்தவை.

2007ஆம் ஆண்டிலேயே எனக்கு கோஹ்லி அறிமுகமானார். அந்த அறிமுகத்துடன் எங்கள் நட்பு வளர்ந்தது. இலங்கை அணி இந்தியா செல்லும் சமயங்களிலும் இந்திய அணி இலங்கை வரும் போதும் நானும் அவர்களுடன் இணைந்துகொள்வேன். அப்போதெல்லாம் இந்திய அணியினர் என்னுடன் சகஜமாகப் பழகுவார்கள். அவ்வணியின் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, அஜின்கா ரஹானே, மனிஷ் பாண்டே. ஷிகர் தவான் ஆகியோர் என்னுடன் நெருங்கிப் பழகுகிறார்கள். அவர்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களுடன் மதிய உணவு அல்லது இரவு உணவு விருந்தில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்துவார்கள்.

கடந்த இந்திய டெஸ்’ட் தொடரின் போது கோஹ்லி என்னை நேரடியாகச் சந்தித்து தன் திருமணத்தைப் பற்றிச்சொல்லி திருமண வரவேற்பு வைபவத்தில் நீ கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் கூறியிருந்தார். அதன் பின் அவர் இத்தாலியில் இருக்கும் போது நான் திருமண வாழ்த்துச் சொன்னேன். அப்போது அவர் நீங்கள் இன்னும் இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். எனவே நீங்கள் கட்டாயமாக எனது திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்திய அணியினருடன் வாருங்கள். நான் அங்கு வரும் முறையை உங்களுக்கு இலகு படுத்தித்தருகிறேன். என்று சொல்லி விட்டு இந்திய அணியின் முகாமையாளரிடம் விஷயத்தைச் சொல்லி என்னை அழைத்து வரும்படி கூறினார்.

அதன் பின் முகாமையாளர் என்னை இந்திய அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து நான்கு கார்களில் நாங்கள் புறப்பட்டோம். நானும் குல்திப் யாதவ், மனீஸ் பாண்டே மற்றும் இரு கிரிக்கெட் வீரர்கள் ஒரு காரிலும் மற்றைய வீரர்கள் இன்னும் மூன்று கார்களிலும் புறப்பட்டோம்.

திருமண விழாவில் என்னைக் கண்ட விராட் கோஹ்லி மிகவும் மகிழ்ச்சியாக கைகுலுக்கி என்னை வரவேற்று அழைத்துச் சென்று அனுஷ்காவுக்கும் என்னை அறிமுகப்படுத்தி விட்டு மிகவும் சாதாரணமாக அவரே என்து கையடகத் தொலைபேசியை எடுத்து மூவரும் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டோம். எதுவிதத் தயக்கமோ, தலைக்கணமோ சிறிதும் இல்லாமல் மிக நீண்ட நேரம் அவர் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தார்.

விராட் கோஹ்லியிடமிருந்து திருமண விழாவுக்கு அழைப்பு கிடைத்தவுடன் முதலில் நான் எனது உடையைப் பற்றித்தான் கொஞ்சம் கவலைப்பட்டேன். என்றாலும் அங்கு வாடகைக்கு எடுக்கலாமே என்று அதற்கு முயற்சித்த போது இதைக் கேள்விப்பட்ட எனது இந்திய நண்பரொருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) என்னைத் திட்டிவிட்டு அவரின் செலவிலேயே எனக்கு திருமணத்திற்குச் செல்வதற்கான ஆடையை தயார் செய்துகொடுத்தார். அதை அணிந்துதான் நான் அங்கு சென்றேன். இந்திய ஆடையுடன் என்னைக் கண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் என்னை அணுகி படமெடுத்துக் கொண்’டார்கள். விரேந்திர செவாக், சுரேஷ் ரெய்னா மிக நீண்ட நேரம் என்னுடன் கதைத்தார்கள். பொதுவாக இந்திய அணியில் உள்ளவர்கள் மட்டுமல்ல ஓய்வு பெற்ற வீரர்களும் என்னுடன் சகஜமாகப் பழகி அவர்களின் வீடுகளுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்துள்ளனர்.

பொதுவாக இலங்கை ரசிகர்களுக்கு இந்திய வீரர்களைப் பிடிக்காது. அதுவும் கோஹ்லியைப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களும், முக்கியமாக தலைவர் கோஹ்லியும் ரொம்ப நல்லவர்கள். தலைக்கனம் இல்லாம் சகஜமாகப் பழகக் கூடியவர்கள். ஆனால் விளையாட்டு என்று வரும் போது மைதானத்தில் ஆக்ரோஷமாக மோதுவார்கள். கோஹ்லியும் அப்படிதான். ஆனால் மைதானத்தை விட்டு வெளியில் பழகும் போது அவர்கள் மிகவும் வித்தியாசமாக அன்பாகப் பழகுகிறார்கள்.

இந்திய வீரர்களின் மனிதாபிமானத்துக்கு இன்னுமொரு சம்பவத்தை கயான் கூறினார். அவருடன் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் மற்றொரு வீரரான நிலாம் என்பரையும், என்னையும் ரோஹித் சர்மா ஒரு நாள் பகல்போசன விருந்துக்கு அழைத்திருந்தார்.

அப்போது திடீரென நிலாமின் தந்தை சுகவீனமுற்றுள்ளதாக தகவல் வந்தது. இதை அறிந்த ரோஹித் சர்மா உடனே புறப்படும்படி நிலாமிடம் கூறினார். ஆனால் நிலாமிடம் உள்ள விமான டிக்கெட்டின் திகதியோ இன்னும் இரு வாரங்களில் செல்ல வேண்டிய விமான டிக்கெட். இதை அறிந்துகொண்ட ரோஹித் சர்மா உடனடியாக இலங்கைக்குப் புறப்படுவதற்கான டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொடுத்து உதவினார்.

இப்படிக் கூறிய கயான் தான் இலங்கை அணியின் வெற்றிக்காகவும், இலங்கை அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் என்னாலான முழு முயற்சியையும் செய்து வருகிறேன். இவைகளை நான் நாட்டுக்காகவே செய்கிறேனே தவிர இலங்கை வீரர்களிடமிருந்து எதையும் எதிர்பார்த்தல்ல என்றும் கூறிய அவர் இதுவரை இலங்கை அணி வீரர்களின் திருமண வைபவங்களுக்கோ அல்லது வேறு விசேசங்களுக்கோ அழைப்புக்கள் கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

வீரர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் அவர்களிடமிருந்து பிரதியுபகாரமாக எதையும் எதிர்பார்க்காமல் கயான் சேனநாயக்க நாட்டுக்காக செய்யும் சேவைக்கு மதிப்பளித்து இந்திய வீரர்கள் கயானுக்கு செய்த உபசரிப்பு கண்ணியமான கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடும் நம் நாட்டவர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எம்.எஸ்.எம். ஹில்மி 

Comments