அமெரிக்காவில் அரச நிறுவனங்கள் முடக்கம் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவில் அரச நிறுவனங்கள் முடக்கம்

புதிய பட்ஜட்டை செனற்  தோற்கடித்ததால் நெருக்கடி

நமது நிருபர்

 

அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான புதிய வரவு செலவுத்திட்டத்திற்கு செனற் சபை அங்கீகாரம் வழங்க மறுத்ததையடுத்து அந்நாட்டு அரசாங்கம் நேற்றிலிருந்து முடங்கியுள்ளது. அரச நிறுவனங்கள் தொழிற்பட முடியாமல் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

எல்லைப் பாதுகாப்பு, குடியேற்ற வாசிகள் பிரச்சினையை மையமாக வைத்து ஜனநாயகக் கட்சியினர் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர்.

இதனால், கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்க அரச நிர்வாக இயந்திரம் முடங்கியுள்ளது. நேற்று மதியத்திற்கு முன்னர் நிதியொதுக்கீட்டுச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டியிருந்த நிலையில், தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்பட்டது. இத னால், பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஜனநாயகக் கட்சியினர் தேசிய பாதுகாப்பில் அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நெருக்கடியான நிலையில், அத்தியாவசிய சேவைகளைத் தவிர ஏனைய அனைத்து அலுவல்களும் ஜி.எம்.ரி. நேரப்படி நேற்றுக்காலை 5 மணிமுதல் (இலங்கை நேரம் காலை 10 முப்பது) முடங்கியுள்ளன.

வீடமைப்பு, சுற்றுச்சூழல், கல்வி, வர்த்தக திணைக்களங்களின் ஊழியர்கள் வீட்டில் இருக்கின்றனர். திறைசேரி, சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து துறைகளைச் சேர்ந்த ஊழியர்களில் அரைவாசிப்பேர் நாளை திங்கட்கிழமை பணிக்குச் செல்லமாட்டார்கள். ஆயினும், அத்தியாவசிய சேவைகளான தேசிய பாதுகாப்பு, தபால் சேவை, விமான சேவைக் கட்டுப்பாடு, சிறைச்சாலைகள், அவசர மருத்துவ உதவிச் சேவை, அனர்த்த உதவி, வரிவிதிப்பு, மின்னுற்பத்தி முதலான துறைகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நிதியொதுக்கீட்டுச் சட்ட மூலத்தை விரைந்து நிறைவேற்ற முடியும் என்று அமெரிக்க அரசு நம்பிக்ைக தெரிவித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசு துறை முடக்கத்தின்போது மக்கள் ஆத்திரமடைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. (வி)

Comments