இலங்கை, நேபாளத்துக்கு சீனா உதவி; இந்தியா அக்கறை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை, நேபாளத்துக்கு சீனா உதவி; இந்தியா அக்கறை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த டிசம்பர் 9ஆம் திகதி சீனாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வருடம் (2018) ஜனவரி ஒன்றாம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கை, சீன மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கொடிகள் ஏற்றப்பட்டன.

ஆரம்பித்தில் இலங்கைக்கொடி அதிக உயரத்திலும் சீன மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் கொடிகள் கீழே சம உயரத்திலும் பறக்கவிடப்பட்டிருந்தன. ஆனால் சிறிது நேரத்தில் இலங்கைக் கொடியும் சீனக் கொடியும் ஒரே உயரத்தில் பறக்க விடப்பட்டன.

சீனக்கொடி இலங்கைக் கொடியுடன் ஒரே உயரத்தில் பறக்கவிடப்பட்டமை இந்தியாவுக்கு ஆத்திரமூட்டியுள்ளது. இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் இந்தியாவுக்கு அடுத்துள்ள நாடான சீனாவின் கொடி எப்படி ஒரே உயரத்தில் பறக்க முடியும் என்ற இந்தியாவின் கேள்விதான் இந்த நிலைக்குக் காரணமாகும்.

இதேநேரம் இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள துறைமுக வளவில் சீனா 60 மாடி கட்டிடங்கள் மூன்றை நிர்மாணித்துத்தரப் போவதாகக் கூறப்பட்டுள்ளமை இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேநேரம் சீனாவின் சென்சென் நகரை போன்று கொழும்பு நகரத்தையும் மேம்படுத்த இருப்பதாக சீனாவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியிருப்பது இந்தியாவை மேலும் கடுப்பாக்கியிருக்கிறது.

அவ்வாறு கொழும்பை மேம்படுத்துவது இலங்கையால் மட்டுமே முடியாத ஒன்று. அதற்கான நிதி உதவியையும் ஆலோசனையையும் சீனாதான் கொடுத்துதவ வேண்டியுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் நேபாளம் நீண்டகாலமாக இந்தியாவிடம் இருந்துதான் இணையத்தள சேவையைப் பெற்றுவந்தது. ஆனால் கடந்த வாரம் முதல் நேபாளம இந்தியாவிடமிருந்து பெற்ற இணையத்தள சேவையை துறந்துவிட்டு, இப்போது சீனாவிடமிருந்து இணையத்தள சேவையைப் பெற்றுள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு மாறாக சீன நிறுவனங்களிடமிருந்து தடையில்லா இணையத்தள சேவை கிடைப்பதாக நேபாள டெலிகொம் தெரிவிக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர். இந்திய டெலிகொம் நிறுவனங்களான எயார்செல், டாட்டா ஆகிய நிறுவனங்களிடமிருந்து நேபாளம் இணையத்தள சேவையைப் பெற்றது. ஆனால் இந்த சேவை அடிக்கடி துண்டிக்கப்பட்டு வந்ததாகவும் அதனால்தான் சீனாவுடன் கைகோர்க்க நேர்ந்ததாகவும் நேபாளத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

நேபாள அரசின் இந்த முடிவு இந்தியாவுக்கு வருமான இழப்பைக் ஏற்படுத்தியது மட்டுமன்றி அயல் நாடுகளுக்கிடையே இந்தியாவுக்கு இருந்து வந்த நட்புறவிலும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் இணைய வேகம் தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வின் முடிவில் இந்தியாவின் இணைய வேகம் மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்தது.

இந்தியாவுக்கு அடுத்துள்ள இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் சீனாவை நோக்கிச் செல்கின்றன. இதனை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.

இந்திய தலைநகரான டில்லியில் அண்மையில் இராணுவ தினம் இடம்பெற்றது. அச்சமயம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, இந்திய இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

சீனா ஏற்கெனவே தெற்காசிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொண்டுள்ளது. நிதியையும் வேறு பல்வேறு உதவிகளையும் கொடுத்து அந்த நாடுகளை சீனா தன்வசப்படுத்தியுள்ளது.

இதனால் இலங்கை, நேபாளம், பூட்டான், மியன்மார், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை இந்தியா தன்வசம்தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்திய இராணுவத் தளபதி இவ்வாறு கூறியது தெரிந்தோ என்னவோ இந்தியா கடந்த வாரம் ஆக்கபூர்வமான செயற்பாட்டின் மூலம் இலங்கைக்கு உதவியிருக்கிறது.

இலங்கையின் வட பகுதியிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த 45.27 டொலர்கள் (இலங்கை நாணயப்படி 6.9 பில்லியன் ரூபா) நிதியை இந்தியா இலங்கைக்கு கொடுத்து உதவியுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்கென முழு அளவிலான வர்த்தக துறைமுகமாக மேம்படுத்துவதற்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கில் காங்கேசந்துறையை ஒரு கடல் மையமாக மேம்படுத்தும் இந்த செயற்பாட்டுடன் வட பகுதியில் மேலும் சில மீள்புனரமைப்பு செயற்பாடுகளிலும் உதவுவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கையில் 30 வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து அங்கு அமைதி திரும்பியுள்ளது. யுத்தகாலத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்குகொண்டு சீனா அதன் மூலம் தனது பட்டுப்பாதை விஸ்தரிப்பினையும் மேற்கொண்டு வருகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் ஸ்டேடியம் என்று ஆரம்பித்த செயற்பாடுகள் துறைமுக நகரம் தாமரைக்கோபும் என விஸ்தரிக்கப்படுகின்றன.

ஆனால் இந்தியாவுக்குத்தான் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் முதலில் வழங்கப்பட்டது. எனினும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவினால் முடியாமல் போனதால் சீனா அதனைக் கைப்பற்றியது மட்டுமல்லாது, இலங்கைக் கொடியுடன் சமமான உயரத்தில் தமது கொடியையும் பறக்கவிடக் கூடிய சூழலை தோற்றுவித்துள்ளது.

வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் 43 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டமே இந்தியா அண்மையில் இலங்கைக்கு வழங்கிய உதவித் திட்டமாகும்.

அத்துடன், வட பகுதியிலுள்ள பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையைத் திருத்துதல் மற்றும் அதனை 950 மீற்றர் நீளத்திற்கு விஸ்தரித்தல், வவுனியாவில் 200 கட்டில்களைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழவத்தில் விவசாய பீடமொன்றை ஏற்படுத்துதல், அச்சுவேலியில 25 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழில் வலையமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட ஒரு சில அபிவிருத்தி செயற்திட்டங்களில் மட்டுமே இந்தியா ஈடுபட்டுள்ளது. ஆனால் சீனாவின் திட்டங்கள் அதைவிடப் பெரியவையாகும்.

இலங்கையிலுள்ள இந்திய துறைமுக அதிகாரியொருவர் இதுபற்றிக் கூறும்போது இலங்கையில் சீனா பல்வேறு கட்டிட நிர்மாணங்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் வர்த்தக வட்டியுடனேயே கட்டப்படுகின்றன. ஆனால் இந்தியத் திட்டங்கள் எவ்வித வட்டியையும் இல்லாத இலவசத் திட்டங்களாகவே கொடுக்கப்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

ராம்ஜி

Comments