எடப்பாடி அரசை குறிவைத்து கட்சிகள் ஆரம்பிக்கும் ரஜினி கமல் | தினகரன் வாரமஞ்சரி

எடப்பாடி அரசை குறிவைத்து கட்சிகள் ஆரம்பிக்கும் ரஜினி கமல்

ரஜினி காந்த் இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று கிளப்பிய பரபரப்பு அடங்குவதற்கு முன்னரேயே, தொடர்ச்சியாக படப்பிடிப்புகளில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் தன் மௌனம் கலைந்து வந்து, தன் புதிய அரசியல் கட்சியை 21ம் திகதியாகிய இன்று அறிவிக்கப்போவதாக தெரிவித்ததன் மூலம், உறக்கமே இல்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசியலை மீண்டும் சூடேற்றிருக்கிறார்.

இவர்கள் இருவருமே தீவிர அரசியலுக்கு வருவதற்கான ஒரே காரணம், ஜெயலலிதா, என்ற அரசியல் பேராண்மை திடீரென இல்லாமல் போனதும், கலைஞர் என்ற பேரொளி மங்கிப் போனதும்தான் என்பதே உண்மையானாலும் இதை இவர்கள் ‘சூழ்நிலை’ கருதி ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றுக்கு மேல் இன்னொரு காரணமும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசு ஒரு கையாலாகாத, மத்திய பா.ஜ.க அரசின் கைக்கூலியாக இருந்து வருவதால் அது மக்களின் செல்வாக்கை இழந்து வந்திருப்பதும், இந்த நடிகர்களை உசுப்பிவிட்டுள்ளது. இன்றைக்கு தி.மு.க தமிழக அளவில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தாலும், அதற்கு இணையான கட்சியாக அ.தி.மு.கவை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அதனால்தான் டி.டி.வி தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றார். இரண்டு ஊழல் அணிகளில் எந்த அணி என்று கேள்விக்கே ஆர்.கே. வாக்காளர்கள் பதில் சொல்லி இருந்தார்கள். எனவே தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் தமிழக மெங்கும் படகோட்டி இல்லாத தோணியாகக் கிடப்பதால் அதற்கு படகோட்டியாக விளங்குவதற்கு இந்த இரண்டு உச்சபட்ச நடிகர்களும் விரும்புகிறார்கள் என்பதே பட்டவர்த்தனமான உண்மை.

ஆனால் உண்மையாகவே திறமை வாய்ந்த, சட்டசபை அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் இல்லையா?

இருக்கிறார்கள். ஒருவர் நெடுமாறன். அப்பழுக்கற்றவர். ஆனால் அவருக்கு வயதாகி விட்டது இன்னொருவர் கம்யூனிஸ்ட் நல்லண்ணு. மிக மிக தூய்மையானவர். அவருக்கும் வயதாகி விட்டது. மற்றொருவர் வைகோ. தமிழகத்தை சிறப்பாக ஆளக்கூடிய சகல திறமைகளும் கொண்டவர். திராவிட கொள்கைக்கு கலைஞரின் பின் தலைமைத்துவம் தரக்கூடிய சகல தகுதிகளும் கொண்டவர். அப்பழுக்கற்றவர். கருணாநிதியைப் போல சிறந்த பேச்சாளர். உச்ச நீதிமன்றத்தில் வழக்காடக்கூடிய தகுதி படைத்த வழக்கறிஞர். ஆங்கிலப் புலமையோடு பாராளுமன்ற மற்றும் சட்டசபை அனுபவமும் கொண்டவர். நீண்ட நெடிய காலமாக அரசியலில் உள்ளவர்.அண்ணாதுரையைப்போல சிறந்த ஆட்சியைத் தரக்கூடியவர். அவர் தி.மு.கவில் இருந்தால் இரண்டாம் நிலைத் தலைவராக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சம் எழுந்ததாலேயே கலைஞர் கருணாநிதியால் தி.மு.கவை விட்டு விரட்டப்பட்டார். ஸ்டாலினுக்கு தர வேண்டிய நாட்காலியை காலியாக வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் கலைஞருக்கு.

ஆனால் பாருங்கள் இத்தகைய ஆளுமையும் திறமையும் கொண்ட வை.கோ.வுக்கு வெகுஜன மக்களின் ஆதரவு இல்லை. நல்லவர், வல்லவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் வாக்குபோட் மாட்டார்கள். நல்லவராகவும் வல்லவராகவும் இருந்தால் மட்டும் போதாது, ஒரு மாயையை உருவாக்குபவராகவும், அரசியலுக்கும் அப்பால் ஒரு கவர்ச்சி கொண்டவராகவும் இருந்தால் மட்டுமே தமிழர்கள் மத்தியில் அரசியல் ரீதியாக ஜொலிக்க முடியும் என்பது தமிழகத்தின் தலைவிதி!

இதை ஏற்படுத்தியதும் திராவிட இயக்கம தான். உலகிலேயே முதல் முறையாக வெகுஜன பொழுதுபோக்கு துறையை தளமாக எடுத்துக்கொண்டு அதன் மூலம் அரசியல் செய்த மற்றும் சாதாரண மக்களிடம் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான செய்திகளை எடுத்துச்சென்றது. திராவிட இயக்கமாகத்தான் இருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, கண்ணதாசன் ஆகிய ஜாம்பவான்கள் உட்பட பல திரைப்படத்துறை சார்ந்தோர் திரையிலகில் மட்டுமன்றி அரசியலிலும் புகழ் பெறுவதற்கு திராவிட இயக்கமே காரணமாக இருந்தது. இந்தத் திரைக் கவர்ச்சி, அந் நபரின் அரசியல் ரீதியான பலவீனங்களை வாக்காளர்கள் எடைபோடுவதைத் தவிர்க்கச் செய்தது.

எம்.ஜி.ஆருக்கு ஆரம்பத்தில் அரசியல் ஆர்வம் இருந்ததே தவிர, முதல்வராக வேண்டும் என்றெல்லாம் கனவிருக்கவில்லை. வை.கோவை ஓரம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் கலைஞருக்கு ஏற்பட்டதோ அதே நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆர் விஷயத்திலும் ஏற்பட்டது. தன் புகழையும் செல்வாக்கையும் அறிஞர் அண்ணா பயன்படுத்திக்கொண்டபோது அதை விருப்பத்துடன் ரசித்த எம்.ஜி.ஆர். அதையே கருணாநிதி முதல்வராக வீற்றிருந்தபடி செய்ய முற்பட்டபோது அதை அவர் ரசிக்கவில்லை. எனவே அவா வெளியேறி அ.தி.மு.வை உருவாக்க வேண்டியதாயிற்று. மக்கள் செல்வாக்கு கொண்ட இரு தலைவர்கள் ஒரே அணியில் இருக்க முடியாது என்பதால்தான் இந்தப் பிளவு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர். 1977 தேர்தலில் வெற்றியீட்டியதும், அவருக்கு தடுமாற்றமும் நடுக்கமும் ஏற்பட்டது. முதல்வர் பொறுப்பை ஏற்பதைத் தவிர்க்கவே அவர் விரும்பினார். பின்னர் முதல்வராக இருந்து கொண்டே படங்களில் நடிக்கலாமா என்றுகூட அன்றைய பிரதமர் தேசாயியிடம் கேட்டும் பார்த்தார். கருணாநிதிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்து இலக்கை எட்டியதும், அதே கருணாநிதியை சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராக வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்திச் செல்ல முடியுமா என்று அச்சப்பட்டவர்தான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் முதல் மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் அவர் ஒரு பயிலுனராகவே இருந்தார். அரசியலில் இருப்பது வேறு, மாநிலமொன்றை நிர்வாகம் செய்வது வேறு என்பதை உணர்ந்து, நிர்வாகம் செய்யவும் வேண்டும், மக்களுடன் இணைந்திருப்பவராகக் காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்ற தந்திரங்களை எல்லாம் அவர் இக்காலப் பகுதியில் இடறுவதும் பழகுவதுமாகவே கற்றுக்கொண்டார். நிர்வாகத்திறன் கொண்ட ஆர்.எம்.வீரப்பன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் துணையுடனேயே அவர் நிர்வாக பணிகளைக் கற்றுக் கொண்டார்.

இரு உச்சபட்ச நடிகர்கள் தனித்தனிக் கட்சி அமைத்து முதல்வராகும் கனவுடன் அரசியலுக்கு வரவிருக்கிறார்கள் என்பது நிச்சயமாகியுள்ள இந் நிலையில் ‘திராவிட அரசியலில் சினமா கலைஞர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மேற்கண்டவாறு ஒரு முன்னுரை எழுத வேண்டியதாகிவிட்டது.

இவ்விருவரில் கமலின் நிலைப்பாடு தெளிவானது.

அவர் தன்னை திராவிட சிந்தனையாளன் என்பதை நீண்ட காலமாகவே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். தான் பெரியாரின் சீடன் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். தான் பிறப்பால் பிராமணன் என்பதை அவர் ஏற்பதில்லை. எனவே, அவர் தமிழகத்துக்கு பழக்கமான திராவிட சிந்தனையாளன் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. சாதி, மத, இட ஒதுக்கீடு, வளப்பங்கீடு, சமூக சமத்துவம், தாழ்த்தப்பட்டவர்களுக்கன உரிமைகள் மற்றும் சலுகைகளில் தெளிவான கொள்கை, மாநில நலன்களுக்காக போராடும் குணம் என்பதை போன்ற தமிழகம் சார்ந்த விடயங்களிலும் எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருப்பார் என்பதும் தெளிவானது. பா.ஜ.க என்ற கட்சியோடு அவருக்கு உடன்பாடு இருக்காது என்றாலும் மத்தியில் ஆட்சி செய்யக் கூடிய எந்தவொரு கட்சியுடனும் இணக்கமான போக்கைக் கொண்டவராக இருப்பார் என்றே அவரது பேச்சுகளில் இருந்துதெரிகிறது. தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என்பனவற்றோடு எம்.ஜி.ஆரைப்போல் நல்லுறவை பேணும் சாமாத்தியம் அவரிடம் உள்ளது.

கமலஹாசனிடம் உள்ள மற்றொரு சிறப்பு, அவரது சிந்தனைத் திறன். அடிப்படையில் அவர் ஒரு தேர்ந்த சினமாக் கலைஞன், கதை, கவிதை, கதைவசனம், உரையாடல், கெமரா, இயக்கம, தொழில்நுட்ப அறிவு, நடனம் என அனைத்துத் துறைகளிலும் ஆழமான அறிவு கொண்டவர். பிரச்சினைகளை பகுத்தறியும் ஆற்றலை இது அவருக்குக் கொடுக்கும். கமல், ஜெயலலிதாவைப் போல நிறைய வாசிக்கக் கூடியவர். எந்த விஷயத்தையும் ஆழமான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடியவர். ஊழலை எதிர்ப்பதை பிரதானமாக முன் நிறுத்தியே அவர் தன் அரசியல் பிரவேசத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். ஆனால் தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் அரசியல் பேசியவர் அல்ல, இப்போது விஜய் செய்து வருவதைப் போல. அவர் திரைப்பட அரசியல் செய்யவில்லை என்பதில் இருந்தே, தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவரது எண்ணத்தை சமீபகாலமாக எழுந்த ஒரு சிந்தனையாகவே கருத வேண்டியிருக்கிறது.

இன்று தன் அரசியல் பிரவேசத்தையும், கட்சியின் பெயரையும் அறிவிக்கவிருக்கும் கமல், தான் பிறந்த ஊரான பரமகுடியில் பிரசாரத்தை ஆரம்பித்து, இராமநாதபுரம், தஞ்சை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். போகப் போகத்தான் தன் சுருக்குப் பையில் என்னென்ன அரசியல் மெஜிக்குகளை அவர் வைத்திருக்கிறார் என்பது தெரியவரும்.

கமல் ஒரு பெரும் பணக்காரர்அல்ல. பண விஷயத்தில் அவருக்கு அவர் நண்பர்களும் மூத்த மகள் ஸ்ருதியும் உதவக் கூடும், எனினும் தான் மக்களிடம் பணம் பெற்றே அரசியல் செய்வேன் என்று ஏற்கனவே கூறியிருப்பதை வரவேற்கவே வேண்டும். தி.மு.க ஆரம்பத்தில் நிதி திரட்டித்தான் தேர்தல்களை சந்தித்தது. ஒரு முறை கருணாநிதி தான் பத்து லட்ச ரூபா நிதி திரட்டித்தரப் போவதாக அண்ணாதுரையிடம் வாக்களித்து பின்னர் 11லட்சரூபாவைத் திரட்டித் தந்தார். செல்வந்தர்களிடம் நிதி திரட்டுவதைவிட மக்களிடம் நிதி திரட்டுவது ஊழலலுக்கு வித்திடாது. ஆனால் அன்றைய நிதி திரட்டல் முறை இன்றைக்கு வேலைக்காகுமா என்பது கேள்விக்குறியே.

கமலின் அரசியல் பிரவேசம் இப்படி இருக்க, வருட இறுதியில் மேடையில் தோன்றி பாபா முத்திரை காட்டி தன் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திய சுப்பர் ஸ்டார் தன் வழக்கப்படியே அடுத்த கட்டத்துக்கு போகாமல் மௌனம் காத்து வருகிறார்.

தன் பெயர் சூட்டப்படாத கட்சிக்கு (ரசிகர் சங்கத்துக்கு) உறுப்பினர்களாகவதற்கான ஒரு செயலியையும் அவர் ஆரம்பித்தார். உனடியாகவே உலகெங்குமுள்ள ரசிகர்கள் அச் செயலி வழியாக தம்மை உறுப்பினராக்கிக் கொண்டனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தம்மை இவ்வாறு பதிவு செய்திருப்பதாக ஆரம்ப தகவல்கள் தெரிவித்திருந்தன.

ஆனால் இவர்களில் எத்தனை பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் என்பதே கேள்வி. மக்களுக்கு இது ‘லைக்’ போடுவதைப் போன்ற ஒரு பொழுது போக்கு. கட்சியின் பெயர், சின்னம், கொடி, கொள்கை என எதுவுமே தெரியாமல் எவராவாது ரஜினியின் ‘பாபா கட்சி’யில் உண்மையாகவே இணைவார்களா?

ரஜினியின் இந்த முதல் அடி சறுக்கலாகவும், அரசியல் முதிர்ச்சியற்றதனமாகவுமே அமைந்தது. முதலில் தாமரையைக் காட்டினார். தாமரை பா.ஜ.க.வை குறிக்கும் என்றதும் அதை நீக்கி பாபா முத்திரை காட்டினார். பாபா முத்திரை காட்டி நடித்த அந்தப் படமே தோல்விப்படம் என்பது கவனிக்கத்தக்கது. இதே சமயம் கட்சி ஆரம்பிக்கப்பபோவதாக ரஜினியின் அறிவிப்பு வெளியானதுமே கமல் அதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதேபோல கமல் தன் கட்சியை அறிவிக்கப்போவதாக தகவல் தெரிவித்ததுமே அவருக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

எனவே, தனித்தனிக் கட்சிகளை ஆரம்பித்து தனிவழிச் சொல்லப்போகும் இவர்கள் நண்பர்களாக நீடிப்பது சாத்தியமா, அதுவும் தமிழகத்தின் எலி – பூனை அரசியலில் என்பது மிகப் பெரும் கேள்விக்குறி! இவ்விருவரின் இலக்கும் அடுத்த ஆறுமாதகாலத்துக்குள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் சட்ட மன்றத் தேர்தலே. சட்ட மன்றத் தேர்தலை இப்போது நடத்துவதா அல்லது காலம் முடியும் வரை நீடிக்க வைப்பதா என்பதை புது டில்லியே தீர்மானிக்க வேண்டும். எனினும் தினகரன் ஆதரவாளர்களான 17 உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வரவில்லை. மேலும் சட்டமன்றத்தில் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பன்னீரும் மேலும் பத்து உறுப்பினர்களும் கொறடாவின் உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்தால் அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களே என தி.மு.க ஒரு வழக்கைத் தொடுத்துள்ளது. இரண்டு வழக்குகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. எனவே இவ் வழக்குகளின் தீர்ப்பு அரசுக்கு எதிராக வருமானாலும், எடப்பாடி அரசு கலைவதற்கான வாய்ப்பு உள்ளது.

ரஜினி, ஆறுமாதத்தில் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவே சொல்கிறார். ஆனால் ரஜினி மன்றங்கள் – ரசிகர்கள் என்ற அளவுக்கு அப்பால்அவர் சொல்லவில்லை. அடுத்தது அவர் சொன்ன ஆன்மிக அரசியல்.

ரஜினியின் ஆரம்பகட்ட அரசியல் சார்ந்த நகர்வுகள் அனைத்துமே நகைப்புக்கும், விமர்சனங்களுக்கும் உட்பட்டதாகவும் முதிர்ச்சியற்றதுமாகவே அமைந்துள்ளது. அவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களையே அவரது ரசிகர்கள் நிராகரித்துள்ள நிலையில் இன்றைக்கும் பூடகமாக வைக்கப்பட்டிருக்கும் ‘பாபா’ அரசியல் மக்களால் ஏற்கப்படுமா என்பது பெரிய கேள்வி.

இருவருமே குறி வைப்பது தள்ளாடும் எடப்பாடி அரசாங்கத்தைத்தான்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, இவ் விருவரையும், எப்போது பதவியைக் கைப்பற்றலாம் என எண்ணிக் காத்துக் கிடக்கும் தி.மு.க, எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறது என்பதுதான். அ.தி.மு.கவை எளிதில் வீழ்த்தி ஆட்சிபீடமேறலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு இவ்விருவரும் தலைவலிகளாக வாய்த்திருக்கிறார்கள்.

இவர்களின் ஒருவர் ஆன்மிக அரசியல் செய்யப்புறப்பட்டிருக்கும் ரஜினி. இவருக்குப் பின்னால் பா.ஜ.க.வும் புதுடில்லியும் நின்று இயங்கப்போகின்றன என்பது வெளிப்படையானது. ரஜினிக்கு பா.ஜ.க ஆதரவு என்பது தி.மு.கவுக்கு சாதகமான அம்சம். ஆனால் பெரியாரியம் பேசும் கமல் திராவிட வாக்குகளை பிரிக்கலாம் என்ற பயம் தி.மு.க.விடம் உள்ளது.

சபாஷ் சரியான போட்டி என்று, கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே! 

அருள் சத்தியநாதன்...
 

Comments