ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “பார்லிமென்டில அடிச்சுக் கொண்டவையாம் அண்ண டி.வி.யில காட்டினவையென்டு பேசிக் கொண்டிருந்தவை. உண்மையே?"

“உண்மைதான் சின்னராசு. இவர் அவரை அடிக்க அவர் இவரையடிக்க என்டு ஒரே குழப்பமா போட்டுது. சினிமாவில கூட இத்தனை சுவாரசியம் இருக்காது போலக் கிடக்குது”.

“நல்ல முசுப்பாத்தியாயிருந்ததென்டு சொன்னவை. உது எப்படியன்ன ஆரம்பிச்சுது?”

“உதுவோ... போன 10 ஆம் திகதி இந்த வருசதுக்காக பார்லிமென்ட் முதல்முறையா கூடினது தெரியுமோ? உதில பிணைமுறி பிரச்சினை பற்றி பிரதமர் பேசிக் கொண்டிருந்தவராம். ஆனா பிணைமுறிபத்திய அறிக்கையை அன்டைய தினம் பார்லிமென்டில தாக்கல் செய்றமென்டு சொல்லியிருந்தினம். ஆனா செய்யேல்ல என்டதை கூட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த போதுதான் உந்த குழப்ப நிலை ஆரம்பிச்சிது. எங்களுக்கு பிணைமுறி அறிக்கையின்ட பிரதிதான் வேனும் அது பற்றிய பேச்சு தேவையில்லையெண்டு எதிர்க்கட்சியள் கூறிக் கொண்டு இருந்தவை.

பிரதமர் பிணைமுறி பத்தி பேச்சை ஆரம்பிச்சவுடன கூட்டு எதிர்க்கட்சியள் சபையின்ட நடுவுக்கு பதாகைகளை ஏந்திக்கொண்டு வந்து கோபோட்டவை. யூ.என்.பி எம்.பீ மாரும் சபையிண்ட நடுவுக்கு வந்து போட்டவை. யார் அந்தக் கள்ளன் என்டு கூட்டு எதிர்க்கட்சியள் கோஷம் எழுப்பியிருக்கினம. அவையளின்ட சிலர் ரணில் கள்ளன் என்டு கோஷம் போட்டிருக்கினம். உதுக்கு யூ.என்.பி எம்.பீக்கள் மஹிந்த கள்ளன் என்டு எதிர்கோஷம் போட்டவை.

ஏதோ பெரிசா நடக்கப்போகுது என்டதை அனுமானிச்ச சபாநாயகர் சபையை 20 நிமிஷம் ஒத்திவைச்சவர். ஆனா எம்.பி மார் உள்ளேயே கஷம் போட்டுக் கொண்டேயே இருந்திருக்கினம். கூட்டு எதிர்க்கட்சி எம்.பி க்களோட கையில இருந்த போஸ்டர்களைப் பறிக்க யூ. என்.பி. எம்.பி மார் எத்தனிச்சிருக்கினம். இந்த நேரத்திலதான் யூ.என்.பி எம்.பி மரிக்கார் இடையில பூந்து காமினி லொக்குகேயுக்கு அடிச்சவர். அவரும் திருப்பி அடிச்சவர். கூட்டு எதிர்க்கட்சியினரின்ட பதாகைகளை பறிச்செடுக்க . கவிந்த ஜயவர்த்தன முனைஞ்சவர் கீழே விழுந்து போட்டார். அவரைத் தூக்க மரிக்காரும் அமைச்சர் ஹர்த சில்வாவும் வந்தவை.

சமிந்த சில்வா மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரை ஜொன்ஸ்டன் பெர்ணாந்து அடிச்சுப் போட்டு ஓடினவர். எம்.பி மார் ஒருவரை ஒருவர் அடிச்சுக் கொண்டு தூசனமும் பேசினவை. பிரசன்ன ரணதுங்க, சமிந்த விஜேசிறியை கையால குத்திவிட்டு ஓடினவர். அவரைத் துரத்திக் கொண்டு இவர் ஓடுனார். ரஞ்சன் ராமநாயக்க நடிகரல்லே யாரையும் அடிக்கவும் இல்லை ஓடவும் இல்லை. நடந்த காட்சிகளை தனது செல்போனில அவர் படம் புடிச்சவர். காமினி லொக்குகே மரிக்கார் ரென்டு பேரும் திரும்பவும் அடிச்சிக் கொண்டவை”.

‘நல்லகூத்து நடந்திருக்கினென்ன?’

“பெண் எம்.பி ரோஹினி விஜேரத்னவை. பெண் என்டும் பாக்காம அடிச்சி உதைச்சிருக்கினம்”

“பொம்பள எம் பி என்டும் பாக்கேல்;ல மிருகம் மாதிரி நடந்திருக்கினம்”

“ஒரு நாளைக்கு பார்லிமென்ட கூட்ட 50 லட்ச ரூபா செலவாகுது தெரியுமோ?”

“உந்த குத்தாட்டத்திற்கு என்டு சொல்லுங்கோவன்”

“பார்லிமென்டில அடிச்சிப்புடிச்சிக் கொள்ளுறது உது முதல் தடவையில்ல சின்னராசு”

“அப்ப உந்த சண்டித்தனம் முன்னரும் நடந்திருக்குதென்ன?”

“எங்கட தினேஷ் குணவர்த்தன எம்.பியின்ட அப்பா பிலிப் குணவர்த்தன ஒருமுறை சேர் ஜோன் கொத்தலாவலவுக்கு பார்லிமென்ட் விறாந்தையில வச்சி அறைஞ்சி போட்டவராம். உதுதான் ஒரு எம்.பி இன்னொரு எம்.பிக்கு அடிச்ச முதல் சம்பவம் என்டு சொல்லப்படுகுது. 1956 ல் கொழும்பு மத்திய தொகுதியின்ட மூன்றாவது எம்.பி எம். எஸ். தேமிஸ் சேர். ஜோன் கொத்தலாவலய ஹலோ ஜோன் என்டு கூப்பிட்டவராம். அவரை எல்லோரும் சேர். ஜோன் என்டுதான் கூப்பிடுவினம். வெறுவமே ஜோன் என்டதால அவருக்கு கோபம் தலைக்கேறி போட்டுதாம் தேமிஸை அறையும் குத்தும் என்டு நல்லா வாங்கிப் போட்டவராம் சேர். ஜோன்.”

“உண்மைதானண்ண பெயருக்கு இருக்கிற கௌரவத்தை குடுக்கலையன்டா தவறுதானென்ன?”

“1960 களின்ட பிற்காலத்தில வலபன எம்.பி டி. எம். ஹேரத்துக்கும் சமூக சேவைகள் அமைச்சரான அசோக கருணாரத்னவுக்குமிடையில சபையில வாய்த்தர்க்கம் நடந்து போட்டுதாம். வெளியால காத்திருந்த அமைச்சர் உருவத்தில சின்ன ஆளா இருந்த ஹேரத்தை விரட்டி விரட்டி அடிச்சி துவைச்சவராம். 1974 ல் சுகாதார அமைச்சர் டபிள்யூ. பி. ஜி. ஆரியதாச கைத்தொழில் அமைச்சர் கே. சூரியஆரச்சிக்கு அடிச்சிப்போட்டவர். அரசாங்கத்தில இரு அமைச்சர்களுக்கிடையில முதன்முறையா நடந்த அடிதடி உதுதான். 1992 வாசுதேவ நாணயக்காரவும் காமினி லொக்குகேயும் செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடினவை. மத்தவை அவையள அடிச்சிப் போட்டினம். உந்த சம்பவத்தில அடிபட்டவை பார்லிமென்டில இன்னும் இருக்கினம். பின்னால மேவின் சில்வா உள்ளிட்ட கூட்டம் கொலன்னாவை சுமங்கல தேரரின்ட பால் உறுப்பை நசுக்கியும் குரல்வளையை நசுக்கியும் போட்டினம். பார்லிமென்டில இடம்பெற்ற பாரதூரமான தாக்குதல் உதுதான். 2016 ல் கேகாலை மாவட்ட எம்.பி சந்தீப் சமரசிங்கவுக்கு கம்பஹா எம்.பி பிரசன்ன ரணவீர இரத்தம்வர அடிச்சவர். இரு எம்.பிமார்களின்ட சண்டையில இரத்தம் வாற அளவுக்கு அடிவிழுந்த முதல்முறை உது. அடுத்தது கடந்த வாரத்தில நடந்த அடிதடி. பார்லிமென்டில நடந்த கூத்தை எங்களவிட நல்லா வேடுவத் தலைவர் சொல்லியிருக்கிறார்.

“ஓம் சின்னராசு எங்கட வேடுவத் தலைவர் வன்னிலோ அத்தோ தான”

“செத்த கபரகொயாவின்ட உடலை கொத்தித் தின்ன காக்கையள் எப்பிடி கூட்டமா கூடுமோ அதுபோலதான் எம் பிமார் பார்லிமென்டில நடந்துகொண்டவை. உதை எப்பிடியும் நியாயப்படுத்த இயலாது. பல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் என்னைப் பார்க்க வருகினம் அவையிட்ட இருந்து எனக்கு முழுத்தகவலும் கிடைச்சிட்டுது. முன்பள்ளி சிறுவர்கள் கூட அவையின்ட ஆசிரியை மாரிட்ட கீழப்படிஞ்சி சொல்லுறதை கேட்பினம் ஆனா உந்த எம்.பி மார் ரொம்ப மோசமா நடந்து கொண்டிருக்கினம். உதுக்கு நான் என்ன செய்யப்பபோறனான் என்டு தெரியுமோ?”

“நீங்களோ என்ன செய்யப் போறியள்?”

“நானில்ல சின்னராசு எங்கட வேடுவத் தலைவர்”

“ஓ அவரோ என்ன செய்யப்போறவர?”

“எங்கட வேடர்களைப் பத்தி அவையளின்ட பிரச்சினைகளைப் பத்தி பார்லிமென்டில பேச ஆளில்லை கண்டியோ உதால வேடுவ மக்களின்ட பிரதிநிதியொருவரை பார்லிமென்டுக்கு அனுப்ப யோசிச்சிருக்கிறனான் என்டு சொல்லியிருக்கிறவரப்பா”

“உது நல்லதென்ன இனி பார்லிமென்டில அடிச்சிப்புடிச்சிக் கொண்டிருந்தவையன்டா கோடரிதான் பறந்துவிடும் என்ன ஒரு சந்தேகமண்ண?”

“இப்ப என்ன சந்தேகம் உனக்கு?”

“வேடர்கள் எங்க போனாலும் அவையின்ட கோடரிய கழுத்தில மாட்டிக்கொண்டுதானே போவினம் சட்டத்தில உதுக்கு இடம் இருக்குதென்ன”

“பின்ன அவையின்ட உரிமையல்ல அது”.

“அரசியலைப்பற்றி அமெரிக்காவின்ட முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் ஒரு முசுப்பாத்தி கதையொன்டை சொன்னவர”;

“அது என்ன முசுப்பாத்தி கதையண்ண?”

“அரசியல் என்டது இரண்டாவது பழைமையான தொழில் என்டு கூறப்படுகுது. ஆனால் உலகின்ட மிக பழமையான தொழிலுக்கும் உதுக்கும் சம்பந்தம் இருக்குதென்டுதான் கருத்து சொல்லியிருக்கிறவர். அது உண்மை போலத்தான் கிடக்கு”

“அடடே அந்த தொழிலோ அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கண்ண இரண்டுமே சேவைத் தொழிலென்ன”

“சரியா சொன்னனீ சின்னராசு”

Comments