கனிமம் | தினகரன் வாரமஞ்சரி

கனிமம்

 மார்கழி மாதத்து மழை விடாது பெய்துகொண்டு இருந்தது கடற்காற்றும் சற்று கடுமையாக இருந்தது. நடுச்சாம நேரம். மாணிக்கம் தன் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். அவன் இரவு முழுதும் நித்திரை கொள்ளவில்லை. அன்று பகல் நடந்த சம்பவங்களும், பின்னேரம் அவன் கலந்துகொண்ட ஒரு கூட்டமும், அங்கு அவன் கேட்ட பேச்சுக்களும் அவனை இரவு முழுதும் தூக்கமில்லாமல் அவன் மனதில் எண்ணங்களை காட்சியாக ஓடவிட்டது.

திருக்கோவில் பிரதேச மத்திய சந்தைக்கு நேற்று காலையில் சென்று, அவன் கோரைக்களப்பு ஆற்றில் தட்டுப்போட்டு பிடித்து வைத்திருந்த நண்டுகள், மற்றும் வலைவீசி பிடித்திருந்த மீன், இறால் இவற்றை கொண்டு வியாபாரிக்கு கொடுத்துவிட்டு சந்தையில் சாமான்களும் வாங்கிகொண்டு வீடு திரும்புகையில் திருக்கோவில் முருகன் கோவில் முன்றலில் ஒரு கூட்டம் இருக்கிறது.

நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று சில இளைஞர்கள் சந்தியில் நின்று மக்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் மக்கள் அதை சட்டை செய்யவில்லை. இது மக்களின் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுத்தும் செயலுக்கு எதிரான ஒரு கூட்டம் கண்டிப்பாக வாருங்கள் என்று அவர்கள் சொல்லியும் மக்கள் கவனம் எடுக்காது போய்க்கொண்டே இருந்தார்கள். மாணிக்கம் மனசுக்குள் இது என்னவாக இருக்கும் என்ற எண்ணம் தோன்ற அந்த இளைஞர்களை அணுகி கேட்டன். "என்ன தம்பி கூட்டம் என்னத்தை பற்றிய கூட்டம்"" அண்ணே இது ஒரு முக்கியமான கூட்டம். நமது பிரதேசத்தில் இல்மனைட் மண்ணை அகழ்ந்தெடுத்து பாரிய அழிவை நமது கடல் பிராந்தியத்தில் ஏற்படுத்த ஒரு வெளிநாட்டு கம்பனி இங்கு வந்திருக்கிறது. அதற்கு ஆதரவாக இங்கு பலர் செயல்படுகின்றார்கள்.

இவர்களை விரட்டி அடிக்க பாரிய ஒரு போராட்டம் செய்ய வேண்டும் அதற்கு என்ன ஒழுங்குகள் செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு சொல்லும் கூட்டம் அண்ணே."

"அது என்ன தம்பி இல்மனைட் மண் அது எங்கு இருக்கிறது " கேட்டான் மாணிக்கம்.

அது நமது கடற்கரையில் இருக்கிறது நீல நிறமாக மினுங்கிக் கொண்டு இருக்குமே பாத்திருக்கிறீர்களா"அட ஆமா நான் விநாயகபுரக் கடற்கரையில் காலையில் கடலில் இருந்து வரும் தோணிகளை கரையில் இழுத்து மேலே ஏற்றும்போது என் காலில் ஒவ்வொருநாளும் அந்த மண் படுகுதுதானே'" ஆ... அந்த மண்தான் அண்ணே இல்மனைட் மண் தமிழில் அதை கனிம மணல் என்று சொல்வார்கள் "அதை ஏன் தம்பி எடுக்கப் போகிறானுகள் நம்மட கடற்கரைக்கு அது வடிவைக் கொடுக்கிற மண் அல்லவா அது. "அண்ணே இது பற்றிய கூட்டம் தான் அது நமது நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கு வருகிறார்.

நீங்கள் நேரே இப்படியே கோவிலடிக்கு செல்லுங்கள்" என்று இளைஞர்களில் ஒருவர் சொல்ல மாணிக்கம் கோவிலடிக்கு சென்றான்.

திருக்கோவில் முருகன் கோவிலடியில் ஆண்களும், பெண்களுமாக பலர் அமர்ந்து இருந்தார்கள். மாணிக்கம் மடிச்சி கட்டிய விசாரணை கீழே இறக்கிவிட்டு பவ்வியமாக ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அவன் வலது பக்கத்தில் அவனுக்கு தெரிந்த நண்பன் வன்னியசிங்கம் அமர்ந்திருந்தான். மாணிக்கத்தை கண்டதும் பேச தொடங்கினான். "என்ன மாணிக்கம் விநாயக புரத்திலிருந்து வாறியா.? நல்லதுடாப்பா நீ வந்தது. இங்க பார்த்தியே ஆக்கள் அவ்வளவா வரயில்ல. "வன்னி, நான் சந்தைக்கு வந்தனான் "என்ன நண்டு மீன் ஏதும் கொண்டு வந்த நீயோ "நேத்து ராவு நண்டு தட்டுபோட்ட நான், அதுல கொஞ்சம் நண்டுகள் அம்புட்டிச்சி வலை வீசியதில் கொஞ்சம் செல்வன் மீன் குஞ்சுகள். அவற்றைக் கொண்டு வந்து வியாபாரி சுந்தரத்திடம் குடுத்துப்போட்டு வீட்ட போவம் எண்டு வரும்போது தான் முச்சந்தியடியில ரெண்டுமூணு பொடியனுகள் நிண்டு கோவிலடியில ஒரு கூட்டம்நடக்க போகுது நீங்க கண்டிப்பா போகவேணும் எண்டு போறவாற ஆக்களிட்ட சொல்லிக்கொண்டு இருந்தானுகள். ஆனா ஆக்கள் அதை சட்டை செய்யவும் இல்ல. நான்தான் கிட்டபோய் என்னடா தம்பி விசயம். என்ன கூட்டம் என்று கேட்டன். அண்ணே முக்கியமான கூட்டம் கோவிலடிக்கு போங்கோ என்றானுகள். நான் திரும்பவும் கேட்டேன். அப்பத்தான் சொன்னனுகள் நம்மட கடற்கரை மண்ணை, அதுவும் அந்த மினுமினுப்பா இருக்கிற நீல நிற மண்ணை யாரோ ஒரு கொம்பனிக்காரன் தோண்டி எடுத்துக்கொண்டு போகப்போறானாம் என்றாங்க. அதுதான் என்ன எவடம் எண்டு பார்ப்பம் எண்டு வந்தன்""நீ கேட்டது சரிதான் மாணிக்கம். நானும் இங்க பலரிட்டையும் கேட்டுத்தான் அறிஞ்சன். அதோபார் நிக்கிறார் சிவத்த சேட்டு போட்டு.. நம்மட சின்னதம்பி போடியாரின் மகன். அவருதான் இந்த கூட்டத்தைகூட்டி மக்களுக்கு இதை புரிய வைக்க பாடுபடுறார். ஆனா இங்க கூட்டம் வந்து சேருதில்ல. எம்பியும்வரப்போறார் எண்டு சொல்லுறாக. பலபேரிட்ட சொல்லியும் சனங்கள் நிறைய வரயில்ல. இது எவ்வளவு பெரிய விசயம். ஊரில உள்ள மக்கள் திரண்டு வந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சால்த்தானே அந்த களவாணிக் கூட்டத்தை துரத்தலாம்" என்று வன்னியசிங்கம் சொல்லி முடித்தான் "அதுசரி வன்னி ஆரு இந்த மண் கொள்ளைக்காரனுகள். எப்படி இவனுகள் நம்மட ஊருக்குள் வந்தானுகள்" "மாணிக்கம் நம்மட ஊருகள் இப்போ கள்ளனுகளையும், கசபோக்கிலிகளையும், பந்தம் வாங்குகிற உத்தியோகத்தர்களையும் கொண்டிருக்கிற ஊர்களாகத்தான் பார்க்க முடியுது. ஊருக்கு நல்லவனாக நடிச்சிக்கொண்டு, பாக்கிறது முழுதும் அயோக்கியத் தனமான வேலைகள். இவனுகளில் ஒண்டுரெண்டு பேர்கள்தான் இந்த மண்ணை கொண்டு போக வந்த கொம்பனிக்காரனுகளுக்கு தங்க இடமும் கொடுத்து அவனுகளுக்கு சப்போட்டா வேலைகளும் செய்யிறானுகளாம். வீடுவீடாக கொம்பனிக்காரனுகளுடன் போயி, உங்களுக்கு வேலைதாறோம், காசுதாறோம் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி மக்களை தங்கட பக்கம் திருப்ப பாக்கிரானுகளாம். இந்த கூட்டத்தை அடித்து விரட்ட தான் இந்த கூட்டம் கண்டியோ ""நீ சொல்லுறதை பார்த்தா இதில் பல தில்லு முல்லுகள் இருக்கும்போல இருக்கு. அந்த மண் என்னவோ பேர் சொன்னாங்க அந்த பொடியனுகள் மறந்திட்டன்."

" அது இல்மனைட் மண் மாணிக்கம்"ஆ... அதுதான் அந்த மண்ணை இவனுகள் ஏன் கொண்டுபோகப்போறானுகள்?" மாணிக்கம் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஆம் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வந்துகொண்டு இருந்தார்.அவரை கூட்டம் ஒழுங்கு செய்தவர்கள் சென்று கூட்டிக்கொண்டு வந்தார்கள். வந்ததும் எம்பி யை வரவேற்று உடனேயே பேச சொன்னார்கள். அவரும் எழுந்து வந்து மக்கள் முன்னால் நின்று பேசினார்.

"எல்லோருக்கும் வணக்கம். இந்த இல்மனைட் மண் அகழ்ந்து எடுக்கும் நடவடிக்கையை எதிர்க்குமுகமாக இங்கு கூடி இருக்கிறீர்கள். ஆனால் திருக்கோவில் பிரதேசத்தில் எத்தனை ஊர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலிருந்தும் நூறு பேர் வந்தாலும் பெரிய கூட்டம் வந்திருக்குமே. இந்த மண் அகழ்வு என்பது நமது பிரதேசத்துக்கு பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் திட்டம் கோமாரி தொடக்கம் அக்கரைப்பற்று வரையும் உள்ள கடற்கரையில் உள்ள இல்மனைட் மண்ணை அகழ்ந்தெடுப்பது. இது சம்பந்தமாக நான் பாராளுமன்றத்திலே காரசாரமாக பேசி இருக்கின்றேன். அமைச்சர். ஜனாதிபதி ஆகியோருடனும் இதுபற்றி கதைத்து இதை தடுத்து நிறுத்தும்படி சொல்லி உள்ளேன். இதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் நான் பேசிய பேச்சு இருக்கிறது நீங்கள் பார்க்கலாம். சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினார்கள். இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.அதற்கு மக்களின் எதிர்ப்பு அவசியம். இப்படி குறைவான மக்கள் வந்து என்ன சாதிக்க முடியும்? எந்த ஒரு எதிர்ப்பு போராட்டமும் . ஆயிரக்கணக்கில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால்தான் வெற்றி அடையும். இனி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும்.பாடசாலை பத்தாம் வகுப்பு மாணவர்களின் பரீட்சை காலம் இது.அவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் பேரணியாக திரண்டு கோஷங்கள் போடாமல் நடத்தவேண்டும். பொது ஊடகங்கள் அதை பதிவு செய்து அரசின் பார்வைக்கு கொடுக்க வேண்டும்.நானும் இந்த ஊர் பிறந்தவன்தான்.எனக்கு முழு பொறுப்பு இருக்கிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு. அதுதான்நான் பல விடயங்கள் பற்றி பேசிவருகிறேன். இந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் துறைமுகம் ஒன்று உருவாவதற்கு எடுத்த நடவடிக்கைதான் எமது பிரதேச கடற்கரை கடலரிப்புக்கு உள்ளாகி இன்று கடல் நமது ஊருக்குள் வந்துவிடும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதுபற்றியும் நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். ஆனால் இதுவரை ஒரு பலனும் இல்லை கடலரிப்பால் பாதிக்கப்பட்ட நமது கடற்கரை இப்போது இவர்கள் மண்ணை அகழ்ந்து எடுத்துக்கொண்டு சென்றால் நமது ஊர்களே சூனியமாகி காணாமல் போய்விடும்.முன்பு இப்படி இல்மனைட் மண் அகழ்ந்து எடுத்த ஊர்கள் இதற்கு சான்றாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றன. ஆகவே இதை முற்று முழுதாக எதிர்க்கவேண்டும் இது ஒரு மக்கள் போராட்டமாகஇருக்க வேண்டும். அதற்கு பெருமளவில் மக்கள் திரள வேண்டும்.

இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு நன்றி. அதில் என்னை அழைத்து உங்களுக்கு சில விசயங்களை சொல்ல சந்தர்ப்பம்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. தொடர்ந்து போராடுவோம். உள்ளூரில் இருக்கும் திருடர்களை இனம் கண்டு மக்கள்முன் நிறுத்துங்கள் அவர்கள் பூசிக்கொண்ட சாயம் வெளுக்க வழி பண்ணுங்கள் போராடுவோம் வெற்றி நிச்சயம். வணக்கம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு விடைபெற்று சென்றபின்னர், இன்னும் ஒருசிலர் அங்கு பேசினார்கள். இவர்கள் பேசிய பேசுக்கள் மக்களுக்கு ஒரு வேகத்தை கொடுத்திருக்கிறது. போராட்ட குணத்தை விதைத்திருக்கிறது. ஒவ்வொருவரும் அடுத்து இடம்பெற இருக்கும் எதிர்ப்பு போராட்டத்திற்கு பலபேரை திரட்டிக்கொண்டு வரவேண்டும் என்ற உணர்வு பிறந்திருக்கிறது. கூட்டத்தை ஒழுங்கு படுத்திய சின்னதம்பி போடியாரின் மகனும் இதை வலியுறுத்தினார். இந்த மண் அகழ்வினால் ஏற்படப்போகும் அபாயம் தெரியாமல் பலர் இதற்கு துணை போகின்றார்கள் அவர்கள் உணர்ந்து கொண்டு எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் ஒருவருக்கும் எதிரிகள் கிடையாது, எல்லோரும் நாம் சகோதர மனப்பான்மையுடன் இருப்போம். ஊர்களை பிரித்தாளும் நடவடிக்கையை முற்றாக நிறுத்த வேண்டும். எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் எதிர்வரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்.உங்கள் ஊர்களில் உள்ள மக்களுக்கு, வீடு வீடாக சென்று சொல்லுங்கள். செய்வீர்களா? என்று கூட்டத்தை பார்த்து கேட்டார் போடியாரின் மகன்.

உடனே கூட்டத்தில் இருந்த எல்லோரும் ஆவேசத்துடன் எழுந்து நின்று செய்வோம் செய்வோம் என்று உரத்து சொன்னார்கள். வன்னியசிங்கமும், மாணிக்கமும் சேர்ந்து சொன்னார்கள்."செய்யிறோம் செய்யிறோம்" என்று மாணிக்கம் தூக்கத்தில் கத்தினான். பக்கத்தில் படுத்துதிருந்த அவனின் மனைவி பாக்கியம் "என்னங்க என்னங்க, என்ன கனவுகினவு கண்டு கத்துறீங்களா மழையும் விட்டபாடில்லை ஒரே பொடுபொடு என்று தூறிக்கொண்டே இருக்கு.""பாக்கியம் என்ன எழும்பிட்டியா என்ன பேசிக்கொண்டு இருக்கிறாய்" நானெங்க எழும்பினது நீங்கதான் நித்திரைக்கண்ணில் செய்றோம் செய்றோம் எண்டு கத்தி என்னை எழுப்பி விட்டீங்க. "ஓ அப்பிடியா கத்தினேன். சரிதான் பின்ன. நேற்று திருக்கோவில் முருகன் கோவில் கூட்டதில எல்லோரும் சேர்ந்து கத்தினோம் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டு படுத்தேன்.

அது எவ்வளவு முக்கியமான விசயம் ""என்னங்க அது முக்கிய விசயம்" பாக்கியம் கேட்டாள். "சொல்லுறன் நீ எழும்பி தேத்தண்ணி போடு, எனக்கு இண்டைக்கு நிறைய வேலை இருக்கு. என்ற மாணிக்கம் படுக்கையை விட்டு எழுந்துகொண்டான், அவன் சொன்னதுபோல் அவனுக்கு இன்று பல வீடுகளுக்கு சென்று இந்த கனிய மணல் அகழ்வு பற்றி சொல்லி அடுத்த போராட்டத்திற்கு மக்களை ஒன்று சேர்க்கின்ற வேலை இருக்கிறது. மாணிக்கத்தைபோல் பலரும் இதில் இணைந்து மக்களை திரட்டவேண்டும் திரட்டுவீர்களா? திரட்டுவீர்களா? மக்களின் பதிலுக்காக காத்திருப்போம்.

கோவிலூர் செல்வராஜன்

Comments