அபிவிருத்திக்கான நிதியை ஏப்பமிடுபவர்களை அடையாளம் காணத்தவறும் வாக்காளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

அபிவிருத்திக்கான நிதியை ஏப்பமிடுபவர்களை அடையாளம் காணத்தவறும் வாக்காளர்கள்

அரசியலின் நுழைவாயிலாக கருதப்படும் பிரதேச சபைத் தேர்தல் மீண்டும் மலையக சமூகத்தை ஏமாளியாகவே நிற்க வைத்துவிடும். தம்மால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களே ஒப்பந்தக்காரர்களாக அவதாரம் கொண்டு அபிவிருத்தி நிதிகளை அள்ளி விழுங்கும் அவலம் நீக்கப்படுவது அவசியமாகும்.

200 வருடகால வரலாற்றுப் பதிவுகளின் சொந்தக்காரர்களாக பெருந்தோட்ட மக்கள் விளங்குகிறார்கள். எனினும் அதற்கேற்புடையதும் சமகால நாகரிக வளர்ச்சிக்கு ஏற்றதுமான மானுட இயல்புக்குரிய மாற்றம் இம்மக்களின் வாழ்வில் இன்னும் வந்தபாடில்லை. வாக்குரிமை, நாட்டுரிமை இருக்கிறது. பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் இருக்கின்றது. ஏன், ஜனாதிபதி தெரிவில் கூட செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆளணி செறிவும் காணப்படுகின்றது. ஆனால் அதன் பிரதிகூலங்கள் எதுவுமே முறையாக மலையகத்துப் பக்கம் எட்டிப்பார்ப்பது கிடையாது. வாழ்விட உறுதி, நில உரித்து, கல்வியில் சம வாய்ப்பு, பொருளாதார தேடலுக்கான நவீனத்துவ மாற்று வழிகள், சுகாதார மேம்பாடு போன்ற சகல அடிப்படை அம்சங்களிலும் பாரிய பின்னடைவு நிலவுகிறது. இத்தனைக்கும் இடையில் காலத்துக்குக்காலம் 'மலையக அபிவிருத்தி' என்ற சொல்லின் கீழ் திட்டங்கள் தீட்டப்பட்டே வந்துள்ளன.

அவ்வப்போது நிதியொதுக்கீடு களும் நடைபெறவே செய்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மலையக அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவவே செய்கின்றது. சில சந்தர்ப்பங்களில் குறித்த பணிக்கென ஒதுக்கப்பட்ட நிதி உரிய காலத்தில் உரிய காரியத்துக்காக செலவிடப்படமால் திறைசேரிக்கே திருப்பப்பட்ட அவலங்களும் நிகழ்ந்தேறி உள்ளன. இதே நேரம் இவ்வாறான நிதி கையாள்கையில் மோசடிகள் இடம் பெற்றுள்ளமையும் அம்பலத்துக்கு வரவே செய்துள்ளது. குறிப்பாக பிரதேச சபைகளுக்கு பிரதிநிதிகள் சார்பில் ஒதுக்கப்படும் நிதியானது குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழேயே செலவிடப்படுகின்றன. இதன் மூலம் பாதைகள் சீர்செய்தல், குடியிருப்புகள், நீர் வழங்கல், மின்சார இணைப்பு போன்ற வேலைத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ் வேலைகளை செய்து முடிக்கும் பொறுப்பு ஒப்பந்தக் காரர்கள் வசம் கையளிக்கப்படுகின்றது. இவ்வாறான ஒப்பந்தக்காரர்கள் அரச அங்கீகாரம் பெற்றவர்களாகவே இருப்பர். இவர்களை நியமிக்கும் வாய்ப்பினை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பெறுகின்றார்கள். இதில் ஊழல்களும் முறைகேடுகளும் தலைவிரித்தாடுகின்றன.

இவ்வாறான ஒப்பந்தங்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் பிரதிநிதிகளின் பினாமிகளுக்கே தாரை வார்க்கப்படுகின்றன. அப்படியும் வேலை நியாயமாக நடைபெறுமாயின் இது தவறல்ல.

ஆனால் தமக்கும் இலாபம் தம்மை நம்பி பெறுப்பை ஒப்படைத்த பிரதிநிதிகளுக்கும் இலாபம் என்ற குறிக்கோளோடு காரியமாற்றுவோர் குறித்த பணியினை முறையாக செய்து முடிப்பதில்லை என்று அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றார்கள். இங்கு கையூட்டுகள் தாராளமாக இடம் பெறுவதால் ஊழல்கள் மூடிமறைக்கப்படுகின்றன. இதனால் குறித்த பணியின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகின்றது.

மக்கள் பணம் வீணடிக்கப்படும் அதேநேரம் குறித்த அபிவிருத்திப்பணியால் மக்கள் பூரண பலனை அனுபவிக்க முடியாமற் போகின்றது. பெருந்தோட்டப் பகுதிகளில் அடிக்கல் நாட்டப்பட்ட பல திட்டங்கள் நடைமுறைக்கு வராமல் போயுள்ளதை நாம் காணலாம். ஆரவாரமாக பூஜை புனஸ்காரங்களுடன் அடிக்கல் நாட்டப்படுவதும் பின் அது கண்டு கொள்ளப்படாமலே கைவிடப்படுவதும் மலையகத்தில் பழகிப்போன சங்கதியாகியுள்ளது. விசாரித்துப் பார்த்தால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு வேலைக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவரும். சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து எந்தவித தகவலும் பெறமுடியாமல் போகும். சில அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இவ்வாறான நிதி கையாடப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

உண்மையில் அடிக்கல் நாட்டப்படுவது குறிப்பிட்ட திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு நிச்சயமான பின்னரேதான். அவ்வாறாயின் அந்நிதி செலவிடப்படாத நிலையில் ஒன்று முறையற்ற விதத்தில் அது கையாளப்பட்டிருக்க வேண்டும். அல்லது பயன்படுத்தப்படாமல் திறைசேரிக்கு திருப்பப்பட்டிருக்க வேண்டும். இதில் எது நடந்தாலும் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே இருக்கும். அநேகமாக பிரதேச சபை மாகணசபை உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்படும் நிதியினை கோயில்களுக்கு ஒதுக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். இந்நிதி சிலைகளாக, கூரைத் தகடுகளாக, சீமெந்து பக்கெட்டுகளாக, கட்டடப் பொருட்களாக மாற்றம் பெறும்.

இதிலும் கூட மோசடிகள் இடம் பெறுவதுண்டாம். அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதி மூலம் கோயில்களுக்கு சிலைகள் விநியோகமும் இடம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சிலைகள் அதிக விலையில் இந்தியாவிலிருந்தே தருவிக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அதன் நம்பகத் தன்மை குறித்து அவதானிகள் ஐயம் எழுப்பவே செய்கின்றார்கள். பிரதேச சபைகளும், மாகாண சபைகளும் முதலீடு செய்யப்படாமலே ஆதாயம் தரும் வர்தக நிலையங்களாக மாற்றப்படும் குறுகிய நோக்கம் இங்கு அரசோச்சுகின்றது. இன்று பிரதேசபைகளில் கூட அங்கத்துவம் பெற இலட்சக் கணக்கில் பணம் செலவிடத் தயாராக இருக்கும் சிலரின் பிரயத்தனங்கள் இதனை உறுதி செய்கின்றன. எப்படியும் தான் செலவழித்த பணத்தை அபிவிருத்திப் பணி ஒப்பந்தங்கள் மூலம் திரும்பவும் பெற்றுவிட முடியும் என இவர்கள் நம்புகிறார்கள்.

இவ்வாறான காரணங்களால் மக்களுக்கு உற்சாகமாக தேர்தல்களில் ஈடுபட முடிவதில்லை. ஏனெனில் தேர்லில் போட்டியிடுவதற்கு முன்பு சாதாரண நிலையிலும் போட்டியிட்டு வென்ற பின்பு இந்த உறுப்பினர்களின் நிலை அபிவிருத்தியடைவதைப் பார்த்து அவர்கள் மனம் வெதும்பிப் போகிறார்கள். அரசாங்க மட்டத்தில் எத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட அதை நடை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்களிடமே வந்த சேர்கின்றது. குறிப்பாக அமைச்சர்களுக்கூடாக ஒதுக்கப்படும் நிதியை அவர்கள் இந்த கட்சி உறுப்பினர்கள் பொறுப்பிலேயே விடுகிறார்கள்.

ஆனால் சிங்கள சமூகத்தின் மத்தியில் சமூக உணர்வு இருப்பதால் அபிவிருத்திப் பணிகள் ஒழுங்காக நடைபெறவே செய்கின்றன. அப்படியே மோசடிகள் இடம் பெற்றாலும் அவர்களை மக்கள் சும்மா விட்டு வைக்கவும் மாட்டார்கள். அதனால் அவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றார்கள். அவ்வாறான விழிப்புணர்வு இன்னும் இங்கே வரவில்லை.

நகர அபிவிருத்திப் பணிகளில் வளங்கள் சூறையாட வழிவகுத்தவர்கள், தனிப்பட்ட நபர்களுக்கு சட்ட விரோதமான கட்டிடங்களை அமைக்க உதவியவர்கள், அபிவிருத்திக்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள், உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரித்தான காணியை தமது தேவைகளுக்காகவோ அல்லது தமக்கு வேண்டியவர்களின் தேவைகளுக்காவோ தாரை வார்த்தவர்கள் பற்றி ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. சுய நலத்துக்காகவும் குரோதத்துக்காகவும் நகர பிரதேச அபிவிருத்தியை முடக்கும் கைங்கரியங்களில் ஈடுபட்டவர்களும் இனம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவது தற்கொலைக்கு ஒப்பாகும். இது பற்றியெல்லாம் புரிந்து கொள்ளாத நிலையில் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தைக் குறை சொல்வதையே நோக்கமாக கொண்டவர்களும் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்தின் கீழ் சில மாநகர, நகர, பிரதேச அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவே செய்கின்றன. முன்னைய கால ஆட்சியினர் காட்டாத அக்கறையை இந்த நல்லாட்சி ஓரளவில் தானும் காட்டி வகுவதை மறுப்பதற்கில்லை.

இதனை உரியமுறையில் பெற்றுக்கொள்ள சமூக உணர்வுடன் செயற்படக் கூடியவர்களையே தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்ய வேண்டும். எதிர்வரும் பிரதேச சபை தேர்தலிலிருந்தே இதற்கான அத்திவாரம் இடப்படுவது ஆரோக்கியமானதாக அமையும்.

இல்லாவிட்டால் அரசியலின் நுழைவாயிலாக கருதப்படும் பிரதேச சபைத் தேர்தல் மீண்டும் மலையக சமூகத்தை ஏமாளியாகவே நிற்க வைத்துவிடும். தம்மால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களே ஒப்பந்தக்காரர்களாக அவதாரம் கொண்டு அபிவிருத்தி நிதிகளை அள்ளி விழுங்கும் அவலம் நீக்கப்படுவது அவசியமாகும். மக்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் தமது வாக்குரிமையை பயன்படுத்த தயார்செய்ய வேண்டியது தற்போதைய நிலையில் மலையக புத்திஜீவிகளினதும் ஊடகங்களினதும் கடமையாக இருக்கிறது. 

பன். பாலா

Comments