கொக்காகோலா அனுசரணையில் பிபா உலகக்கிண்ணம் இலங்கையில் | தினகரன் வாரமஞ்சரி

கொக்காகோலா அனுசரணையில் பிபா உலகக்கிண்ணம் இலங்கையில்

உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக் கிண்ணம் எதிர்வரும் 23 ம்திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தினை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணத்தில் முதல் நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அதனை இலங்கையர் 1,500 பேருக்கு நேரடியாகப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.

21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறுகிற இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது.

இது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவதற்கான விசேட செய்தியாளர் சந்திப்பொன்று விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் கடந்த (18) இடம்பெற்றது.

கொக்கா கோலா நிறுவனத்தின் அனுசரணையோடு வெற்றிக் கிண்ணத்தின் இந்தப் பயணம் இலங்கையில் ஆரம்பித்து 54 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் கிலோ மீற்றர் கொண்ட குறித்த பயணத்தின் இறுதியில் அது உலகக் கிண்ணம் இடம்பெறும் நாடான ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கையளிக்கப்படும்.

இம்மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கிண்ணம் அன்றைய தினம் மாலை கொழும்பில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 2 மணிவரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கிண்ணம் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்த அறிய வாய்ப்பு எமது நாட்டிற்கு கிடைத்தமை மற்றும் அதன்போது இலங்கை தரப்பு மேற்கொள்ளவுள்ள விஷேட செயற்பாடுகள் குறித்து ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

உலகில் உள்ள சுமார் 1.5 மில்லியன் மக்களுக்கு பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமாக இருக்கும்.

'2030 இல் கால்பந்து இலக்கு' என்ற கருப்பொருளிலான எமது மூலோபாயத் திட்டம் ஒன்றையும் நாம் குறித்த நிகழ்வின்போது வெளியிடவுள்ளோம். எனவே, கால்பந்தை சிறந்த விளையாட்டாக கொண்டுவரும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் பயணத்திற்கு இது சிறந்த ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது. குறித்த பயணத்தினூடாக நாம் பாடசாலை, கழக மட்டம், தேசிய மட்டம் என அனைத்து வகைக் உதைபந்தாட்டத்தை வளர்ச்சி செய்வதற்காக முயற்சிக்கின்றோம்” என்றார்.

இச் செய்தியாளர் சந்திப்பில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

உலகில் பெறுமதி மிக்க கிண்ணம் இலங்கைக்கு முதல் முறையாக கொண்டுவருகின்றமை பெருமைமிக்க ஒரு வாய்ப்பாகும். இலங்கையின் கால்பந்தை அபிவிருத்தி செய்வதற்கு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், ரசிகர்கள் மற்றும் கால்பந்துடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது- என்றார்.

கொக்கா கோலா நிறுவனத்தின் தென்மேற்காசியாவின் செயற்பாடுகளுக்கான துணைத் தலைவர் தெபப்ரடா முகர்ஜீ கருத்து தெரிவிக்கையில்,

2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணத்தின் நான்காவது கட்டமாக இம்முறை கிண்ணம் இலங்கையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கின்றது அதனையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்நிகழ்வின் மூலம் இலங்கை உதைபந்தின் வளர்ச்சிக்கு எம்மால் முடியுமான முழு ஆதரவை வழங்கவும் எண்ணியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கால்பந்தின் வளர்ச்சிக்காக உரிய தரப்பினர் ஒரே இலக்குடன் சிறந்த முறையில் முயற்சிக்க வேண்டும். அந்த வளர்ச்சிக்காக கொக்கா கோலா நிறுவனம் என்றும் துணையாக இருக்கும் - என்றார்.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்,விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜயரத்ன, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, கொக்கா கோலா நிறுவனத்தின் தென்மேற்காசியாவின் செயற்பாடுகளுக்கான துணைத் தலைவர் தெபப்ரடா முகர்ஜீ,உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.