கடிதம் கிடைத்தவுடன் அதனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன் | தினகரன் வாரமஞ்சரி

கடிதம் கிடைத்தவுடன் அதனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன்

எனக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படும் நஷ்ட ஈட்டுக் கடிதம் கைகளுக்கு கிடைத்தவுடன் எனது சட்டத்தரணிகளூடாக அதனை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன் என த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று தெரிவித்தார்.

100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி சிவசக்தி ஆனந்தன் எம்.பிக்கு கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜாவின் சட்டத்தரணிகள் நேற்றுக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள விடயம் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

100 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கோரிய கடிதம் இதுவரை என் கைகளுக்கு கிடைக்கவில்லை. எனக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலமே நான் இன்று அறிந்து கொண்டேன். உத்தியோகபூர்வமாக

 

கடிதம் கிடைத்ததும் எனது சட்டத்தரணிகள் ஊடாக அதனை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பொய்யானதும். அவதூறு ஏற்படுத்தும் வகையில் தெரிவித்திருக்கும் கூற்றினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இழப்பீடாக 100 கோடி ரூபாவை நஷ்ட ஈடாக இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும், த.தே.கூட்டமைப்பு எம்.பியுமான மாவை சேனாதிராஜாவின் சட்டத்தரணிகள் சிவசக்தி ஆனந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கு 2 கோடி ரூபா கையூட்டு வழங்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கூற்றுத் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் சட்டநடவடிக்கை எடுப்பதற்காக சட்டத்தரணிகள் ஊடாக கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நீங்கள் எங்கள் கட்சிக்காரருக்கு எதிராக பொய்யானதும் அவதூறு ஏற்படுத்தும் கூற்றைத் தொடர்ந்தும் தெரிவித்துவருகின்றீர்கள். கடந்த டிசம்பர் 19ஆம் திகதியிலிருந்து அதன் பின்னரும் இவ்வாறு கூறியுள்ளீர்கள். எங்கள் கட்சிக்காரரும் அவருடன் வேறுசில பாராளுமன்ற உறுப்பினர்களும், தலா 20 மில்லியன் ரூபாவை 2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அரசிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.

எங்கள் கட்சிக்காரரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக மறுத்துள்ளனர். அதன் பின்னரும் நீங்கள் இதனைத் தொடர்ந்து கூறிவருகின்றீர்கள். எங்கள் கட்சிக்காரர் சொல்பவற்றை நீங்கள் கவனத்தில் எடுக்காமல், இந்தக் கூற்று பொய்யானது என்று தெரிந்து கொண்டும், குரோதம் காரணமாக இதனைத் தெரிவித்து வருகின்றீர்கள்.

எங்கள் கட்சிக்காரர் சமூகத்தில் மிகப்பெரும் மதிப்பில் உள்ளவர். அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். அவரின் சேவை காரணமாக பல தேர்தல்களில் வெற்றியீட்டியுள்ளார்.

உங்களுடைய பொய்யானதும் அவதூறு பரப்பும் கூற்றுகளால் பொதுமக்கள் முன்னிலையில் அவரது மதிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் நீங்கள் கூறும் பொய்யானதும் அவதூறு பரப்பும் கூற்று அவரைப் பெரிதும் பாதித்துள்ளது.

உங்களின் போலியான குற்றச்சாட்டுகளால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அவமானம் மிகப் பெரியதாயினும், எங்கள் கட்சிக்காரர் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பையும் இழப்பையும் ஈடுசெய்வதற்காக ஒரு பில்லியன் ரூபாவை உங்களிடமிருந்து கோருகின்றார்.

உங்களிடமிருந்து இந்தத் தொகையை இழப்பீடாக எங்கள் கட்சிக்காரருக்கு, கடிதம் கிடைத்து இரண்டு வாரங்களுக்குள் கொடுக்கும்படி தெரிவிக்கின்றோம்.

குறித்த கால எல்லைக்குள் நீங்கள் கொடுக்காமல் தாமதமாக்கும் பட்சத்தில் அந்தத் தொகையை வட்டியுடன் பெறவேண்டியிருக்கும் என்பதையும் அறியத் தருகின்றோம்'' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி தேர்தல்கள் ஆணையாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Comments