இனங்களுக்கு சவாலாக விளங்கும் கல்முனை மாநகர சபை தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

இனங்களுக்கு சவாலாக விளங்கும் கல்முனை மாநகர சபை தேர்தல்

வை. சுந்தரராஜா,   
கல்முனை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளுள் கல்முனை மாநகர சபையானது சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில் கல்முனை மாநகரானது மிகப் பழைமையான புராதன நகரங்களில் ஒன்றாகக் காணப்படுவதுடன் கல்வி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து விடயங்களுக்கான கேந்திர நிலையமாகவும் விளங்குகின்றது. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களும் இப்பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றனர்.

முன்னைய காலங்களில் கிராம சபையாகவும், பட்டின சபையாகவும், நகர சபையாகவும் விளங்கிய கல்முனை 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்டத்திற்கு இணங்க மாநகர சபையாக மாற்றப்பட்டது. முன்பு கல்முனையானது தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதும், நகரப் பகுதியை உள்ளடக்கியதுமான உள்ளூராட்சி சபையாகவே காணப்பட்டது. பின்னர் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக கல்முனைக்குடி பிரதேசங்களும் இதனுடன் இணைக்கப்பட்டன. மிக மிகக் குறைந்தளவில் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர்.

இலங்கையில் புதிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எளிய பெரும்பான்மை முறையும், விகிதாசார முறையும் கலந்த கலப்புத் தேர்தல் முறையிலேயே நடைபெறவுள்ளது. இதற்கிணங்க, இங்கு 24 பேர் வட்டார முறையிலும், 16 பேர் விகிதாசார பட்டியலினூடாகவுமாக மொத்தம் 40 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். கல்முனை மாநகர சபையானது தற்போது 23 தேர்தல் வட்டாரங்களாகப் பிரிக்கப்படடுள்ளது. அதில் 22 வட்டாரங்கள் தனியங்கத்துவ வட்டாரங்களாகவும், ஒரு வட்டாரம் (12 ஆம் வட்டாரம்) இரட்டை அங்கத்துவ வட்டாரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் பின்வருமாறு,

1 ஆம் வட்டாரம்

பெரிய நீலாவணை 01, 01ஏ, 01பி, 02இல் ஒரு பகுதி

வாக்காளர் தொகை – 3,567

2 ஆம் வட்டாரம்

பெரிய நீலாவணை 02இல் ஒரு பகுதி, பெரிய நீலாவணை 01(முஸ்லிம் பிரிவு)

வாக்காளர் தொகை – 2,946

3 ஆம் வட்டாரம்

மருதமுனை 01, 02. பெரிய நீலாவணை 02(முஸ்லிம் பிரிவு)

4 ஆம் வட்டாரம்

மருதமுனை 03, 04

வாக்காளர் தொகை – 4,173

5 ஆம் வட்டாரம்

மருதமுனை 05, 06

வாக்காளர் தொகை – 3,312

6 ஆம் வட்டாரம்

பாண்டிருப்பு 01, 01ஏ, 01பி, 01சி

வாக்காளர் தொகை – 2,429

7 ஆம் வட்டாரம்

நற்பிட்டிமுனை (முஸ்லிம் பிரிவுகள்) 01, 02, 03, 04, 05

வாக்காளர் தொகை – 3,635

8 ஆம் வட்டாரம்

சேனைக்குடியிருப்பு 01, 01ஏ, 01பி

வாக்காளர் தொகை – 2,561

9 ஆம் வட்டாரம்

நற்பிட்டிமுனை (தமிழ்ப் பிரிவுகள்) 01, 02, 03

வாக்காளர் தொகை – 2,512

10 ஆம் வட்டாரம்

பாண்டிருப்பு 02, 02ஏ, 02பி, 02சி

வாக்காளர் தொகை – 3,299

11 ஆம் வட்டாரம்

கல்முனை 01, 01ஏ, 01டி

வாக்காளர் தொகை – 1,981

12 ஆம் வட்டாரம் (இரட்டை அங்கத்தவர் வட்டாரம்)

கல்முனை 02, 02ஏ, 02பி, 01பி, 01சி, 01ஈ (தமிழ்ப் பிரிவுகள்), 01(முஸ்லிம் பிரிவு)

கல்முனை 03, 03ஏ (தமிழ்ப் பிரிவுகள்) 03 (முஸ்லிம் பிரிவு), கல்முனைக்குடி 01

வாக்காளர் தொகை – 8,725 (தமிழ் வாக்காளர்- 4,517, முஸ்லிம் வாக்காளர் -4,208)

13 ஆம் வட்டாரம்

கல்முனைக்குடி 02, 03, 04

வாக்காளர் தொகை – 2,656

14 ஆம் வட்டாரம்

கல்முனைக்குடி 05, 06, 07

வாக்காளர் தொகை – 3,397

15 ஆம் வட்டாரம்

கல்முனைக்குடி 08, 09

வாக்காளர் தொகை – 2,986

16 ஆம் வட்டாரம்

கல்முனைக்குடி 10, 11, 12

வாக்காளர் தொகை – 2,528

17 ஆம் வட்டாரம்

கல்முனைக்குடி 13, 14

வாக்காளர் தொகை – 2,680

18 ஆம் வட்டாரம்

சாய்ந்தமருது 01, 03

வாக்காளர் தொகை – 2,893

19 ஆம் வட்டாரம்

சாய்ந்தமருது 02, 04, 05

வாக்காளர் தொகை –3,037

20 ஆம் வட்டாரம்

சாய்ந்தமருது 08, 10, 12

வாக்காளர் தொகை – 2,891

21 ஆம் வட்டாரம்

சாய்ந்தமருது 05, 07, 09

வாக்காளர் தொகை – 3,835

22 ஆம் வட்டாரம்

சாய்ந்தமருது 11, 13, 15

வாக்காளர் தொகை – 3,248

23 ஆம் வட்டாரம்

சாய்ந்தமருது 14, 16, 17

வாக்காளர் தொகை – 3,402

இதன்படி, இம்மாநகர சபை எல்லைக்குள் வாழும் மொத்த வாக்காளர் தொகை 74,944 ஆகும். இவ்வாக்குகளை இன ரீதியில் நோக்கினால் இங்கு 54,078 முஸ்லிம் வாக்காளர்களும், 20,666 தமிழ் வாக்காளர்களும் உள்ளனர்.

சுமார் 200 அளவில் சிங்கள வாக்காளர்களும் உள்ளனர். சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு தனிப் பிரதேச சபை கேட்டு அது கிடைக்காமையால் சுயேச்சைக் குழுவில் போட்டியிடுகின்றனர். முஸ்லிம் வாக்குகளுக்குள் அவர்களின் வாக்குகள் 19,306 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், நான்கு சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 559 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் இங்குதான் போட்டியிடுகின்றனர். புதிய தேர்தல் சட்டத்திற்கிணங்க ஒவ்வொரு கட்சியில் இருந்தும், சுயேச்சைக் குழுக்களில் இருந்தும் தனித்தனியே 13 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தெரிவு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களில் 25 வீதம் பெண்களாக இருக்க வேண்டும். எனவே இம் மாநகர சபையில் 10 பெண்கள் கட்டாயம் இடம்பெறவுள்ளனர். இங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகள் வருமாறு,

1) ஐக்கிய தேசியக் கட்சி, 2) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 3) இலங்கை தமிழரசுக் கட்சி, 4) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 5) தேசிய காங்கிரஸ், 6) தமிழர் விடுதலைக் கூட்டணி, 7) மக்கள் விடுதலை முன்னணி, 8) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, 9) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

கல்முனையின் தேர்தல் கள நிலவரங்களைப் பார்த்தால் 12 ஆம் வட்டாரம் இரு இனங்களுக்கும் சவால் மிக்கதாக விளங்குகின்றது. ஏனெனில் இது இரட்டை அங்கத்தவர் கொண்ட கிட்டத்தட்ட இரு இன வாக்காளர்களும் சரி சமமாக வாழும் பிரதேசமாகக் காணப்படுகின்றது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி ஒரு வாக்காலே ஆயினும் வெல்லும் கட்சிக்கே இரு உறுப்புரிமையும் வழங்கப்படவுள்ளது. இது இத் தேர்தல் முறையின் மிகப் பாரிய குறைபாடாகவுள்ளது. எப்படியோ ஒரு இனம் இதனால் பாதிக்கப்படுவது உறுதி.

உண்மையில், இதுவும் அரசியல் வாதிகளின் தூண்டுதலால் தான் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மேலுள்ள 12 ஆம் வட்டார பிரிப்பில் அதில் சேர்க்கப்பட்டுள்ள கல்முனைக்குடி 01 உம், 03இல் முஸ்லிம் பிரிவும் கொண்ட வாக்காளர் தொகை ஒரு தனி வட்டாரத்திற்குப் போதுமானதாகும். ஏனைய பகுதிகள் ஒரு தனி தமிழ் வட்டாரத்திற்குப் போதுமாகும். நிலத் தொடர் அடிப்படையிலும் இதுவே சரியானது. ஆனால், அரசியல்வாதிகள் திட்டமிட்டு அரசாங்கத்தினூடாக 12ஆம் வட்டாரத்தை இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகச் செய்துள்ளனர். தமிழ்த் தலைமைகளும் இதில் அக்கறை கொள்ளவில்லை. இதனால் இவ் வட்டாரத்தில் ஒரு இனம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

அடுத்த விடயம் இம்மாநகர சபையில் ஆட்சியமைக்க ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு 20 ஆசனங்களுக்கு மேல் பெற வேண்டும். ஆனால் கள நிலவரங்களின்படி எந்தக் அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ அவ்வாறு பெறக் கூடிய நிலையில் இல்லை. ஒன்று ஒரு முஸ்லிம் கட்சியுடன் ஒரு தமிழ்க் கட்சி சேர வேண்டும். அல்லது சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் கட்சியுடன் இணைய வேண்டும். சிலவேளை இரண்டு கட்சிகள் அல்லது கட்சியுடன் சுயேச்சைக் குழு இணைந்தாலும் 20 ஆசனங்களுக்கு மேல் பெற முடியாது போகலாம். எனவே இம்முறை கல்முனை மாநகர சபைத் தேர்தல் முடிவுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கப் போவது என்னவோ உண்மைதான். அத்துடன் சாய்ந்தமருது மக்களும் தங்களது பலத்தை இத் தேர்தலில் நிரூபிக்கத்தான் போகின்றார்கள். அதாவது கல்முனை முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு அவர்கள் பாடம் புகட்டப் போகின்றார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் இத் தேர்தல் முறையினால் இங்கு தமிழர்களும் ஆட்சியமைக்கும் சக்தியாகத் திகழ வாய்ப்பு ஏற்படலாம்.

இத் தேர்தலில் வாக்காளர்கள் குறிப்பாக தமிழ் வாக்காளர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில் கடந்த கால உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ் வாக்காளர்கள் இங்கு வாக்களித்த வீதம் மிகக் குறைவாகும். மேலும் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பது தமிழ் வாக்காளர்கள்தான். இச் செயற்பாடுகளினால் இன விகிதாசாரப்படி தமிழர்கள் பெற வேண்டிய உறுப்புரிமையையும் கூட இழந்த வரலாறுகள் தான் உள்ளன. இதனால் தமிழர் வாழும் பகுதிகள் அபிவிருத்தியில் மிகவும் புறக்கணிக்கப்பட்டன என்ற விமர்சனமும் உள்ளது.

எனவே, முதலில் அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். பரவலான முறையில் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பது நல்லதல்ல. அப்போதுதான் கல்முனையில் தமிழர்கள் தங்களது பலத்தைக் காட்ட முடியும். 

Comments