அளுத்கம சம்பவத்தின் உண்மை இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை | தினகரன் வாரமஞ்சரி

அளுத்கம சம்பவத்தின் உண்மை இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை

நேர்காணல்:

ஹெட்டி ரம்ஸி

2015 ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சி பீடத்திற்கு எதிராக இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்கள். அந்த ஆட்சிபீடத்திற்கு விசுவாசமாக இருந்த பெரும்பாலான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நல்லாட்சி அரசின் பக்கம் தாவியுள்ள நிலையில் தொடர்ந்தும் நீங்கள் மஹிந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து வருவதற்கான காரணம் என்ன?

இலங்கையில் மிக நீண்ட காலம் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவரே மஹிந்த ராஜபக்ஷ. யுத்தம் நிலவிய காலப்பகுதியிலும் கூட நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடையவில்லை. பெரும்பாலான முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டது. தொழில்வாய்ப்புகள் பெருகின. போருக்கு பிந்திய சூழலில் கூடுதலான முதலீட்டாளர்கள் இலங்கை வந்தார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழேயே முஸ்லிம்களுக்கு கூடுதலான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. கிழக்கு மாகாணம் மற்றும் அகில இலங்கை ரீதியில் இதன் மூலம் பாரிய பிரயோசனங்களை பெற முடிந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் மூலம் மக்களுக்கு கிடைத்தவற்றை திரும்பவும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலேயே நான் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றேன்.

2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவமே ராஜபக்ஷ ஆட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. சில சர்வதேச சக்திகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சியே அளுத்கம கலவரம். மஹிந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச சக்திகளால் மிக சூசகமான முறையில் இந்தச் சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. காலம்கடந்த நிலையிலேயே இந்த விடயம் தற்பொழுது மக்களுக்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே எமது சமூகத்தின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இணைந்து நல்லாட்சியை உருவாக்கினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் உருண்டோடியும் அந்தச் சம்பவத்திற்கான தீர்வு காணப்படவில்லை. அளுத்கமவில் என்ன நடந்தது என்கின்ற உண்மையான விடயம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன் கிந்தோட்டை கலவரத்திற்கும் இதுவரையில் எந்த விதமான தெளிவும் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இது போன்ற விடயங்களுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ‘முஸ்லிம் முற்போக்கு முன்னணி’ என்றதொரு கட்சி உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா?

முஸ்லிம் முற்போக்கு முன்னணி மாத்திரமல்ல. மலையக முற்போக்கு முன்னணி என்றதொரு கட்சியும் உருவாக்கப்பட்டது. இவ்விரண்டு கட்சிகளும் பொதுஜன பெரமுன கட்சியின் யாப்பிற்குள் உட்புகுத்தப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய புதிய அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவின் யாப்பிற்குள் இந்த இரண்டு கட்சிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர் முஸ்லிம்களுக்கு ஒரு தனியான இடத்தை வழங்கியுள்ளார் என்பதே அர்த்தம். எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் முற்போக்கு முன்னணி அகில இலங்கை ரீதியில் உள்ள முஸ்லிம்களை ஒன்றிணைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் சிறந்ததொரு பயணத்தை தொடரும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கூடுதலான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என்ற நம்பிம்கை உங்களுக்கு உள்ளதா?

பொதுஜன பெரமுன இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டில் 90 வீதமான பகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை எமது கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. தற்பொழுது நாடு தழுவிய ரீதியில் பிரச்சார பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று எமது கட்சியை சூழ பெருந்திரளான மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பொதுஜன பெரமுன இணைந்து செயற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து சற்று குறிப்பிட முடியுமா?

இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 90 வீதமானவர்கள் இம்முறை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். அதேவேளை மஹிந்த அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 90 வீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு தயாரில்லாமல் இருந்தார்கள். இந்த விடயம் இவ்வாறு இழுபறியில் காணப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலும் நெருங்கியதால் இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அநேகமாக இரு கட்சிகளுக்குள்ளாலும் காரசாரமான விவாதங்கள் இடம்பெறும். சுமுகமானதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகளும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இந்த நிலையில் பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு இது சவாலாக அமையும் என நீங்கள் கருதவில்லையா?

குறிப்பாக கிழக்கில், இதுவொரு சவாலான கட்டம் தான். என்றாலும், இந்த ஆட்சிபீடத்தில் அதிருப்தியுற்றுள்ள பெரும்பாலான மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளார்கள். கிழக்கில் நாம் கூடுதலான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இன்று நாட்டில் வெகுளியான பேச்சுக்களையே பேசி வருகின்றனர். கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மாற்றி நல்லாட்சி அரசாங்கத்தை தாபிப்பதற்கு போராடிய முஸ்லிம் அமைச்சர்கள் இன்று மெளனித்துக்கிடக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியால் முஸ்லிம் சமூகத்திற்கு கூடுதலான பாதிப்புக்கள், அநீதிகள் ஏற்பட்டிருப்பதாக கூறி அவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும், சமூகத்திற்கு விடிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவர்கள் நல்லாட்சியின் பக்கம் தாவினார்கள். ஆனால் இன்னும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாதொரு சூழலே காணப்படுகிறது. முஸ்லிம்களின் வாழ்வாதாரம் முன்புபோல் இல்லை. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அளுத்கம விவகாரத்தை முன்னிலைப்படுத்தியே பேசினார்கள். 

Comments