ஓடும் வேகத்தில் நாம் உண்மைகளை தொலைக்கிறோமோ? | தினகரன் வாரமஞ்சரி

ஓடும் வேகத்தில் நாம் உண்மைகளை தொலைக்கிறோமோ?

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு, எனது அயலிலிருந்து ஒருவர் திருமணமாகி தொலையூருக்கு சென்றிருந்தவர் திரும்பவும் எமது ஊருக்கு வந்திருந்தார். எனது பாட்டனார் அவரை வரவேற்று,

எப்பிடி சுகமா இருக்கிறியே? என்று கேட்டவர், அடுத்த கேள்வியாக, பிள்ளைகுட்டியள் என்னமாதிரி எத்தினை மக்கள்? என்று கேட்டார். வந்தவர்,

நாலு பிள்ளையள் ரெண்டு பெடியள் இப்பவும் மனிசி ஆறுமாசம் என்றார்.

'கெட்டிக்காரன் முடிச்சு இப்ப ஆறு வரியம் இருக்குமே' என்று விசாரித்து மகிழ்ந்தார்.

அந்தக்காலத்தில் பிள்ளைகள் பெருகி இருப்பது குடும்பத்துக்கு வருமானத்தை பெருக்கித்தரும். பாலன் பஞ்சம் பத்து வருசம் என்பதன் அடிப்படையே அதுதான். பாலன் பத்து வயதானதும் தந்தையோடு மாடு சாய்க்கப் புறப்பட்டு விடுவான். ஓவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு விதமான குசல விசாரிப்புகள் உண்டு.

நாங்கள் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து போகும்போது நீண்டநாட்கள் காணாத நண்பர்களைக் காண நேர்ந்தால். முதல்கேள்வி

எவ்விடத்தில் இருக்கிறியள்? அடுத்த கேள்வி அங்காலுப்பக்கம் செல்லடி என்னமாதிரி? பதிலும் இடக்காகவே வரும்.

நாங்கள் உண்டியல் பிள்ளையார் கோவிலடி

அங்கால பரவாயில்ல கடலாலயும் அடிக்கிறான். முல்லைத்தீவுக்காலயும் அடிக்கிறான். ஆனந்தபுரத்துக்காலயும் வருது. மும்முனைத்தாக்குதல் பங்கருக்கைதான் வாழ்க்கை. அப்படியான விசாரணைகள் காலம்போகப்போக மாறி இப்போது,

என்னவாம் சொல்லுறாங்கள், பிள்ளையள விடுறாங்களாமோ என்றளவில் மாறிவிட்டது. இடப்பெயர்வின் போது நடந்த நல்லவைகளை யாரும் பேசவில்லை.

எமக்குள் அண்ணன் தம்பி, அக்கா, தங்கை என்றும் மாமன், மச்சான், சித்தப்பன் பெரியப்பன் என்றும் தாத்தா பாட்டி என்றும் உறவுகள் நிரம்பியிருந்தாலும், திருமணம், தொழில் போன்ற காரணங்களால். அநேகமானோர் பிரிந்து வெவ்வேறிடங்களில் வசிப்பர். ஒரு நன்மை தீமை நடக்கும்போது ஊரூராகச் சென்று அழைப்பு விட்டு உறவினர்கள் ஒன்றுகூடி கூடிச்சமைத்து பழங் கதைகள் பேசி பாசம் காட்டி. மகிழ்ச்சியாகப் பொழுதைக்கழிப்பர். ஓவ்வொருவராகப் பிரியும்போது கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு பரிசளித்து தமது ஊரில் இல்லாதவற்றை இந்த ஊரிலிருந்து கட்டி எடுத்துப்போவார்கள். என்ன செலவானாலும் அவர்கள் போனபின் அந்த வீட்டை ஒரு வெறுமை சூழும்.

இதே உறவுகள் சொத்துத் தகராறு பெண் எடுத்தல் கொடுத்தல் போன்ற பிரச்சினைகளையிட்டு நேருக்கு நேர் நீதிமன்றப் படியேறி வழக்கு கணக்கென்றும் அலைவர். தாய் தந்தையர் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி அநேக வழக்குகளில் எதிரெதிராக நின்ற சகோதரர்களும் மாமன் மச்சான் உறவுகளும், ஆச்சரியப்படும்படியாக இந்த பெரும் போரின்போது ஒரே இடத்தில் சேர்ந்து குடில்களை அமைத்து வாழ்ந்ததையும், ஒவ்வொரு இடம் மாறும்போதும், ஒருவருக்கொருவர்உதவியாக பொருட்களை மாறி மாறி சுமந்ததையும் கண்டோம்.

இதைத்தான் பெரியவர்கள் முற்காலத்தில் பழமொழியாக சொல்லி வைத்தார்கள் நீரடித்து நீர் விலகாது என்று. உறவுகள் எவ்வளவு இனிமையானவையோ அவ்வளவு பெருமையானவையும்தான்.

பாரதத்தில் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையும், பாசப்பிணைப்பும், உறவுகளின் பெருமையும் பேசப்பட்டபோதும் அதன் பின்னணியில் நடந்த பெரும் யுத்தத்தில் உறவுகள் ஒன்றையொன்று அழித்தபோதும், அந்தக்கதையில் நடந்த பாச உரையாடல்களை யார் மறக்கமுடியும்.

இராமாயணத்திலும் ராம லட்சுமணன் பரதன் ஆகியோரது ஒற்றுமையும் பாசமும், வாலி சுக்ரீவன் ஆகியோரின் பகையும், இராவணனின் தம்பியர் அறமற்ற போர் எனக்கண்டும், அண்ணனுக்காக உயிர்விட்டமையும் கதையாக இருந்தாலும் நமது வாழ்க்கையில், எமது அயலில் இப்படியான எத்தனை சகோதரர்களைக் காண்கிறோம்.

எவ்வளவுதான் பகை இருந்தாலும் ஒருவர் சாவடையும்போது, அவருடைய கட்டிலைச்சுற்றி எத்தனை உறவினர்கள் நிற்கிறார்கள் என்பதை ஊரே கவனிக்கும். யாழ்ப்பாணத்திலயிருந்து மாமி, கொழும்பில இருந்து வந்த பெரியப்பா கிளிநொச்சியால தங்கச்சி என்பதைவிட அவர்களது பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் என குவிந்து விடுவார்கள். சாவிலும் அதுதரும் மகிழ்ச்சி இருக்கிறதே அது அற்புதம்.

காலம் மாறிவருகிறது இப்போது அநேகமான வீடுகளில் ஓரே பிள்ளைதான். பெற்றவர்கள் எவ்வளவுதான் வசதியானவர்களாக இருந்தாலும் இன்னொரு பிள்ளையை மறுத்துவிடுகிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு அண்ணன். தம்பி அக்கா தங்கை என்பதெல்லாம் படிக்கும் பாடப் புத்தகத்தில்தான். இன்றைய தமிழ்க் குழந்தைகள் அநேகருக்கு தந்தை என்றாலும் பாடப்புத்தகத்தில்தான். இப்போது ஒற்றைக் குழந்தைகள் பெற்றோரின் முழு வளங்களையும் அனுபவித்து வாழலாம் ஆனால் பெற்றோரின் இறப்புக்குப் பின், உறவுகளின்றி தனித்து வாழப்போகும்போது அவர்கள் தமது வெறுமையை உணரவே செய்வார்கள்.

குமர குருபரரின் வரலாற்றில் ஒரு கதை உண்டு. ஒரு அரசன். தனது அவைக்கு வந்த ஒரு புலவனை எதிர்த்து வாதாட அறிவாளிகளை தேடினான் வந்தவனோ பெரும் பெயர் பெற்ற அறிஞன். அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை எனவே அவன் பகிரங்கமாக அறிவித்து அறிஞனைத்தேட அங்கே குமர குருபரர் வந்தார். அவரது கேள்வி இதுதான் பிள்ளை பெற்றும் மலடி யார்? அரசன் புண்ணியனா பாவவாளியா? கண்ணிருந்தும் குருடன் யார்? அந்த அறிஞன் பதிலளிக்கத் திணறியபோது குருபரர் சொன்னார் அரசனின் தாய் மலடி. அரசன் பாவவாளி, நீயே கண்ணிருந்தும் குருடன் என்றார். அரசன் அதற்கு விளக்கம் கேட்டான்.

இவற்றுக்கான விடைகளில் அரசனுடைய தாயார் மலடி என்று நிறுவினார் அவர். ஒருமரம் தோப்பாகாது. எனவே ஒரு பிள்ளையாக அரசனைப் பெற்றவள் பிள்ளை குட்டிகாரியல்ல மலடிதான். நாட்டு மக்கள் செய்யும் குற்றங்களுக்கு அரசனே காரணமாவான் எனவே அரசனுக்கு மக்களின் பாவச் சுமை சேர்வதால் அவன் பாவவாளியாவான். பெற்றவர்களைப் பேணாத அறிஞன் கண்ணிருந்தும் குருடனாவான் ஏன்று முடித்தார். ஆக ஒரு பிள்ளையை மட்டும் பெற்றவர்கள் தம்மால் இயன்றும் அந்தப்பிள்ளையை அநாதையாக்கி விடுகின்றனர்.

ஏதோ உலக சனத்தொகையை குறைப்பதில் தாம் பெரும் பங்காற்றுவதாக பெருமை பேசுவார்கள். எங்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தது என்று எதிர் வீட்டுக்குழந்தை சொல்லும்போது, அதை தொட்டுப் பார்க்கவும் துாக்கி கொஞ்சவுமாக திரியும் அந்தக்குழந்தையை பார்க்கும்போது ஒரே குழந்தையாக வளரும் பிள்ளைகள் ஏக்கமடைவதை மறுக்க முடியாது.

தமிழ்க் கவி
பேசுகின்றார்

சனத்தொகை என்பதை பொதுவாக நோக்காது ஒரு இனத்தின் குடிப்பரம்பலை கணக்கெடுப்பதில் தவறிழைக்கிறோம் என்பது பலருக்கு தெரிவதில்லை. பலநாடுகளின் குடித்தொகையின்மீது குடும்பக்கட்டுப்பாடு மட்டுமே தாக்கம் செலுத்துகிறது. ஆனால் எமது குடிசனத் தொகையின் வீழ்ச்சிக்கு குடியகல்வே பெருங்காரணியாக உள்ளது. நாம் நமது பிள்ளைகளை நேசிப்பது உண்மையானால் அதற்கு கைகோர்த்து நடக்க ஒரு துணையை கொடுக்கவே வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். மனிதர்களோ விலங்குகளோ துணையின்றி தனித்து வாழ்வது கொடுமை. பணமும் அதுதரும் வசதிகளும் பாசத்தை வழங்காது கூடிவாழும் வாழ்க்கையை தராது. ஒரு மகிழ்ச்சியான தருணத்தையும் துக்கமான தருணத்தையும் நண்பர்களுடன் சமாளித்து விடலாம்தான் ஆனால் உரித்து என்பது உறவினர்களுக்கு மட்டுமே உண்டு.

அதனால்தான் திருமண அழைப்புகளில் சுற்றம்சூழ வந்திருந்து வாழ்த்துங்கள் என்றோ, குடும்பத்தினர் சகிதமாக என்றோ குறிப்பிடுகிறார்கள். இதைவிட நாம் தமிழ்நாட்டில் காணும் அறிவிப்புகளில் மாமன்மார்கள் சகோதரர்கள் என்று ஒரு பட்டியலையே போட்டு பெருமை யடைவார்கள். ஆனால் நாங்கள் எமது கலாச்சாரங்களை மட்டுமல்ல. எமது வாழ்க்கையின் அர்த்தங்களையே தொலைத்து வருகிறோம். அவசரமான வாழ்க்கை. அவசரமாக ஓடும் நாட்கள். ஓடும் வேகத்தில் நாம் உண்மைகளை தொலைக்கிறோமோ?

Comments